ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்குள் வந்தபோது துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தது. அந்தக் காலத்திலேயே நவீன ஆயுதங்களை வைத்திருந்த ஆங்கிலேயரே தமிழரிடமிருந்த ஒரு ஆயுதத்தைப் பார்த்து பயந்தார்கள். அதேபோல, 18ம் நூற்றாண்டில் தமிழர் பயன்படுத்திய வினோதமான ஒரு ஆயுதத்தை ஆங்கில அரசு பயன்படுத்துவதற்கு தடைப்போட்டது. எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய, ஆங்கிலேயர்களால் Stranger weapon என்று அழைக்கப்பட்ட அந்த ஆயுதம் தமிழர்களின் வளரி.
ஒருவர் நின்ற இடத்தில் இருந்து எதிரியை தாக்குவதற்கு எப்படி வாள் இருக்கிறதோ, அதேபோல தூரத்திலிருக்கும் எதிரிகளை தாக்க ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. இயற்கையையும், அறிவியலையும் பயன்படுத்தி ஒரு புது ஆயுதத்தை தமிழன் உருவாக்கினான். இன்று விமானங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்தக்கூடிய Aerodynamics ஐ அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டதுதான் வளரி. எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் இந்த ஏரோடைனமிக்ஸ் முறையை தமிழர்கள் அறிந்து வைத்திருந்தது நம் தமிழ் இனத்திற்கே பெருமை சேர்க்கிறது.
வளரியின் எடை கூடினால் நீண்ட தொலைவு வீச முடியாது. எடை குறைந்தால் தாக்குவதற்கு ஏற்றதாக இருக்காது. ஒரு இரும்புத்துண்டை காற்றில் வீசும்போது இலக்கை நோக்கிச் செல்ல ஏற்ற எடைக்கட்டுப்பாடு இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்து துல்லியமாக உருவாக்கப்பட்டதுதான் வளரி. கையில் வைத்து சண்டையிட்டால் அது வாள். இதுவே காற்றில் எறிந்து எதிரிகளை அழித்தால் அது வளரி.
வளரி கையிலிருந்து வீசி எறியக்கூடியது போல, ஏறக்குறைய பிறை வடிவமாக இருக்கும். ஒரு பக்கம் எடை அதிகமாகவும், மறுபக்கம் எடை குறைவாகவும் இருக்கும். மேலும், இதன் வெளிப்புறம் கூர்மையாக இருக்கும். வளைந்த பொருளை எறிவதால் இதற்கு வளரி என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
மரம் மற்றும் யானை தந்தத்தால் ஆன வளரியை தமிழர்கள் வேட்டையாட பயன்படுத்தினர். வளரியின் கனமற்ற பகுதியை தோலுக்கு மேல் தூக்கி பலமுறை சுழற்றி அதை எறிந்தால் சரியாக சென்று இலக்கை தாக்கி விட்டு எறிந்தவரிடமே திரும்பி வரும். ஒருசில வளரி எதிரிகளை தாக்கிவிட்டு அப்படியே விழுந்துவிடும். கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகளை தாக்கும் வல்லமை பொருந்தியதுதான் வளரி.
வளரியின் சத்தம் மட்டுமே எதிரிகளுக்குக் கேட்கும். அது எங்கிருந்து வந்தது, எங்கே சென்றது என்பது தெரியாது. வளரி திரும்பி வரும்போது அதை கவனமாக கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது எறிந்தவரின் உயிரையே எடுத்துவிடும். ஒவ்வொரு வளரியையும் ஒவ்வொரு ஓசையைக் கொண்டு தயாரித்துள்ளார்கள். அதை வைத்துத் திரும்பி வரும் வளரி என்னுடையது என்று கணிக்கும் அளவிற்கு அறிவாளிகளாக இருந்துள்ளனர் தமிழர்கள்.
சங்க இலக்கியங்களில் வளரியை திகிரி, கள்ளத்தடி, வளைத்தடி, பாராவளை, எரிவளை, சுழல்படை, படைவட்டம் என பல பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர். காடும் காடு சார்ந்த பகுதியில் இருந்த மாயோனின் ஆயுதம் வளரி என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. ‘மால்’ என்னும் சோழ மன்னன் வளரிப்படையை உடையவன் என்று சிலப்பதிகார பாடல் சொல்கிறது. நான்கு வகை படைகளான காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படையை தாண்டி ஐந்தாவதாக வளரிப்படையும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டை மன்னரிடம் வளரிப்படை என்ற தனிப்படை இருந்ததாக புதுக்கோட்டை வரலாறு குறிப்பிடுகிறது. வேலு நாச்சியார் படையில் மருது சகோதரர்கள் தலைமையில் மிகச் சிறந்த வளரிப்படை இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். மருது சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பெனியை வளரிப்படையை பயன்படுத்தித் தாக்கி ஓடவிட்டனர். திறமையான ஒரு வீரன் இந்தக் கருவியை வீசும்போது 300 அடி தூரம் வரை சென்று சரியாக இலக்கைத் தாக்கும் என்று கூறப்படுகிறது.
17ம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர்களுடன் ஆங்கிலேயர்கள் சண்டையிட்டபோது, பாளையக்காரர்கள் கொரில்லா முறையில் மறைந்திருந்து ஆங்கிலேயரை தாக்கினார்கள். இதில் ஆங்கிலேயருக்கு நிறைய உயிர் சேதம் ஏற்பட்டது. இதில் ஆங்கிலேயர்கள் வளரியை பார்த்துதான் ஸ்தம்பித்து போனார்கள். அந்தப் போர் முடிவுக்கு வந்ததும் வளரியை அழிப்பதையே முதல் வேலையாகச் செய்யத் தொடங்கினார்கள் ஆங்கிலேயர்கள். வளரியை பயன்படுத்தினால் மரண தண்டனை என்று கூறியதால், வீட்டிலும் வளரியை வைக்க முடியாது என்பதால் தமிழர்கள் வளரியை பாதுகாக்க அதனைக் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
இன்றளவும் மதுரையில் உள்ள கோயிலில் 200 வளரிகளை பாதுகாத்து வைத்துள்ளனர். மேலும், அந்தக் கோயில் சாமிக்கு வளரியை படைக்கும் பழக்கம் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் கையில் வளரியுடன்தான் வைகையாற்றை நோக்கிப் புறப்படுவார். பல ஆயிரம் வருடங்களாக வளரியை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும், வளரியின் தாயகம் தமிழகம் என்பதை பல சங்க இலக்கியச் சான்றுகள், இதுவரை கிடைத்த வளரிகள், அதையெல்லாம் தாண்டி வளரியுடன் இருக்கும் வீரர்களின் நடுக்கற்கள் அதற்குச் சாட்சியாக இருக்கின்றன.