கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்கப் பிரிவின் தலைமையகம் வாடிகன். அந்த நாட்டின் தலைவரான போப்தான் உலகின் மொத்த கத்தோலிக்கர்களுக்கும் மதத் தலைவர். இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம். அந்த ரோம் நகருக்குள் அமைந்திருக்கிறது வாடிகன். அதாவது ஒரு நகருக்குள் அமைந்திருக்கும் நாடு!
வாடிகனுக்கு என்ற தனி ராணுவம் கிடையாது. ஆனால், வாடிகனுக்குச் செல்பவர்கள் அந்த இடத்தைக் காவல் காக்கும் சிப்பாய்களைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். பல சுற்றுலாப் பயணிகளும் அவர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு அவர்களைப் பார்த்தவுடனே பிடித்துப்போகும். அதற்கு முக்கியக் காரணம் அவர்களின் பளிச்சென்ற உடை. ஆரஞ்சு, நீலப்பட்டைகளைக் கொண்டதாக அவர்களின் உடைகள் இருக்கின்றன. சிலரது உடைகளில் கூடுதலாக சிவப்பு மற்றும் மஞ்சள் பட்டைகளும் உண்டு. இந்த வீரர்கள் பரம்பரையாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களை ஸ்விஸ் கார்ட்ஸ் (Swiz Guards) என்று அழைப்பார்கள்.
வாடிகன் ஒரு நாடு (உலகின் மிகச் சிறிய நாடு) என்றபோதிலும் அது ஏன் தனக்கென்று ராணுவ வீரர்களை நியமித்துகொள்ளவில்லை? அதாவது வாடிகனுக்கு என்று ராணுவம் ஏன் இல்லை?
ஒரு காலத்தில் இருந்தது என்பதே சரித்திரம். ஆனால், ஆறாவது போப் 1970ம் வருடத்தில் ராணுவத்தைக் கலைத்துவிட்டார். வாடிகனுக்கு ராணுவப் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார். என்றாலும், ரோம் நகருக்குள் அமைந்திருப்பதால் வாடிகனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இத்தாலிக்கு இருக்கிறது. தார்மீகப் பொறுப்புதான்.
அப்படியே அதற்கென்று தனி ராணுவம் தேவையில்லை என்று அது நினைத்தாலும் வேறு நாட்டு வீரர்களைப் பயன்படுத்திக்கொள்ளாமல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வீரர்களை எதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்? காரணம் உண்டு.
சுவிஸ் ராணுவப் படை:
1506ல் போப் இரண்டாம் ஜுலியஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது சுவிஸ் ராணுவப்படை. வாடிகனிலுள்ள அரண்மனை மற்றும் போப்பின் பாதுகாப்புக்காக இந்த சுவிஸ் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்களுக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் ராணுவப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். குறைந்தது 5 அடி 8 அங்குலம் இருக்க வேண்டும். வயது 19லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
சுவிட்சர்லாந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகவும் ஏழ்மையான நாடாக இருந்தது. அந்த நாட்டைச் சேர்ந்த உடல் பலம் கொண்ட ஆண்கள் வெளிநாட்டு ராணுவங்களில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் நேர்மையானவர்கள், கட்டுப்பாடு மிக்கவர்கள் என்ற கருத்து பரவியதால், பல ஐரோப்பிய நாடுகளும் இவர்களைத் தங்கள் ராணுவங்களில் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கின. தவிர, ‘பைக் ஸ்கொயர்’ என்ற ஒரு குறிப்பிட்ட வகைத் தாக்குதலில் இவர்கள் தலைசிறந்து விளங்கினார்கள். இந்த யுத்த தந்திர முறையால் பெரும் ராணுவப் படைகளைக்கூட இந்த சிறு ராணுவப் படையால் வெல்ல முடிந்தது.
பொதுவாக, வாள் போன்ற பழைமையான போர்க் கருவிகளைத்தான் இவர்கள் வைத்திருப்பார்கள். என்றாலும் 1981 மே 13 அன்று போப் இரண்டாம் ஜான்பால் மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. இதற்குப் பிறகு துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.