உலகின் முதல் வானளாவிய கட்டடம் எது தெரியுமா?

Lincoln Cathedral, England
Lincoln Cathedral, England
Published on

உலகில் வானளாவிய கட்டடங்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டன. என்ன மக்களே, ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? தொடர்ந்து படிப்போமே...

கி.மு 280 இல் கட்டப்பட்ட எகிப்தின் அலெக்சாண்டரியாவின் கலங்கரைவிளக்கம் 330 அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.‌ இலங்கையின் அரசன் துட்டகமனு (காலம் கி.மு 161 முதல் கி.மு. 137 வரை) கி.மு 155 இல் கட்டிய பித்தளை அரண்மனை (லோவாமஹாபயா) கிட்டத்தட்ட 400 அடி உயரம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த அரண்மனையின் கூரை பித்தளையால் இருந்தபடியால், அது பித்தளை அரண்மனை என்றழைக்கப்பட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்பாகவே கி.மு 2600 இல் கட்டப்பட்ட கீஸா பிரமிட் 481 அடி உயரமுடையதாக இருந்த போதிலும், அது மக்கள் வாழாத இடமாக கருதப்பட்டதால் உலகின் உயரமான கட்டடமாக கருதப்படவில்லை.

எனவே நம்மால் அளவெடுக்க முடிந்த கி.பி 1311 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 524 அடி உயரமுடைய, இங்கிலாந்தைச் சேர்ந்த லிங்கன் தேவாலயம் தான் உலகின் முதல் வானளாவிய கட்டடமாக கருதப்படுகிறது. அது முதல், சமீபத்திய 19 ஆம் நூற்றாண்டு வரை உலகின் உயரமான கட்டடங்கள் பெரும்பாலும் தேவாலயங்களாகவே இருந்துள்ளன.

கி.பி 1885 ஆம் ஆண்டு சிகாகோவில் கட்டப்பட்ட 138 அடி உயரமுடைய ஹோம் இன்ஷூரன்ஸ் கட்டடம் உலகின் முதல் வானளாவிய கட்டடம் (Sky scraper) எனக் கருதப்படுகிறது. இன்று நாம் காணும் எல்லா வானளாவிய கட்டடங்களுக்கும் முதல் முன்மாதிரியாக அந்த கட்டிடம் கட்டடக்கலை நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. இரும்பு சட்டங்களைக் கொண்டு, முழு கட்டடத்தின் சட்டமும் செய்யப்பட்டு, சுவர்கள் அந்த சட்டத்தின் மீது பொருத்தப்படும் (filler walls or curtain walls) இன்றைய வானளாவிய கட்டடக்கலையின் முதல் கட்டடம் அது தான்.

அதற்கு முன்பு கட்டப்பட்ட பல மாடிகள் உடைய உயரமான கட்டடங்கள் கட்டடத்தின் கனத்தை சுவர்கள் தாங்குவதைப் போல் (load bearing) அமைக்கப்பட்டன. எனவே, அவை இன்றைய வானளாவிய கட்டங்களின் முன்மாதிரியாக கருதப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
உலகப் புகழ் பெற்ற ராஜேந்திர சோழனின் யானைப்படையை பற்றித் தெரியுமா?
Lincoln Cathedral, England

சிகாகோ நகரின் ஹோம் இன்சூரன்ஸ் கட்டடம் நவீன வானளாவிய கட்டடங்களின் பிதாமகராக அமைந்துள்ளது. துரதிருஷ்டவசமாக அது 1931 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு விட்டது. அதனைத் தொடர்ந்து இத்தகைய பல்வேறு கட்டடங்கள் சிகாகோ மற்றும் நியூயார்க் நகரில் வரத் தொடங்கின. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உலகின் மிகப்பெரிய வானளாவிய கட்டடங்கள் அமெரிக்காவில் மட்டுமே இருந்தன. கி.பி 1998 இல் கோலாலம்பூரில் கட்டப்பட்ட பெட்ரோனாஸ் டவர், முதன்முதலாக அமெரிக்காவிற்கு வெளியே , உலகின் மிக உயரமான கட்டடம் என்ற இடத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலீபா 1919 அடி உயரம் கொண்டு உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்குகிறது.

நிற்க...

உலகின் மிக உயரமான கட்டடம் என்பது அதன் மேல் தளத்தின் உயரத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. கொடியேற்றக் கம்பி, அலைவாங்கி போன்றவற்றின் உயரம் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. மேலும் தற்போது இத்தகைய உயரமான கட்டடங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருவதால், புர்ஜ் கலிபாவின் இடத்தை மற்றொரு கட்டடம் எதிர்காலத்தில் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகின் கட்டடக்கலையின் பிரமிப்புகளில் புர்ஜ் கலீபாவும் ஒன்று. நீங்கள் துபாய் சென்றால், புர்ஜ் கலீபாவினைக் காணத் தவறாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com