‘அசால்ட்’ என்பதன் அர்த்தம் தெரியுமா?

Assault
Assault
Published on

ற்போது தாய்மொழி தமிழை பேசுவதிலும் எழுதுவதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. மொழி கலப்பு என்ற நடைமுறையினால் பண்டைய கால தமிழில் இல்லாத பல சொற்கள் புதுமையான நவீன மாற்றம் கண்டு நம் உரையாடல்களில் இடம் பெறுகிறது. தமிழிலும் வட்டார வழக்கு என்பது அந்தந்த ஊர்கள் அல்லது பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடுவது வழக்கமான ஒன்றே. ஆனால், சில வார்த்தைகள் அனைத்து தமிழ் பேசும் மக்களிடம் அதிகமாக புழங்குவது சகஜமாக உள்ளது. அதில் ஒன்றுதான், ‘அசால்ட்’ என்ற வார்த்தை.

‘அசால்ட்’ என்பதை பல சூழல்களில், பல அர்த்தங்களில் நாம்  பேசி வருகிறோம். ‘அவனுக்கு என்ன அசால்டாக பத்து பேரை அடிப்பான்’ இது அதிரடியைக் குறிக்கிறது.

‘அந்த அதிகாரி அசால்டாக அனைவரையும் கையாள்வார்’ இது திறமையைக் குறிக்கிறது.

‘அந்தப் பொண்ணு அசால்டா நிமிஷத்துல ஓவியத்தை வரைஞ்சு முடிச்சிடுவா’ இது துரிதத்தைக்  குறிக்கிறது.

‘என் பொண்ணு படிக்கிறதுல ரொம்ப அசால்ட்டா இருக்கா’ என்பது கவனக்குறைவைக் குறிக்கிறது.

இவை அனைத்தையும் கவனித்துப் பார்த்தால், ‘திறமை’ எனும் பொதுவான ஒன்றாகத்தான் இருக்கிறது. (கவனக்குறைவின் அடிப்படையும் திறமையே) ஆக, அசால்ட் என்பதற்கு தமிழில் திறமை என அர்த்தம் கொள்ளலாமா?

‘அசால்ட்’ என்பது எந்த மொழியிலிருந்து தமிழில் திரிந்தது தெரியுமா? சாட்சாத் ஆங்கிலத்திலிருந்துதான். ஆம், ஆங்கிலத்தில் ‘Assault’ என்றால் தாக்குதல் தொடர்பான சொல். அதாவது, ஒருவரைக் கடுமையாக தாக்குவது, உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் அச்சுறுத்துவது போன்ற வன்முறை செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Assault என்ற ஆங்கிலச் சொல்லிற்கும் தமிழில் புழங்கப்படும் 'அசால்ட்'க்கும் நிச்சயமாக எந்தத் தொடர்புமில்லை எனலாம். தமிழில் கூறப்படும் அசால்ட், ஒருவர் / ஒன்றின் மீது மிகக் குறைந்த கவனம் அல்லது அக்கறை செலுத்துவதைக் குறிக்கும் என்று வேண்டுமானால் அர்த்தம் கொள்ளலாம். காரணம் அசால்ட் என்ற சொல் பெரும்பாலும் கவனக்குறைவுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதால்.

இதையும் படியுங்கள்:
உத்தராயணம், தட்சிணாயனம் என்றால் என்னவென்று தெரியுமா?
Assault

இன்னும் ஒரு பார்வையில் தற்காலத்தில் ஆங்கிலத்தின் மீதுள்ள மோகத்தால் பல ஆங்கிலச் சொற்கள் தமிழுக்கு மாற்றாக ஆகி, உண்மையான தமிழ்ச் சொல்லை மறந்தது போல இதுவும் ஆகியிருக்கலாம். ஆங்கில Assault ன் பாதிப்பினால் சாமான்ய மக்களின் தவறான புரிதல் காரணமாகத் திரிக்கப்பட்ட தமிழ்ச் சொல்லாகவும் இது உள்ளது எனலாம். குறிப்பாக, சென்னைத் தமிழில் அதிரடி என்பதை அசால்ட் என பேச்சு வழக்கில் வந்திருக்கலாம்.

கவனக்குறைவு என்பதற்கு தமிழில் அசட்டை என அழகான வார்த்தை உள்ளது. அசட்டை என்றால் கவனமின்மை அல்லது கவனக்குறைவின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுதல். இது புறக்கணிப்பு , மதியாமை, பாராமுகம், அலட்சியம் போன்ற பொருள்களைக் கொண்டதாகும். ஒருவரை அலட்சியப்படுத்தும்போது, ‘எவ்வளவு அசட்டை பண்றான் பாருங்கள்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.

‘அசால்ட்’ போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அறிவதுடன்  தமிழில் இருக்கும் நல்ல வார்த்தைகளை, ‘அசால்டாக' இல்லாமல்  'அலர்ட்டாக' பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதே தாய்மொழிக்கு நாம் தரும் மரியாதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com