- கார்த்திகா
ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் இருநூறு ஆண்டுகாலம் நிலைபெற்றிருந்தனர். நாட்டு மக்களை பல்வேறு முறைகளில் அடிமைப்படுத்தியே அவர்களின் அரசு செயல்பட்டது. 'அதிகாரம்' என்ற எல்லையினைக் கடந்து, தமிழ் மொழியோடும், மக்களோடும் இணைந்த ஆங்கிலேயர் சிலரும் அவர்களுள் இருந்தனர். அதனால், தமிழ் மக்களும் பல்வேறு வகையான வேறுபாட்டு எல்லைகளை மீறி அவர்களுடன் கலந்து பழகினர். இதன் விளைவாக அரசு நிறுவனங்களையும் அதிகாரங்களையும் தாண்டி எளிய மக்களின் மனதில் இடம் பிடித்த ஆங்கிலேயர் சிலரும் உண்டு.
ரௌஸ் பீட்டர்:
மதுரைப் பகுதியில் நாட்டுப்புற மக்களிடத்தில் பெயர் பெற்ற ஆங்கிலேயர் ரௌஸ் பீட்டர். இவர் 1812-1828 வரை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார்.
'ஆங்கிலேய பாண்டியர்' பெயர்க்காரணம்:
ரௌஸ் பீட்டர் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் பல வகையிலும் மக்களுக்காக அரும்பணி ஆற்றியுள்ளார். அக்காலத்தில் பெரியகுளம், போடி மற்றும் கன்னிவாடி பகுதிகளில் காட்டு யானைகள் மக்களைத் தொல்லை செய்தபோது, அவற்றை தாமே வேட்டையாடி, மக்களால் பாராட்ட பெற்றுள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர் கோயிலுக்கு தங்க நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார். இவரின் கொடைத் தன்மையையும் வீரத்தையும் பாராட்டி அக்காலத்தில் நிறைய நாட்டுப் பாடல்கள் பாடப்பட்டன.
பாண்டிய மன்னர் திரும்பி வந்து ஆள்வதாகவே கருதி, மக்கள் இவரை 'ஆங்கிலேய பாண்டியன்' என்றும் 'பீட்டர் பாண்டியன்' என்றும் அழைத்திருக்கின்றனர்.
ஆங்கிலேய பாண்டியனின் மறைவு:
இவரின் எல்லையற்ற இரக்க உணர்வின் விளைவாக, இவர் அரசாங்கக் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து எளிய மக்களுக்கு கொடுத்துள்ளார். இவரின் இந்த இரக்க உணர்வை பயன்படுத்தி வேறு சில அதிகாரிகள் தவறான வழிகளில் பணத்தைக் கையாடி இருக்கின்றனர்.
நிலைமை கைமீறிப் போனதை அறிந்த பீட்டர் பாண்டியன் 1819 ல் அரசாங்க பணத்தை , தான் எடுத்து செலவழித்ததை ஒத்துக்கொண்டு ஒரு கடிதம் எழுதி சீல் செய்து தன்னுடன் வைத்துக் கொண்டார். 1828 ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். பின் கடிதம் கைப்பற்றப்பட்டு கீழ்நிலை அதிகாரிகள் ஐந்து பேர் தண்டிக்கப்பட்டனர்.
இன்று பெரும்பாலானோர் தங்களின் சுயநலன்களுக்குள் மட்டுமே கட்டுண்டு வாழும் சூழலில், இன, மத, மொழி என அனைத்து எல்லைகளையும் கடந்து, தமிழ் மக்களை நேசித்து உயிர்விட்ட ஆங்கிலேய பாண்டியன் எனப்படும் ரௌஸ் பீட்டரின் வரலாறு மக்களால் போற்றப்பட வேண்டிய ஒன்று.