

சங்க இலக்கிய நூல்களில் பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் ஆகும். ஆற்றுப்படை என்பது, ஒரு வள்ளலிடம் பரிசில் பெற்றுத்திரும்பும் ஒரு புலவன், எதிர்ப்பட்ட வேறொரு புலவனை, தான் பரிசில் பெற்ற தலைவனின் இயல்பு, கொடை முதலியவற்றைக் கூறி அவனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துவது ஆகும்.
ஆற்றுப்படை இலக்கிய வகையைச் சேர்ந்த மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இந்த நூலானது 583 அடிகளால் ஆக்கப் பெற்றது. “இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்” என்னும் புலவரால் நவிரமலையின் தலைவனான “பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் சேஎய் நன்னன்” என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. இருபத்திநான்கு கோட்டங்களைக் கொண்டது தொண்டை நாடு. அதில் ஒரு கோட்டம் பல்குன்றக் கோட்டம் ஆகும். நன்னன்சேஎய் நன்னனின் மற்றொரு பெயர் நவிரமலை வேந்தன். நவிரமலையானது தமிழ்நாட்டில் வேலூர் மற்றும் திருவண்ணாமலைக்கு இடையில் அமைந்த ஒரு ஊராகும்.
நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன.
இந்த நூலினை இயற்றிய புலவர் இசைத்தமிழிலும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த யாழ் முதலான பலவகையான இசைக்கருவிகளைப் பற்றிய ஞானமும் மிகுந்தவராக இருத்தல் வேண்டும். இதுமட்டுமின்றி ஐவகை நிலங்களைப் பற்றிய இயல்புகளையும் அத்தகை நிலங்களில் வாழும் மக்களின் இயல்பு மற்றும் வாழ்க்கை முறை மேலும் மன்னர்களின் இயல்பு முதலானவற்றில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவராக விளங்குவதை பாடல்களின் மூலம் அறியமுடிகிறது.
அக்காலத்தில் வழக்கில் இருந்த தமிழர்களின் இசைக்கருவிகளான பேரியாழ், முழவு, ஆகுளி, பாண்டில், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, குழல், தட்டை, எல்லரி, நெடுவங்கியம், கிணை, சிறுபறை, பதலை முதலானவற்றைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. பாட்டுடைத் தலைவனான நன்னைப் பாடி பரிசிலைப் பெறச் சொல்லும் பாணர் பலவகையான இசைக்கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன. சங்க கால நூலகளில் மலைபடுகடாம் ஒன்றே பதிமூன்று இசைக்கருவிகள் பற்றிக் கூறித் தனிச்சிறப்பு பெறுகிறது.
பாடல்
இறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்கு [132]
ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக்
கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்
காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல்
மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து
உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி
விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக்
குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக்
கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே [144]
பொருள்
சோளக் கதிரின் குலை முதிர்ந்திருந்தது. உழுந்து பயன் தரும் நிலையில் வெடித்து உதிரச் சுழன்றது. நாவல் பருவமில்லாத காலத்திலும் பயன் தந்து காற்றால் உதிர்ந்தது. கருவிளை என்றும், காக்கட்டான் என்றும் அழைக்கப்படும் உயவைக் கொடி நீர் ஊறிப் படர்ந்திருந்தது. கூவம்பழம் நூற்றுக்கணக்கில் பழுத்திருந்தன. சதைப்பிடிப்புள்ள இனிப்பு மாம்பழம் உண்ணும்படி வழிப்போக்கர்களைத் தடுத்து நிறுத்தியது. சிறுபலாக் காய்கள் அரலைக் கற்கள்போல் புண்பட்டு உதிர்ந்து கிடந்தன.
விரலால் அடிக்கும் ஆகுளிப் பறை (ஒரு வகை இசைக்கருவி) போல் ஆந்தை ஒலிக்கும் உயர்ந்த மலையிலுள்ள பலாமரக் கிளைகளில் காய்களும் பழங்களும் குலுங்கின. தலையிலும் தோளிலும் முழவையும் மற்ற இசைக் கருவிகளையும் பாணர் கூட்டம் சுமப்பது போல அம்மரங்கள் பலாப் பழங்களைத் தாங்க முடியாமல் சுமந்து வணங்கிக்கொண்டு நின்றன.
மலையின்கண் எழும்புகின்ற இருபது வகையான ஓசைகளும் ஒரு யானை பிளிறி எழுப்புவது போன்று புலவர்க்குத் தோன்றுகிறது. எனவே மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையை கடாமெனச் சிறப்பித்தனால் குறிப்பிட்ட நூலுக்கு மலைபடுகடாம் என்ற பெயர் ஏற்பட்டது.