Thiruvalluvar
Thiruvalluvarcredit to quora

வள்ளுவர் கலங்கிய அந்த தருணம் யாருக்காக?

Published on

-தா சரவணா

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர். ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார். யாருக்காக ? எப்போது? என்று பார்ப்போம்.

திருவள்ளுவரின் மனைவி வாசுகி தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லையாம். அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். 

திருவள்ளுவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லையாம்.  ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கேட்பது என்று அமைதியாக இருப்பாராம். இதற்கான காரணத்தை அந்த அம்மையார், தான் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

"சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால், ஊசியில் குத்தி, கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும்" என்றாராம் திருவள்ளுவர். மேலும், "நீ பரிமாறுகையில் சோற்று பருக்கைகள் சிந்தியதே கிடையாது. அதனால் அதன் பயன்பாடு உனக்குத் தெரியாமல் போயிட்டு," என நெகிழ்ச்சியாக தன் மனைவி வாசுகி இடம் சொன்னாராம் திருவள்ளுவர்.

ள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர், வாசுகியிடம் "சோறு சூடாக இருக்கிறது. விசிறு" என்றுள்ளார். பழைய சோறு எப்படி சுடும்? அந்த அம்மையார் எதிர் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார் வாசுகி. 

அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்

பெருமை படைத்து இவ்வுலகு

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே  மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். 'நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை' என்பது இந்தக்குறளின் பொருள். 

இதையும் படியுங்கள்:
சிற்றிலக்கிய அந்தஸ்து பெற்ற புகழ்மிக்க கல்லறை வாசகங்கள்!
Thiruvalluvar

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல், 

"அடியிற்கினியாளே அன்புடையாளே

படிசொல் தவறாத பாவாய்-

அடிவருடி பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் -

இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார். 

"அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! "

என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்த சம்பவத்தை மனதிற்குள் அசை போட்டால் கல்யாண முறிவு என்பதே இல்லாமல் போய்விடும்.

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. உண்மைதானே?                        

logo
Kalki Online
kalkionline.com