திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள பொதிகை மலையின் உச்சியிலிருந்து கொட்டுகின்ற அருவியாக திகழ்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 1725 மீட்டர் உயரத்தில் தாமிரபரணி நதி அமைந்திருக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் தாமிரபரணி நதி இருக்கிறது. இந்த நதியானது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக பாய்வதால் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நீர் வளம் மிக்க ஒரு இடமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாகவும் இது புகழ்பெற்று விளங்குகிறது.
வராகமிகிரர் என்பவர் 505 - 587ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர். இவர் கூட தாமிரபரணி பற்றி குறிப்பிடுகிறார். அத்தனை பழம்பெரும் வாய்ந்த நதி தாமிரபரணி. தாமிரம் என்றால் செம்பு அதாவது தாமிரம் கலந்த பரணி நதி தாமிரபரணி நதியானது. தாமிரச் சத்து நோய் தீர்க்கும் அரிய மருந்து. இந்த ஆற்றின் கரையில் தாமிரச்சத்து நிறைந்து காணப்படுகிறது. தாமிரம் நிறைந்த ஆறு தாமிரபரணி என அழைக்கப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலாயத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருமண வைபவத்தைக் காண்பதற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் கயிலாயத்திற்கு வருகை புரிகின்றனர். அதிகமானோர் கயிலாயத்தில் குவிந்ததால் உலகின் வடதிசை பகுதி தாழ்ந்து தென் திசை பகுதி உயர்கின்றது. உலகத்தை சமநிலையில் கொண்டு வருவதற்காக சிவபெருமான் கூறியதை ஏற்று அகத்தியர் தெற்கு திசை நோக்கிப் புறப்படுகிறார். புறப்படும் வேளையில் பார்வதி தேவி தம்முடைய முத்து ஆரத்தை அகத்தியரிடம் அளிக்க, அதனை கமண்டலத்தில் ஏந்தியவாறு தெற்கு திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் அகத்தியர்.
ஈஸ்வரர் இருக்கும் கயிலாய மலையில் விட்டு அகத்தியர் இறங்கியதும் முத்துமாலை ஒரு பெண்ணாக உருமாறி அகத்தியரை வணங்கி நின்றது. அந்த நேரம் அனைத்து தேவர்களும் மலர்மாரி பொழிந்து தம்முடைய மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். தாமிர வர்ணம் கொண்டு அந்த மலர்கள் திகழ்ந்ததால் தாமிரபரணி என்று பெயர் பெற்றது. ‘சிவபெருமான் அந்தப் பெண்ணை நதியாக மாற்றி உரிய நேரம் வந்ததும் உலகத்திற்கு வந்து மேன்மையை தருவாள்’ என்று கூற, அகத்தியரும் அந்த நீரை கமண்டலத்தில் எடுத்துக்கொண்டு தென் திசைக்கு புறப்படுகின்றார். தென் திசையில் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார் அங்கே சிவபெருமானின் கல்யாண கோலத்தை தரிசித்து பெரும் பாக்கியத்தையும் பெறுகிறார்.
அந்த மகிழ்ச்சியோடு குப்தசிருங்கம் எனும் பெயர் பெற்ற கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் தம்முடைய கமண்டலத்தில் இருந்த தாமிரபரணி நீரினை ஓட விடுகிறார். இப்படித்தான் தாமிரபரணி நதி உருவாகி பல இடங்களில் தவழ்ந்து, பல கிளைகளாகப் பிரிந்து மீண்டும் சங்கமிக்கும் மிக அழகிய நதியாக புகழ்பெற்று விளங்குகிறது என்கிறது வரலாறு. தமிழ்நாட்டிலேயே உருவாகி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி.