“உண்மையான காதல் கதையில் வார்த்தைகள் கிடையாது. இதயத் துடிப்பு மட்டுமே உண்டு” என்பார்கள். “எங்கள் காதல் காலத்தால் அழியாதது. அது சாகாவரம் பெற்றது. எங்களுக்குப் பின்னாலும் நிலைத்திருக்கும்” என்று உலகிற்கு உணர்த்தும் வகையில், சிலர் தங்களிடம் அன்பு செலுத்திய நெஞ்சத்திற்கு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள். அவ்வாறு காலங்கள் மாறினாலும் தங்கள் காதலை சின்னங்களாக உலகிற்கு விட்டுச் சென்ற சில காதல் சின்னங்களை தற்போது பார்ப்போம்.
1. தாஜ்மஹால்
இந்தியா – உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், ஆக்ராவில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. முற்றிலும் பளிங்குக் கல்லினாலான இந்த கட்டிடம், முகலாயப் பேரரசர் ஷாஜஹான், இறந்து போன அவருடைய இளம் மனைவி மும்தாஜ் நினைவாக உருவாக்கயது.
இதனை உருவாக்க இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்கள் வேலை செய்தார்கள். கட்டப்பட்ட காலம் 1631 முதல் 1651க்கு இடைப்பட்டக் காலம். வருடத்திற்கு 70 முதல் 80 இலட்சம் மக்கள், இந்தக் காதல் மாளிகையைக் காண வருகிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கும் மேல் வெளி நாட்டவர்.
2.கெல்லி கோட்டை
மலேசியா – ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் கெல்லிஸ்மித், அவருடைய மனைவி ஆக்னஸுக்கு கட்டியது. இது மலேசியாவின் பத்துகாஜா என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இந்த கோட்டையின் வடிவமைப்பில் இந்திய, கிரேக்க, ரோமன் மற்றும் மூரிஷ் கட்டிடக் கலைகளின் சாயல் உள்ளது. 1910ஆம் வருடம் கோட்டை கட்டும் பணி ஆரம்பித்தது.
சென்னையிலிருந்து, 70 பணியாட்கள் கோட்டை கட்டும் பணிக்குச் சென்றார்கள். கோட்டை கட்டும் சமயத்தில், தொற்று நோய் பரவ, பெரும்பாலான பணியாட்கள் வேலைக்கு வருவதற்கு அஞ்சினர். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்கு முருகன் கோவில் கட்டினார் வில்லியம். கோட்டை கட்டி முடிப்பதற்கு முன்பாகவே, வில்லியம் 1926ஆம் வருடம் நோய் வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, இந்த கோட்டை மலேசியாவின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
3. பிரசாட் ஹின் பிமாய்
தாய்லாந்து நாட்டில் உள்ள பிரசாட் ஹின் பிமாய் ஒரு பெண் தன்னுடைய காதலனுக்காகக் கட்டியது. தாய்லாந்த் இளவரசர் பஜித், பௌத்த மதத்தைப் பின்பற்றும் போதி சத்துவர். அவர், தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேடி ஊர் ஊராகச் சென்றார். பெனாரஸ் நகரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கண்டு அவள் மீது காதல் வயப்பட்டார். ஆனால், அந்தப் பெண் விதவை என்பதால், அரசு சட்டத்தின் படி, அவளை மணம் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆகவே, கர்ப்பிணிப் பெண்ணிற்கு, பிறந்த பெண் குழந்தை, ஒராபிமா, 16 வயது அடைந்தவுடன் அவளை மணப்பேன் என்று சபதம் செய்தார். அதன்படி, இளவரசர் பஜித் மற்றும் ஒராபிமா ஒருவரையொருவர் மனதார நேசித்தனர். அழகியான ஒராபிமாவை மணக்கப் பலர் போட்டியிட்டனர். அதில் ஒருவனால், இளவரசர் பஜித் கொலை செய்யப்பட்டார். மனமுடைந்த ஒராபிமா, பிமாய் நகர் சென்று, காதலன் பஜித் நினைவாக இந்த சரணாலயத்தைக் கட்டினார். இந்த சரணாலயத்தை இந்து மற்றும் புத்த மதத்தினர் கோவில் என்பார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது.
4. பீபி கா மக்பரா
அவுரங்கபாத் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பீபி கா மக்பரா நினைவுச் சின்னம். தாஜ்மஹால் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப், அவருடைய மனைவி தில்ராஸ் பானு பேகத்தின் நினைவாக, இந்த காதல் சின்னத்தை 1660ஆம் வருடம் கட்ட ஆரம்பித்தார். அவருடைய மறைவிற்குப் பின், இந்த சின்னத்தைக் கட்டி முடித்தவர், அவருடைய மகன் ஆசம் ஷா.
தாஜ்மஹாலின், தலைமை கட்டிடக் கலைஞர் உஸ்தாத் அஹமத் லஹோரியின் மகன் அத்தாவுலா ரஷிதி இந்த சின்னத்தை வடிவமைத்தார். தாஜ்மகால் மற்றும் பீபி கா மக்ரா ஆகிய இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, சூரிய உதயத்திலும் மற்றும் அஸ்தமனத்திலும், இந்த காதல் சின்னங்கள் உயிரோட்டம் பெறுவது போலத் தோற்றமளிக்கின்றன.
5. ஸ்வீட்ஹார்ட் அபே
ஸ்காட்லாந்த் – 1268ஆம் வருடம் காலமான ஸ்காட்லாந்த் பிரபு, ஜான் பாலியோலின் நினைவாக அவரது மனைவி டெர்வெர்குல்லா . ஸ்வீட்ஹார்ட் அபே தேவாலயத்தைக் கட்டினார். 1273ஆம் வருடம் இந்த சின்னம் கட்டி முடிக்கப்பட்டது. கணவர் இறந்தவுடன், டெர்வேர்குல்லா, அவருடைய இதயத்தை எம்பால்ம் செய்து, தந்தம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கலசத்தில் தன்னுடன் வைத்திருந்தாள்.
அவளின் மறைவிற்குப் பிறகு, கணவருடைய இதயமும், அவளுடன் புதைக்கப்பட்டது. இந்த இடத்திற்கு லத்தீன் மொழியில் “டல்ஸ் கோர் அபே” என்று பெயர். இதன் பொருள் இனிமையான இதயம். ஆங்கில கட்டட பாணியில் சிவப்பு கற்களும், உள்ளூர் மணற்கற்களும் சேர்த்து கட்டப்பட்டது.
6. கொடை ஜி கோயில்
ஜப்பானில் உள்ள க்யோடோவில் – 1605ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த ஜென் புத்த கோயில். ஜப்பானை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர், சாமுராய் டொயோடோமி ஹிடேயோஷி. அவர் இறந்த பின்னால் அவரது மனைவி நேனே அல்லது கீடாநோ மண்டகோரா இந்த கோயிலைக் கட்டினார்.
நேனே, தன்னுடைய பெயரை கோகெட்சுனி என்று மாற்றிக் கொண்டு இந்தக் கோயிலின் பூசாரியாகப் பணி புரிந்தார். இந்தக் கோயிலைச் சார்ந்துள்ள தோட்டங்கள் வரலாற்று சிறப்பு கொண்டது என்பதுடன் இயற்கை எழில் கொண்ட இடமாகவும் அமைந்துள்ளது.