கோயில்கள் என்றாலே புனிதமாகக் கருதுவர். அதைக் கட்டுவதற்கென்று தனியாக விதிமுறைகள் உண்டு. நல்ல நாள், நல்ல நேரம், சகுணம் போன்றவற்றைக் பார்த்து கட்ட ஆரம்பிப்பார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு கோயில் ஒரே இரவில் கட்டப்பட்டது, அதுவும் பேய்களால் என்றால் நம்ப முடிகிறதா?
மத்தியபிரதேச மாநிலம், குவாலியரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மொரினா என்ற இடத்தில் அமைந்திருக்கும் கோயில், ‘கக்கன்மாத்’ கோயிலாகும். இந்த அற்புதமான கோயில் 115 அடி உயரம் கொண்டது. அப்படிப்பட்ட இந்த கோயில் ஒரே இரவில் கட்டப்பட்டது என்று சொன்னால் வியப்பாக உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான் தனக்கு இந்த இடத்தில் ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்று பேய்களுக்கு ஆணையிட, அதை ஏற்று ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது இக்கோயில் என்று கூறப்படுகிறது. முழுமையாக கட்டி முடிப்பதற்குள் விடிந்து விட்டதால் அப்படியே கட்டுவதை விட்டுவிட்டு சென்று விட்டன என கூறப்படுகிறது.
மற்ற கோயில்களில் சுண்ணாம்பு போன்ற பொருட்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்தினால், இக்கோயிலில் கற்களை வெறுமனே துல்லியமாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வேறு எந்த பொருளும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படவில்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகும்.
எனினும், இக்கோயில் 11ம் நூற்றாண்டில் சிவனுக்காக கட்டப்பட்டது என்றும் மன்னர் கீர்த்திராஜா இக்கோயிலை கட்டினார் என்றும் கூறப்படுகிறது. சூரஜ்பால ராணியின் பெயர் கக்கனாவதி. அவரின் பெயராலேயே இக்கோயில் ‘கக்கன்மாத்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ‘கனாக்’ என்றால் தங்கம் என்றும் ‘மாதா’ என்றால் கோயில் என்றும் கூறப்படுகிறது.
இப்போது இக்கோயிலின் உடைந்த மீதமான நடுபாகமே காட்சி தருகிறது. இக்கோயில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இக்கோயில் முக்கியமான நினைவு சின்னமாகக் கருதப்படுகிறது. இக்கோயிலை பார்க்கையில் இடிந்து விழுவது போல காட்சி தந்தாலுமே மிகப்பெரிய புயலால் கூட இக்கோயிலை அசைக்க முடியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.
இந்தக் கோயில் பூதங்களால் கட்டப்பட்டதால் இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை, ‘பூதநாத்’என்று அழைக்கிறார்கள். இக்கோயிலை கட்ட பயன்படுத்தப்பட்ட கற்கள் அந்த சுற்றுவட்டாரத்தில் எங்குமே கிடையாது என்று கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இக்கற்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இரவு நேரங்களில் இக்கோயிலுக்கு யாரும் செல்வதில்லை என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகிறார்கள்.
இப்படி ஆச்சர்யமும், மர்மமும் நிறைந்த இக்கோயிலை காண வேண்டும் என்ற ஆவல் தோன்றுவதால் எண்ணற்ற சுற்றுலாப்பயணிகள் தினமும் இக்கோயிலுக்கு வருகை தந்தாலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற தோற்றத்தை கொண்ட இக்கோயிலை காண்கையில் அதிசயித்துதான் போகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.