'ஜின் ரிக் ஷா'வின் கதை தெரியுமா!

Do you know the story of 'Jin RickShaw'?
Do you know the story of 'Jin RickShaw'?

1973ம் ஆண்டில் அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் ஐம்பதாவது பிறந்த நாளை ஒட்டி மனித 'மூட்டை'களை உட்கார வைத்து மனிதனே இடுப்பொடிய இழுத்துச் சென்ற 'கை ரிக் ஷா' முறை ஒழிக்கப்பட்டது. இதைப் பற்றிய படு சுவையான பயனுள்ள கட்டுரை ஒன்றை சமீபத்திய ‘த ஹிந்து’ நாளோடு வெளியிட்டிருந்தது.

அந்தக் காலத்துக் கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் சென்னை நகரின் அடையாளமாக இந்தக் கை ரிக் ஷாக்கள் ஆங்காங்கே காட்சி தரும். 'ரிக் ஷாக்காரன்' என்ற பெயரிலேயே புரட்சி நடிகர் எம்ஜியார் (அப்புறம்தான் புரட்சித் தலைவர்) நடித்த திரைப்படம்கூட வெளிவந்து சக்கைபோடு போட்டது. இந்த கை ரிக் ஷா இன்றைக்கு அருங்காட்சியகத்தில் காணக் கிடைக்கலாம்!

1973ம் ஆண்டில் சென்னை நகரில் உரிமம் பெற்ற கை ரிக் ஷாக்களின் எண்ணிக்கை1294. இவற்றில் ரிக் ஷா இழுப்பவர்கள் சொந்தமாக வைத்திருந்தது 46 மட்டுமே. எஞ்சியவை வெவ்வேறு 589 'முதலாளி'களின் உடைமையாக இருந்ததாம்.

1973ல் கை ரிக் ஷாவை ஒழித்தபோது கடலூரிலும் சென்னையிலுமாக 2000 வண்டிகள் இருந்தன. இவற்றை சைக்கிள் ரிக் ஷாக்களாக இரு தவணைகளில் மாற்றினார்கள். 22 லட்ச ரூபாய் செலவில் நிறைவேறிய இத்திட்டத்துக்கான பணத்தில் 17.5 லட்ச ரூபாய் கலைஞரின் ஐம்பதாவது பிறந்த நாள் நிதியாக வணிகப் பெருமக்கள் தந்த நன்கொடை. கூடுதலாகச் செலவானது நண்பர்களும் கலைஞரின் விசுவாசிகளும் தந்த தொகை. ஆக, முழுத்திட்டமும் அரசு நிதியில்லாமலேயே நிறைவேறியிருக்கிறது! மனிதர் இழுக்கும் இந்த வாகனத்தை ஒழிக்க வேண்டும் என்கிற இந்த முயற்சி 1940ம் ஆண்டிலேயே அரும்பி, படிப்படியாக வளர்ந்திருக்கிறது.

கை ரிக் ஷா எப்படி, எப்போது, எங்கே அறிமுகமானது என்பதே ஒரு சுவையான கதை!

முன்காலத்தில் குதிரைகளைக்கட்டி வண்டிகளை இயக்க வசதி இல்லாதவர்கள் ஆட்கள் சுமக்கும் பல்லக்குகளில் பயணம் செய்திருக்கிறார்கள். குதிரை வண்டிகளை விட பல்லக்குத் தூக்கிகளின் கூலி மிகக் குறைவு. பல்லக்கை விட ரிக் ஷாக்களில் வேகமாகவும் செல்ல முடிந்தது. 1868ம் ஆண்டில்தான் ஜப்பானில் கை ரிக் ஷாக்கள் தலைகாட்டின.

1872ம் ஆண்டில் டோக்கியோ நகரில் இருந்த ரிக் ஷாக்களின் எண்ணிக்கை 40,000 என்கிறது ஒரு தகவல். சீக்கிரமே ஜப்பான் முழுவதும் இவை பயன்பாட்டுக்கு வந்தன. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் வேளாண் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு முதன் முதலாகக் கிடைக்கும் வேலை ரிக் ஷா இழுப்பதுதான்.

சைக்கிள் ரிக்‌ஷா
சைக்கிள் ரிக்‌ஷா

நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபர் ஒருவர் ஜப்பானில் இந்த 'ஜின் ரிக் ஷா' (ஆள் இழுக்கும் வண்டிகள்) அதிகம் என்று 1877ம் ஆண்டில் பதிவு செய்திருக்கிறார். 1869, 1870ல் அமெரிக்கர் ஒருவர் இதைக் கண்டுபிடித்தார் என்றும் அவர் எழுதியிருக்கிறாராம்.

ஜப்பானுக்கு மிஷனரியாக வந்த அமெரிக்கர் ஜொனாதன் ஸ்கூபி என்பவர் தம்முடைய உடல் நலம் குன்றியிருந்த மனைவியை யோகோஹாமா வீதிகளில் அழைத்துச் செல்வதற்காக 1869ல் இந்த வண்டியை உருவாக்கினார் என்றும் ஒரு தகவல். 1867லேயே ஜேம்ஸ் பிர்ச் என்ற ஒருவர் ரிக் ஷாவை வடிவமைத்ததாகவும் சொல்கிறார்கள். எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. இதற்கு;ஃப் காப்புரிமை பெறப்பட்டதாகவும் தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
உலகின் 8ஆவது அதிசயமான அங்கோர்வாட் கோயில் ரகசியம் தெரியுமா?
Do you know the story of 'Jin RickShaw'?

1870ம் ஆண்டில் இவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதற்காக இஸுமி யோஸிக்கே உள்ளிட்ட மூவருக்கு டோக்கியோ அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவுக்கு முதன் முதலாக இந்த வாகனம் வந்தது ஸிம்லா நகருக்கு 1880ல். அடுத்த இருபது ஆண்டுகளில் கல்கத்தாவில் பரவியது. முதலில் சீன வியாபாரிகள் தங்கள் பொருள்களை ஏற்றிச்செல்ல இந்த ரிக் ஷா வண்டியைப் பயன்படுத்தினார்கள். 1914ம் ஆண்டில்தான் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றார்களாம்.

சென்னை வீதிகளில், குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில் தலையில் தொப்பியோடு அந்தப் பாவப்பட்ட ஜீவன்கள் கை ரிக் ஷாவை 'வலித்து'ச் சென்ற காட்சி படுமங்கலாக நினைவில் இருக்கிறது. அவர்கள் கூலிக்கு அடாவடியெல்லாம் செய்ததாக அறிந்ததில்லை. மாறாகப் பயணிகள்தான் இரண்டணா, நாலணா என்று பேரம் பேசுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com