ஆவுரிஞ்சிகல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

Do you know what is Aurinji Kal?
Do you know what is Aurinji Kal?https://sakthiprakasherode.blogspot.com
Published on

ண்டைய கால தமிழர்கள் மனித இனத்தின் மீது மட்டுமல்ல; பிற உயிரினத்தின் மீதும் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பதற்கு உதாரணம்தான் ஆவுரிஞ்சிகல். பழங்காலம் முதலே தமிழர்கள் அனைத்து உயிர்களையும் தம்முயிர் போல் போற்றி வாழ்ந்து வந்தனர். ஆடு, மாடுகளை தமது உயரிய செல்வமாக அவர்கள் நினைத்தனர். தமது இல்லம் அருகிலேயே கொட்டகை அமைத்து அவற்றை வளர்த்து வந்தனர்.

சங்க இலக்கியங்கள் ஆடுகளை புல்லினம் என்றும், எருமைகளைக் கோட்டினம் எனவும், பசுக்களை கோவினம் என்றும் குறிப்பிடுகின்றன. அஃறிணை உயிர்களின் உணர்வினையும் மதித்த தமிழர்கள் அவற்றின் நலனுக்காக நட்டிய தூண் போன்ற கல்லைப் பற்றி சங்க இலக்கியங்கள் பெருமையாகக் கூறுகின்றன.

மனிதனுக்கு தினவு எடுத்தால் அதைப் போக்குவதற்காக கைவிரல்களால் அவன் தனது உடலை சொரிந்து கொள்கிறான். ஆனால், ஆடு, மாடுகளுக்கு தினவு எடுத்தால் அவ்வாறு அவற்றால் செய்ய முடியாது அல்லவா? எனவே, அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தனது உடல் அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன. இவ்வாறு மாடுகள் மரங்களில் உராய்வதால், சமயங்களில் அவை இறக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றன. அதோடு, மாடுகள் உராய்வதால் நிழல் தரும் மரங்களின் அழிவை தடுப்பதற்காக தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மாற்று வழியே, ‘ஆதீண்டு குற்றி’ எனப்படும் கல் தூண்களாகும்.

ஆவுரிஞ்சிகல்
ஆவுரிஞ்சிகல்

அவ்வாறு நடப்பட்டிருந்த கற்களை சங்க இலக்கியங்கள், ‘ஆதீண்டு குற்றி’, ‘மாதீண்டு துறுகல்’ எனக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, தொல்காப்பியக் காலத்திலேயே மாடுகளுக்கு ஏற்படும் தினவை தீர்த்துக் கொள்வதற்காக, ஆதீண்டு குற்றிகளை தமிழர்கள் நட்டு இருந்தனர் என்பதை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

கல்வெட்டுகளிலும் ஆதீண்டுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக, சேலம் மாவட்டம், ஆரியப்பாளையம் என்ற ஊரின் குளக்கரையில் நடப்பட்டுள்ள கல்லில் கால்நடைகளுக்காக உரைகல்லும், குட்டையும் ஏற்படுத்தப்பட்டது கூறப்பட்டுள்ளது. மேலும், கி.பி. 13, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் தர்மத்திற்காக நடப்பட்ட கல்லே ஆதீண்டு கல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆரத்தி எடுப்பதன் கலாசாரம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
Do you know what is Aurinji Kal?

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ஓமகுளம் அருகே சுமார் 5 அடி சுற்றளவும், தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரமும் கொண்ட மிகப்பெரிய கல்தூண் ஒன்று நடப்பட்டுள்ளது. அக்கல் தூணில், ‘ஆவுரிஞ்சிகல்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவுரிஞ்சிகல் அப்பகுதியில் வளர்க்கப்பட்ட கால்நடைகள் தினவு எடுக்கும்பொது சொரிந்து கொள்வதற்காக நம் முன்னோர்களால் நடப்பட்டது ஆகும்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இதுபோன்ற ஆவுரிஞ்சி கற்களை தமிழகத்தில் உள்ள சிவகங்கை, மதுரை, தர்மபுரி, சேலம், தஞ்சை, கோவை, சென்னை போன்ற பகுதிகளில் இன்றும் காண முடிகிறது. இந்தியாவின் பழம்பெரும் நாகரிகப் பகுதியான சிந்து சமவெளி மக்கள் எருது உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளை வெளியிட்டு இருந்தனர். காரணம் எருது உழவனின் தோழன் என்பதாலேயே ஆகும்.

எனவே, உழவனுக்கு உற்ற தோழனாக விளங்கிய ஆவினங்களுக்கு நம் முன்னோர்கள் வசதிகள் செய்து வைத்திருந்தனர் என்பதை பார்க்கும்போது வியப்பாக உள்ளது.

நன்றி: பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com