உலகுக்கு உப்பு அறிமுகமான கதை தெரியுமா?

உலகுக்கு உப்பு அறிமுகமான கதை தெரியுமா?

'உப்பில்லாத பண்டம் குப்பையிலே’, ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்று உப்பு பற்றி பெருமையாகப் பேசி வருகிறோம். அப்படிப்பட்ட உப்பு இந்த உலகுக்கு அறிமுகமான கதை தெரியுமா உங்களுக்கு?

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் காலை வேளையில் இளைஞன் ஒருவன் கடற்கரை மணலில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அப்போது கொக்கு ஒன்று ஒரு சிறிய வெள்ளைப் பாறையின் மீது அமர்ந்து இருக்கும் காட்சியை கண்டான். அதைப் பார்த்ததும் அவனுக்குள் உற்சாகம் கரைபுரண்டது. காரணம்? கொக்கு உட்காரும் பாறை எதுவானாலும் அது சீன மக்களின் நம்பிக்கையின்படி மிகவும் அதிர்ஷ்டகரமானது.

உடனே அந்த வெள்ளைப்பாறையைத் தூக்கிக்கொண்டு அந்நாட்டு மன்னனிடம் ஓடினான் இளைஞன். பாறையைப் பார்த்த சீன மன்னன், "சரி, இதை உள்ளே எடுத்து வை" என்று சேவகர்களிடம் சொல்லி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். சேவகனும் பாறையை எடுத்துப்போய் அதன் அருமை தெரியாமல் சமையல் அறையில் இருந்த பரண் மீது போட்டு விட்டான். அதோடு அந்தப் பாறையை எல்லோரும் மறந்து விட்டனர்.

சில நாட்களுக்குப் பின்னர் பக்கத்து நாட்டு ராஜா ஒருவர் மன்னரைப் பார்க்க, திடுதிப்பென்று அரண்மனைக்கு வந்தார். சரியாக சாப்பாட்டு வேளையில் தனது அமைச்சர்கள் மற்றும் சகாக்களோடு அவர் வந்து நின்றார்! அத்தனை பேருக்கும் அதிவேகமாக விருந்து தயார் செய்யச் சொல்லி சமையல்கட்டுக்கு அரண்மனையில் இருந்து ஆணை வர, சமையல்கட்டே போர்க்களமாகியது. அடுப்பில் வெந்து கொண்டிருந்த உணவை அவசர அவசரமாக கிளறிய சமையல்காரர், எதேச்சையாகக் கரண்டியை மேலே உயர்த்தியபோது கரண்டியின் மறுமுனை பரண் மீது இருந்த வெள்ளைப் பாறையின் மீது இடித்தது. அதனால் பாறையிலிருந்து ஒரு சின்னப் பகுதி உடைந்து, வெந்து கொண்டிருந்த உணவில் விழுந்தது.

"ஐயையோ" என்று அலறியபடி சமையல்காரர் அந்த பாறைத் துண்டை வெளியே எடுக்க முயற்சிக்கும்போதே அது உணவில் நன்றாகக் கரைந்து விட்டது. அந்த உணவை வெளியே கொட்டிவிட்டுப் புதிதாக உணவு தயாரிக்கவும் சமையல்காரருக்கு அவகாசம் இல்லை!

‘சரி, சாப்பாடு தாமதமானால் நமது தலை போய்விடும். விஷயத்தை அப்படியே விட்டு விடுவோம்’ என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு மன்னருக்கும் விருந்தினர்களுக்கும் பரிமாறுவதற்காக உணவை அனுப்பி விட்டார் சமையல்காரர். ‘என்னாகுமோ? ஏதாகுமோ?’ என்ற பதைபதைப்பில் சமையல்கட்டில் நடுக்கத்தோடு உட்கார்ந்திருந்தார். உணவு போன அதே வேகத்தில் மன்னரிடமிருந்து சமையல் காரருக்கு அழைப்பு!

தனது தலையை கடைசியாக ஒரு முறை தடவிப் பார்த்துக்கொண்டு அழுகையை அடக்கியபடி சமையல்காரர், மன்னரின் முன்பு போய் நின்றார்! அவரது கையைப் பிடித்து பெருமிதத்தோடு முத்தம் கொடுத்துவிட்டு மன்னர் சொன்னார், "பல வருடங்களாக உனது சமையலைச் சாப்பிட்டு வருகிறேன். ஆனால், இன்று சமையல் மிகவும் அற்புதம். இன்று உணவில் ஏதாவது புதிய பொருளைக் கலந்தாயா?" என்றார்.

சமையல்காரரால் நடப்பதை நம்ப முடியவில்லை. நடுங்கிக்கொண்டே மன்னரின் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, சமையல் கட்டிலிருந்த வெள்ளைப் பாறையை தூக்கிக்கொண்டு வந்து மன்னர் முன் வைத்தார்.

"ஓ… இதுதானா உணவின் அபார சுவைக்குக் காரணம்?" என்று மன்னர் வெள்ளைப் பாறையை அன்புடன் தடவிக் கொடுத்தார். அதுதான் சமையல் உப்பு. உப்பு கண்டுபிடிக்கப்பட்ட கதை இதுதான்.

பின்னர் இலத்தீன் நாட்டினர், ‘சாஸ்' வகையைப் பயன்படுத்த உப்பை அதிகமாக உபயோகித்தனர். சாஸ்க்கும் இலத்தீன் மொழியில் ‘Salsus’ என்று பெயர். இதுதான், ‘SALT’ என்று மருவியது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் உப்புக்குப் பெயர், ‘உப்பு’தான்.

இதையும் படியுங்கள்:
தயிர் - உலகிற்கு அறிமுகமானது எப்படி தெரியுமா?
உலகுக்கு உப்பு அறிமுகமான கதை தெரியுமா?

சரி, உப்பு என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட அளவு அமிலமும் காரமும் சேர்ந்தால் அமிலம் தனது தன்மையை இழந்து விடுவதுடன், காரமும் தனது தன்மையை இழந்து விடுகிறது. இந்த நிலையில் அமிலமும் காரமும் இல்லாத வேறு ஒரு வேதிப்பொருள் உண்டாகிறது. இந்தப் புதிய பொருளுக்கு உப்பு என்று பெயர். இவ்வாறு உண்டாகும் உப்புக்கு தனி படிக வடிவம் உண்டு. நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது சோடியம் குளோரைடு எனும் வேதிப்பொருள். இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் அணுக்கள் இனணந்திருக்கும்.

உப்பில் கடல் உப்பு, பாறை உப்பு (பூமிக்கு அடியில் சேர்ந்த படிக உப்பு), டேபிள் சால்ட், பாம்பூ சால்ட் (மூங்கிலில் வைத்து எரித்து உருவாகும் உப்பு), கோஷெர் சால்ட், (பிரமிட் வடிவில் இருக்கும் மெதுவாகக் கரையும் உப்பு), இன்ஃபியூஸ்டு சால்ட் (ஐஸ் கிரீம், இனிப்புகளில் சேர்க்கப்படும் உப்பு) என பல வகைகள் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com