இது எந்த ஆட்சிக் காலத்துக் கோயில் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா?

மதுரை மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில்

ந்தியர்களாகிய நம்  அனைவருக்குமே கலை மேல் பிரியமும் ஆர்வமும் அதிகம் இருக்கும். கோயிலுக்கு சாமி கும்பிட செல்லாதவர்கள்கூட, அங்குள்ள கலைகளைப் பார்க்க நிச்சயம் செல்வார்கள். அந்தக் கலைநயங்களைப் பார்க்கும்போது இந்த கோயிலை எந்தக் காலத்தில் கட்டியிருப்பார்கள், கோயில் எவ்வளவு ஆண்டுகள் பழைமையானது என்பன போன்ற பல கேள்விகள் நம்முள் எழும். அப்போதெல்லாம் அதைப் பற்றி நம் தாத்தாவோ, பாட்டியோ கூறுவார்கள். ஆனால், காலமாக ஆக அதெல்லாம் மாறிவிட்டது. அந்த விஷயங்கள் பற்றி கூறுபவர்கள் இப்போது பெரும்பாலும் இல்லை. கோயிலை பார்த்தவுடன் இது எந்தக் காலத்தில் கட்டியது என்பதைக் கண்டுபிடிக்க சில வழிகள் இருக்கின்றன. ஆம்! அது அந்தக் கோயிலின் தூண்கள்தான். கோயில்களில் உள்ள தூண்களின் வடிவமைப்பை பார்த்தே அந்த கோயில் எந்தக் காலத்தில், யாருடைய ஆட்சியில்  கட்டியது என்று தெரிந்து கொள்ளலாம்.

பல்லவர் காலக் கோயில்
பல்லவர் காலக் கோயில்

பல்லவ காலம்: பல்லவ காலத் தூண்களில் நுணுக்கமான வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல், பெரும்பாலும் வெற்றிடமாக இருக்கும். தரையிலிருந்து ஒரே கல் பாதி அளவு இருக்கும். அதற்கு மேல், கீழ் இருந்ததை விட சற்று அகலமாக சிறிய நீளத்துடன் இருக்கும். பிறகு குறுகலான அகலத்தில் அதே அளவு நீளத்தில் ஒரு கல் இருக்கும். இந்த மூன்று கற்களின் மேல் அடுக்கடுக்காக கிடைமட்டமாகக் கற்கள் அடுக்கப்பட்டிருக்கும். அதன்பின்தான் மேலே தூண் வளைந்து முடிந்திருக்கும். அந்த வளைவின்  வடிவமைப்பு படிப்படியான கற்கள் தலைகீழாகத் தரையைப் பார்த்திருப்பது போல் இருக்கும்.

சோழர் காலக் கோயில்
சோழர் காலக் கோயில்

சோழர் காலம்: கீழே உள்ள மூன்று கற்களில் முதல் கல் பல்லவ கால தூண் போல்தான் இருக்கும். இரண்டாவது கல்லில் செங்குத்தான கல் சிறிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பிறகு கிடைமட்ட கற்கள் இரண்டிற்கு பிறகுதான் மூன்றாவது கல் டீ கப் போன்று தலைகீழாக வளைந்து இருக்கும். அந்தத் தூணின் முடிவும் ஒரு சதுரங்க வடிவில் மேற்கூரையுடன் இணைந்திருக்கும். அந்த சதுரங்க வடிவின் இரு பக்கமும் இரு கோடுகள் குறுக்காக இருக்கும்.

பாண்டியர் காலக் கோயில்
பாண்டியர் காலக் கோயில்

பாண்டியர்கள் காலம்: இதில் நான்கு கற்கள் செங்குத்தாக இருக்கும். இரண்டாவது கல்லிலிருந்து நான்கு திசைகளிலும் நான்கு கற்கள் வைத்திருப்பதுபோல் சதுரங்கமாக இருக்கும். கிடைக்கல்லிற்கு பதிலாக ஒரு முழு தாமரை மலர் வடிவமைக்கப்பட்டிருக்கும். பின் மேற்கூரையை தொடும் சதுரங்க கல்லிற்கு கீழ் இருபுறமும் மலர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நாயக்கர் காலக் கோயில்
நாயக்கர் காலக் கோயில்

நாயக்கர் காலம்: நாயக்கர் காலத்தில் அடிப்பகுதியே கிடைக்கற்களால் தொடங்கி, பின் மூன்று கல் தூண்கள் இருக்கும். கிட்டத்தட்ட பாண்டியர் காலத்து தூண் போல்தான் கீழ் இருக்கும். அந்த மூன்று கற்களுக்கு மேல்தான் அவர்களுடைய கலை நயத்தைக் காட்டியிருப்பார்கள். மூன்று கற்களுக்கு மேல் ஒரு குடுவை போன்ற வடிவமைப்பு பின் கவிழ்க்கப்பட்ட கிண்ணம் போல் ஒரு வடிவம் இருக்கும். அதற்குப் பிறகு மேற்கூரையை ஒட்டி இருக்கும் சதுரங்க கல்லிற்கு இருபக்கமும் மலர் போன்ற வடிவம் வந்து, அதன் கீழ் மணி தொங்குவது போன்று வடிவமைத்து இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
சிற்பக் கலைக்கூடமாக விளங்கும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில்

இந்த நான்கு ஆட்சியர் காலத்துத் தூண்களைப் பார்த்து குழம்பிப்போனால், அதற்கும் ஒரு வழி உள்ளது. தூணின் மேல் வடிவமைப்பை வைத்து மட்டும் கண்டுபிடிக்கலாம்.

பல்லவ காலம் என்றால் மேலே படிக்கட்டு போல் அடுக்கடுக்காக இருக்கும். சோழர்கள் காலத்தில் சதுரங்க கல்லில் இரு கோடுகள் குறுக்காக இருக்கும். பாண்டியர்கள் காலத்தில் இருபுறமும் மலர் வடிவில் இருக்கும். நாயக்கர் காலத்தில் தூண்கள் மேல் தரப்பில் மலர் வடிவுடன் சேர்த்து மணி தொங்குவது போன்ற வடிவுடன் இருக்கும்.

இந்த ஈஸி ட்ரிக் வைத்து இனி எளிதாக கோயில்கள் எந்த ஆட்சிக் காலத்தில் கட்டியது என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com