தமிழ் மொழியில் வெளியான முதல் அச்சு நூலை வெளியிட்டது யார் தெரியுமா?

சீகன்பால்க்
Ziegenbalghttps://rangandatta.wordpress.com
Published on

புத்தகம் மற்றும் செய்தித்தாள், கல்வி நூல்கள் என சர்வ சாதாரணமாக நம் கையில் இப்போது தவழ்கின்றன. தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்கள் இருந்தாலும், தமிழ் மொழியில் புத்தகத்தை முதல் முதலில் வெளியிட்டவர் யார் தெரியுமா? அவரைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு வடிவம் பெற்றது தமிழ் மொழி. இந்தப் பெருமையை தமிழுக்குத் தந்தவர் ஜெர்மனியை சேர்ந்த மத போதகர் சீகன்பால்க். இந்தியாவில் கிறிஸ்தவ மத போதனை செய்வதற்காக டென்மார்க் மன்னர் நான்காம் ஃபெடரிக் மூலம் அனுப்பி வைக்கப்பட்டவர் சீகன்பால்க். இதன்படி, 1706ம் ஆண்டு ஜூலை 9ல் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார் சீகன்பால்க். இவர் மன்னரின் நேரடி தூதுவராக அனுப்பிவைக்கப்பட்டதை அப்போதைய ஆளுநர் ஹாசியுஸ் விரும்பவில்லை. அதனால், சீகன்பால்க்கை கப்பலில் இருந்து அழைத்து வர படகை அனுப்ப மறுத்தார். மூன்று நாட்கள் கழித்து கரை வந்து சேர்ந்த சீகன்பால்க், தொடர்ந்து ஆளுநரால் உதாசீனப்படுத்தப்பட்டதால் சேரி பகுதியில் தங்கி இருந்து இறைப்பணி செய்ய ஆரம்பித்தார்.

தமிழ் கற்றால்தான் இந்த மக்களிடம் இறைப்பணி செய்ய முடியும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த சீகன்பால்க், தரங்கம்பாடி, பொறையாறு பகுதிகளில் இருந்த திண்ணைப் பள்ளிகள் மூலமாக தமிழைப் படித்தார். முதலியப்பன், அழகப்பன் என்ற தமிழ் நண்பர்களின் உதவியோடு ஒரே ஆண்டில் தமிழ் கற்றுத் தேர்ந்தவர், தமது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் ஐயாயிரம் தமிழ் வார்த்தைகளைத் தெரிவுசெய்து மனப்பாடம் செய்தார்.

கடற்கரை மணலில் விரல் கொண்டு எழுதி தமிழை எழுதவும் கற்றவர், தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்றார். இவர் படித்த முதல் தமிழ் நூல் தொல்காப்பியம். இதன் மூலம் 20 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட தமிழ் அகராதியையும் இரண்டே ஆண்டுகளில் உருவாக்கினார். மேலும், திருக்குறள், நன்னூல், அரிச்சந்திர புராணம், பஞ்சதந்திர கதைகள், சிதம்பர மாலை, நளன் கதை, தேவாரம் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சுவடிகளைப் படித்து இரண்டே ஆண்டுகளில் 40 ஆயிரம் சொற்கள் கொண்ட மற்றொரு தமிழ் அகராதியையும் உருவாக்கிய சீகன்பால்க், ஐரோப்பியர்களின் வீடுகளி லும் தோட்டங்களிலும் பணி செய்தவர்களின் குழந்தைகளுக்காக தரங்கம்பாடியில் முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார்.

இவற்றைத் தொடர்ந்து 1711ல், கிறிஸ்தவர்களின் வேத நூலான புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்து, அதை உடனே அச்சிட்டு வெளியிடும் பணியைத் தொடங்கினார். இதற்காக ஐரோப்பாவில் இருந்து தனது நண்பர்கள் மூலமாக தமிழ் அச்சு எழுத்துகளையும் அச்சு இயந்திரத்தையும் தருவித்தார். ஆனால், அங்கிருந்து வந்த தமிழ் எழுத்துகளின் எழுத்துருக்கள் (ஃபான்ட்) பெரிய அளவில் இருந்ததால் தரங்கம்பாடியிலேயே சிறிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி, அங்கேயே சிறிய அளவிலான எழுத்துரு கொண்ட தமிழ் அச்சு எழுத்துகளை உருவாக்கினார்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்கு அழகு தரும் 5 வகை ஜன்னல் திரைவலைகள்!
சீகன்பால்க்

சீகன்பால்க் தமிழை அச்சுத் தமிழாக்கிய சமயத்தில் இங்கே காகித பற்றாக்குறையும் இருந்தது. அதை சமாளிப்பதற்காக பொறையாறில் காகிதப் பட்டறை ஒன்றையும் உருவாக்கினார். இவரது கடின முயற்சியால் தரங்கம்பாடியில் உருவாக்கப்பட்ட அச்சகத்திலிருந்து 1715 ஜூலை 15ல் தமிழில், ‘புதிய ஏற்பாடு’ வெளிவந்தது. இதுதான் இந்திய மொழியில் முதலாவதாக வெளி யான அச்சு நூல். முதன் முதலாக தமிழ் நாட்காட்டியையும் வெளியிட்டு தமிழுக்கு அணி சேர்த்த இவர், இலக்கிய நடையில் இருந்த தமிழை, உரைநடை தமிழுக்கு மாற்றியவர் என்ற பெருமைக்கும் உரியவர்.

இறுதியாக, ஓலைச் சுவடிகளின் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய சீகன்பால்க், தமிழ் ஓலைச் சுவடிகளையும் அச்சில் ஏற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால், அம்முயற்சி முழுவடிவம் பெறுவதற்குள்ளாக, 1719 பிப்ரவரி 23ல் தனது 37வது வயதில் காலமாகி விட்டார் சீகன்பால்க்.

சீகன்பால்க்கின் உடல் தரங்கம்பாடியில் அவரால் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் ஆலய பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி மக்கள் இன்றைக்கும் சீகன்பால்க்கை கொண்டாடு கிறார்கள். அச்சு கலைக்கு வித்திட்டவர் சீகன்பால்க்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com