கோயில் கோபுரக் கலசங்களில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

கோபுரக் கலசம்
கோபுரக் கலசம்

ன்மிகத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது கோயில் கோபுரத்தின் மீது இருக்கும் கலசங்கள்தான். நாம் ஏதோ அந்தக் கலசங்கள் கோபுரத்தின் மீது அழகுக்கு இருக்கிறது என்று நினைத்திருப்போம். ஆனால், அதில் அறிவியல், வாழ்வியல் என எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். கோபுரக் கலசத்தின் உள்ளே என்ன உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

இன்றளவும் தமிழகத்தில் மன்னர்களால் கட்டப்பட்டு கம்பீரமாக நிற்கும் கோயில்கள் எல்லாம், ஊர் மொத்தமும் ஒன்று கூடி வழிபடும் இடமாக இருக்கிறது. பெரிய கோயில் அமைப்புகள் எல்லாம் நம் கட்டடக் கலைகளையும் பொருளாதார உச்சத்தை வெளிபடுத்தும் விதமாகவே அமைந்துள்ளன. ஆரம்ப காலகட்டத்தில் பல மர கோயில்கள் கட்டப்பட்டு இருந்தன. ஆனால், இயற்கை சீற்றங்களின் ஒன்றான நெருப்பில் கோயில்கள் சேதமடைந்து வந்த நிலையில் மர கோயில்களைத் தவிர்த்து, கற்கோயில்களை கட்டத் துவங்கினர். கற்கோயில்களின் வடிவமைப்பு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இருந்தது.

உயரமான கோபுரங்கள் பெருவாரியாக சேமிப்பு முறையின் நோக்கமாகவே இருந்து வந்தது. ஊரில் வெள்ளம் தோன்றி ஏதேனும் அழிவு நேர்ந்தால் பயிர்கள், தானியங்கள் என அனைத்தும் அழிந்துவிட நேரிடும். இதன் விதைகளை சேமிக்கும் வகையில் உயரமான கோபுரங்களின் மேல் கலசங்களைப் பொருத்தி அதனுள் இந்த விதைகளை சேமித்து வைத்தார்கள். அதாவது, நீர் போன்ற அழிவுகள் ஏதும் தொட முடியாத உயரத்தில் இந்த கோபுரங்கள் கட்டமைக்கப்பட்டன. இன்றைய நாளில் கும்பாபிஷேகம் என சொல்லப்படும் முறைக்கு மூலதனமே இந்த கலச முறை வழிபாடுதான்.

இந்த முறை சங்க இலக்கிய காலத்தின் முதலே தமிழ் மரபில் உள்ளது. இதை சங்க இலக்கியங்கள் குட நீராட்டு எனவும், நீர் தெளி எனவும் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு எழுப்பப்படும் கோயிலுக்கு குட நீராட்டு நடந்ததாக கூறப்படுகிறது. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதுரை யானைமலை பெருமாள் கோயிலின் கல்வெட்டு ஓன்று இதை, ‘நீர் தெளி’ எனவும் குறிப்பிடுகிறது. இந்த குட நீரானது, திருகாவனம் எனப்படும் யாக சாலை அமைத்து ஐம்பூதங்களையும் வழிபட்டு மனதை ஒருநிலைப்படுத்தும் சொற்களான, மனதில் திடமாக இருக்கும் மந்திரம் முழங்கி கடவுளுக்கான திருப்பாடல் பாடி, அதை கடவுள் மங்கலம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம் போன்ற ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கலசங்கள். உருண்டை வடிவிலான பகுதியின் மேல் ஒரு கூம்பு வடிவில் இருப்பதுதான் கலசம். இந்த உருண்டை வடிவிலான பகுதியில்தான் தானியங்கள் அனைத்தும் கொட்டி வைக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டன. ஒரு தானியம் 12 ஆண்டுகள் வரை 100 சதவீதம் விளையும் தன்மையுடன் இருக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குட நீராட்டு நடத்த வேண்டும் என்ற விதிமுறையும் இதன் அடிப்படையிலேயே கடைபிடிக்கப்பட்டது. நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்கா சோளம், சாமை, எள் போன்ற நவ தானியங்கள்தான் கலசத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
கோபுரக் கலசம்

கூம்பு வடிவில் இருக்கும் பகுதி மின்னலைத் தாங்கி கடத்துவதற்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழங்காலங்களில் ஐம்பொன்களுடன் சேர்ந்து இரிடியம் கலந்த உலோகத்திலேயே கலசங்கள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டு இருந்தன.

பிளாட்டினம் குடும்ப வகையைச் சேர்ந்த இந்த இரிடியம் 2000 செல்சியஸ் வெப்பத்தைக் கூட தாங்கும் அளவு சக்தி கொண்டது. இந்த வடிவில் அமைக்கப்பட்ட கலசமானது கோபுரங்களை மின்னல் மற்றும் இடிகளில் இருந்து சிதையாமல் தடுக்கும் வகையில் கட்டப்பட்டன. அதனால்தான் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் எழுப்பி, அதன் மேல் கலசங்கள் பொருத்தி, குறிப்பிட்ட பரப்பளவில் இடி மற்றும் மின்னல்களில் இருந்து ஊரைக் காக்க உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஊரில் கோயில் கோபுரங்களை விட பெரிய கட்டடங்கள் இருக்கக் கூடாது என்று சொன்னதற்கு அடிப்படை காரணமும் இதுதான். கோயில் கோபுரங்களின் உயரத்திற்கும் அகலத்திற்கும் ஏற்றாற்போல் கலசங்களின் எண்ணிக்கையும் கூடும். கோயில்களும், கோபுரங்களும், கலசங்களும், ஒரு இனத்தின் கலை நயத்தை பறைசாற்றும் விதமாகவும் மற்றும் மக்களின் நலனுக்காவும் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் தமிழன் படைத்த பிரம்மாண்டங்களின் ஆற்றல் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com