இந்தியாவில் ஆண்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வளமான வரலாறைக் கொண்டுள்ளது. அது இந்தியாவின் கலாசாரத்துடனும் வரலாற்றுப் பின்னணியுடனும் இணைந்துள்ளது. அதன் பெருமைமிகு வரலாறு பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தோற்றம்: இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழைமையான ஆடைகளில் வேட்டியும் ஒன்றாகும். வேத காலத்தைச் சேர்ந்த நூல்களில் கி.மு. 1500 முதல் 500 வரை வேட்டியைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இது கி.மு. 3300 1,300ல் செழித்தோங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்களால் அணிந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.
வேட்டியின் பொருள்: வேட்டி என்கிற சொல் ‘தோதி’ என்கிற சமஸ்கிருத வார்த்தையான தௌதி என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் அர்த்தம் சுத்தம் அல்லது துவைத்தல் என்று பொருளாகும். இது தூய்மையைக் குறிக்கிறது. வேட்டி என்பது தூய்மையான எளிமையான ஒரு ஆடை என்று பொருள்படும்.
வேட்டியின் கலாசார முக்கியத்துவம்: இந்தியா முழுவதும் வேட்டி ஆண்களால் பாரம்பரியமாக அணியப்படுகிறது. இது அடக்கம் பணிவு மற்றும் எளிமை ஆகியவற்றின் குறியீடாக அறியப்படுகிறது. குறிப்பாக, ஆன்மிக மற்றும் மத நடைமுறைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, ஆலய வழிபாடு செய்பவர்கள், மத குருமார்கள், புனிதர்கள் போன்றவர்களால் அணியப்படுகிறது.
வேட்டியின் வேறு பெயர்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் வேஷ்டி என்றும் கர்நாடகாவில் பஞ்சே என்றும், கேரளாவில் முண்டு என்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா பகுதிகளில் தூத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே பொதுவாக அங்க வஸ்திரம் மற்றும் ஒரு சட்டையுடன் சேர்த்து வேட்டி அணியப்படுகிறது.
பிற மாநிலங்களில் வேட்டி: வங்காளத்தில் ஆண்களின் பாரம்பரிய உடையான வேட்டி கலாசார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின்போது அணியப்படுகிறது. பெரும்பாலும் குர்தாவுடன் சேர்த்து அணிந்து கொள்கிறார்கள். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் தோதி பொதுவாக குர்தாவுடன் அணியப்படுகிறது.
வேட்டியின் சிறப்புகள்: வேட்டி அணிவதற்கு எளிமையான ஆடை மட்டுமல்ல, வடிவமைப்பிற்கும் தயாரிப்பதற்கும் எளிதானது. வருடத்தின் பெரும் பகுதி வெப்பம் மிகுந்த இந்திய காலநிலைக்கு ஏற்றதாக இருக்கிறது. இது முகலாயர் இந்தியாவை ஆண்டபோது கூட பைஜாமா குர்தா போன்ற ஆடைகள் இருந்தபோதிலும் வேட்டி பிரபலமாகவே இருந்தது. அது பாரம்பரியத்தின் அடையாளமாக ஆண்களால் அணியப்பட்டு வந்தது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேற்கத்திய பாணி உடைகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் காலனித்துவத்திற்கு எதிரான தேசிய பெருமை மற்றும் எதிர்ப்பின் சின்னமாக வேட்டி இருந்தது. மகாத்மா காந்தி சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக வேட்டியை ஊக்குவித்தார். அதை அணிந்தும் கொண்டார். இந்தியர்களை உள்நாட்டு ஆடைகளை அணிய ஊக்குவித்தார்.
சமகால பயன்பாடு: இன்று மேற்கத்திய பாணி ஆடைகள் நகர்ப்புறங்களில் மேலோங்கி இருந்தாலும் கிராமப்புறத்தில் இன்றும் மத விழாக்கள் திருமணங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் வேட்டி இன்னும் பரவலாக அணியப்படுகிறது. நகர்ப்புறத்திலும் விழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் ஆண்கள் வேட்டி அணிகிறார்கள்.
வேட்டி என்பது பாரம்பரியம், எளிமை மற்றும் கலாசார அடையாளத்தின் சின்னமாக இந்தியாவில் இருக்கிறது.