கறுப்பு வண்ணதுக்கு, எரிந்த விளக்குத் திரிகள்! அஜந்தா குகை அற்புதங்கள்!

Ajanta Cave
Ajanta Cave
Published on

மஹாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாதிலிருந்து வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அஜந்தா குகைகள் என்ற சிற்ப உலக அதிசயம். இங்கு சிற்பங்கள் மட்டுமல்ல, ஓவியங்களும் நம் கண்களைக் கவர்கின்றன. 

மொத்தம் இருபத்தொன்பது குகைக் கோயில்கள் கொண்ட இந்தத் தொகுதியைப் பற்றி முழுமையாக ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். ஆனாலும், அவற்றின் சில சிறப்பியல்புகளை மட்டும் இங்கே நாம் பார்க்கலாம்.

1819ம் ஆண்டு காட்டுப் பகுதியில் வேட்டையாடச் சென்ற ஜான் ஸ்மித் என்ற  ஆங்கிலேயர் கண்களில்தான் முதன் முதலாக இந்தக் குகைக் கோயில்கள் பட்டன. அதற்கு முன் சுமார் 2000 வருடங்களாக கவனிப்பாரற்று கிடந்த இந்த பொக்கிஷம், அதன் பிறகுதான் பலரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தது. 

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்தத் துறவிகளால் உருவாக்கப்பட்ட இந்த குகைகள் நுணுக்கமான கட்டிடக் கலை, அற்புதமான ஓவியங்கள் மற்றும் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பேரழகு சிற்பங்களைக் கொண்டிருக்கின்றன. புத்த ஜாதகக் கதைகள், புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியன சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்றன; நம்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் சென்றுவிடுகின்றன என்றால் மிகையில்லை.

Ajanta Cave
Ajanta Cave

இவற்றில் ஒரு குகைக் கோயிலில் இருபத்தெட்டுத் தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தூணின் உச்சியிலுள்ள கலசம் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் நான்கு பக்கங்களிலும் புத்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் வசீகரமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இதைவிட, மான்கள் சிற்பம் ஒன்று நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. ஆமாம், நான்கு மான்கள் – இரண்டு நின்று கொண்டும், இரண்டு அமர்ந்து கொண்டும். ஆனால் இந்த நான்குக்கும் ஒரே தலை! அதாவது தலையோடு ஒவ்வொரு மானையும் நாம் தனித்தனியாகவும் பிரித்துப் பார்க்க முடியும்!

இன்னொரு குகையில் தம் விரல்களை தர்ம சக்கர முத்திரையாகக் காண்பித்தபடி பத்மாசனத்தில் புத்தர் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார். மாயையின் தூதுவர்களாக மனிதர்களும், விலங்குகளும், காதலில் ஈடுபட்டிருக்கும் ஜோடிகளும், அவருடைய தவத்தைக் கலைக்க முயற்சிக்கிறார்கள். இந்தச் சிற்பத் தொகுதியில் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் அத்தனை கலையம்சம், நுணுக்கம், துல்லியம்!

Ajanta Cave
Ajanta Cave

புத்தர் தன் உடலைத் துறக்கும் மகா பரிநிர்வாணத் தருணத்தையும் இங்கே சிற்பமாகக் காணலாம். வலது கையைத் தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு ஒருக்களித்து படுத்திருக்கும் கோலம். இடது கரம் நீண்டு உடல்மேல் படர்ந்திருக்கிறது. தலையணை அவருடைய முக பாரத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் வகையாக அந்தப் பகுதியில் சற்றே பள்ளம் உண்டாகியிருப்பதும் பிரமிப்பை உண்டாக்குகிறது. அவருடைய முகத்தில் ஒளிரும் சாந்தம், அணிந்திருக்கும் ஆடையின் மென்மை, விரல் நகங்களின் நுட்பம் எல்லாம் கல்லில் எப்படி சாத்தியமாயிற்று என்றே நம்மை வியக்க வைக்கின்றன. அவருடைய பிரிவைத் தாங்க இயலாத சீடர்கள் அருகே சோகமாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த பாவமும் வெகு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது.  

குகைகளின் கற்சுவர்களின் மீது களிமண், பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றின் கலவையைப் பூசி அந்த வழவழப்பின் மேல் வரையப்பட்ட, நூற்றாண்டுகளையும் கடந்து ஒளிரக் கூடிய வண்ண ஓவியங்கள் நம்மை அங்கிருந்து நகர விடாமல் காட்சியால் அணை கட்டுகின்றன. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை ஆகிய அடிப்படை வண்ணங்களை தாவரங்கள் மற்றும் தாதுப்பாறைகளிலிருந்து உருவாக்கி இந்த ஓவியங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற தொழில் நுணுக்கத்தை நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. எரிந்த விளக்குத் திரிகள் கறுப்பு வண்ணத்தைத் தந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! 

இந்த வர்ணனை வெறும் சாம்பிள்தான். நேரே போய்ப் பார்த்தோமானால் திரும்பி வர மனமிருக்குமா என்பது சந்தேகமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com