இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் அதன் நிலப்பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள் மற்றும் அடையாளங்கள் கொண்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தைச் சார்ந்த தனித்தன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு அங்கீகாரக் குறியீடே புவிசார் குறியீடு (Geographical Indication) என அழைக்கப்படுகிறது.
உணவுப் பொருட்கள், வேளாண் விளை பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்திப் பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவையாகக் கருதப்படுகின்றன.
நாட்டின் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் அல்லது விளைவிக்கப்படும் சில குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு அங்கீகாரம் புவிசார் குறியீடு (Geographical Indication) ஆகும். ஒரு பொருளின் பெயரைக் குறிப்பிட்டால் அந்தக் குறிப்பிட்ட பகுதியை அடையாளம் காணும் அளவிற்கு பிரபலமானதாக புவிசார் குறியீடு பெறும் பொருட்கள் இருக்க வேண்டும்.
புவிசார் குறியீடு என்பது பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட அல்லது சில குறிப்பிட்ட குணங்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட நற்பெயரைக் கொண்ட ஒரு பொருளுக்கான சான்றிதழாகும். புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர பிற ஊர் அல்லது நகரங்களில் தயாரிப்பதும் சந்தைப்படுத்துவதும் கூடாது.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு 15 செப்டம்பர் 2003 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு பெற்ற பொருள் டார்ஜிலிங் தேநீர். புவிசார் குறியீடு அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்திய அரசின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமை துறையானது புவிசார் குறியீடு என்ற அங்கீகாரத்தை 2003ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
புவிசார் குறியீடானது குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது. பிற பகுதிகளைச் சேர்ந்த அங்கீகாரம் பெறாதவர்கள் புவிசார் குறியீடு தயாரிப்புகளை தவறாகப் பயன்படுத்துவதையும் இச்சட்டம் தடுக்கிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டது என்றால் அந்தப் பொருளை அந்த ஊரைச் சேர்ந்தவர்களைத் தவிர பிற ஊர் மக்கள் தயாரிக்கக்கூடாது என்பதே அடிப்படையாகும்.
தமிழ்நாட்டில் பண்ருட்டி பலாப்பழம், சேலம் மாம்பழம், சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்கள், மதுரை மல்லிகைப்பூ மற்றும் சுங்குடி சேலை, திண்டுக்கல்
பூட்டு, பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பத்தமடை பாய், ஈரோடு மஞ்சள், பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் ஓவியத்தட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலைமிட்டாய், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வாழைப்பழம், காஞ்சிபுரம் பட்டு, திருச்சி மாவட்டம் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், தைக்கால் பிரம்பு ஊஞ்சல், கொடைக்கானல் மலைப்பூண்டு, நரசிங்கம்பேட்டை நாகசுரம், வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய், கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி முதலான பல பொருட்கள் புவிசார் குறியீடு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருட்களுக்குத்தான் அதிகமான எண்ணிக்கையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை ஐம்பத்தி ஆறு என்பது குறிப்பிடத்தக்கது.