நாடகம் - துபாக்கூர் டாக்டர்!

துபாக்கூர் டாக்டர்...
துபாக்கூர் டாக்டர்...

ந்தோஷி கிரியேஷன்ஸின் ‘துபாக்கூர் டாக்டர்’ காமெடி நாடகம், சமீபத்தில் விரார் தமிழ்ச் சங்க பொங்கல் விழா சமயம் சிறப்பாக நடைபெற்றது. மக்கள் ரசித்து, வயிறு குலுங்க சிரித்துப் பாராட்டினார்கள்.

ஆரம்பமே, அமர்க்களமாக சினிமா ஸ்டைலில் இருந்தது. “டேய் ரமேஷ்! நீ கிராமத்து மருத்துவமனைக்கு டாக்டராகப் போ!” என்று கண்ணம்பா ஸ்டைலில் தாயார் ராஜேஸ்வரி ஆணையிட, தாய் சொல்லைத் தட்ட இயலாமல், வேண்டாவெறுப்பாக, கிராமத்திற்குச் செல்கிறான் ரமேஷ். ஏற்கெனவே கிராமத்து மருத்துவமனையில் இருக்கும் கம்பவுண்டர் கந்தசாமி அரை வைத்தியனாக இருப்பதை அறிந்த ரமேஷிற்கு நிம்மதியாக இருக்கிறது. ரமேஷின் நடவடிக்கை மூலம், வந்திருக்கும் டாக்டர் ஜீரோ என கந்தசாமிக்குப் புரிந்தாலும், இருவரிடையே ஏற்படும் அட்ஜஸ்ட்மெண்டால் பேசாமல் இருக்கிறான்.

கிராமத்துவாசிகள் ஒரு சிலர் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வருகிறார்கள். எடக்குமடக்காகவும், உஷாராகவும் கேள்விகளைக் கேட்கும் அவர்களைச் சமாளித்து அனுப்புவதற்குள் உம்பாடு – எம்பாடு என ஆக, ரமேஷ் வெறுத்துப்போய் வீடு திரும்பி விடுகிறான்.

தாயாரோ, ‘விடாக்கண்டி கொடாக்கண்டி’ மாதிரி, தனது சிபாரிசினால், மீண்டும் ரமேஷை சிட்டியிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறாள். கந்தசாமியும் உடன் தொத்திக்கொள்கிறான். சிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் சரஸாவைப் பார்த்ததும், ரமேஷிற்கு காதல் ஏற்பட்டு, அது தொடர்கையில், கந்தசாமி நந்தி மாதிரி குறுக்கே வருகிறான். டாக்டருக்கு செம கடுப்பு ஆகிறது.

இதற்கிடையே மருத்துவமனையில் பணி செய்யும் பெண் தொழிலாளி குப்பாயி, தன்னுடைய கணவன் இன்டர்வியூ போன இடத்துல ராமாயணக் கதை சொல்லி அடிபட்டு வந்ததால், ரமேஷிடம் Bed allot செய்ய வேண்டுகிறாள். ரமேஷ் அவளிடம் விபரம் கேட்க, மச்சான் சொன்ன கதையை ஸ்டைலாகக் கூற, ஒரே சிரிப்பலைதான்.

இறுதியில் பெரிய லேடி டாக்டர் லூசி என்பவர் அந்த மருத்துவமனைக்கு வர, டாக்டர் ரமேஷ், கம்பவுண்டர், நர்ஸ் மூவருக்கும் டென்ஷனோ டென்ஷன். கிறுக்குத்தனமாக கேள்வி கேட்கும் லூசி டாக்டர், திடீரென கத்தியை எடுத்துக் காண்பித்து, இப்போது ஆபரேஷன் செய்யப்போகிறேன் என்று கூறி ரமேஷை துரத்த, என்ன ஆகுமோ? என்று பரபரப்பாக இருந்தது. கதையின் முடிவு எதிர்பாராத திருப்பம் எனலாம். நல்லதொரு நகைச்சுவை நாடகம்.

நாடகத்தில் சில காட்சிகள்...
நாடகத்தில் சில காட்சிகள்...

ராம்மோகன் இசை, ராம்கி, ஸ்ரீவித்யா, ஆர். மீனலதா Back stage: வைபவ் சாவந்த் ஒப்பனைக் கலைஞர். இவர்கள் கலைஞர்களுக்கு உதவியாக இருந்து நாடகத்தைச் சிறப்பிக்க உதவினார்கள்.

கம்பவுண்டர் கந்தசாமியாக வி.பி.ராம், குப்பாயியாக ஆர். மீனலதா, தாயார் ராஜேஸ்வரியாக ப்ரேமா, சிநேகிதி காமாட்சியாக விஷ்ணுப்ரியா, நர்ஸ் சரஸாவாக ப்ரியா, பெரிய டாக்டர் லூசியாக ஆஷா வரதன், கிராமத்து வாசிகளாகிய சனீஸ்வரனாக முத்துலிங்கம், கண்ணப்பனாக சங்கர், அருள்மணியாக ரமேஷ் நாராயணன் ஆகியோர் கதாபாத்திரத்திற்கேற்ப நன்றாக நடித்தனர்.

இதையும் படியுங்கள்:
Black Tiger: ஒரிசாவில் மட்டுமே காணப்படும் அதிசய புலி.
துபாக்கூர் டாக்டர்...

நாடகத்தின் கதை, வசனம், இயக்கம் இவைகளை செம்பூர் ஹரி சிறப்பாக செய்ததோடு, டாக்டர் ரமேஷாக நடித்து தூள் கிளப்பினார். (இதற்கு முன், இவர் பல அருமையான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

நாடகம் முழுக்க ஒரே சிரிப்பலைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com