இப்போது பூமியில் வாழும் மக்கள் வரலாற்றை அறிவதற்கு பெரிய அளவில் உதவிபுரிபவர்கள் தொல்லியல் துறையினர்கள். அந்தவகையில், சமீபக் காலத்தில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்த மிகச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளைப் பற்றி பார்ப்போம்.
இக்ஷ்வாகு அல்லது சூரிய வம்சம் ஆட்சிபுரிந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பானைகளுடன் சேர்ந்து சுமார் 3, 730 நாணயங்கள் தொல்லியல் துறையினர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் யானை சின்னமும், மற்றொரு பக்கத்தில் உஜ்ஜைன் சின்னமும் இருந்தன. இவை தெலுங்கானாவில் உள்ள பானகிரியில் கண்டுப்பிடிக்கப்பட்டன. இஷ்வாகு வம்சம் என்பது ராமாயண காலத்தின் ராமனுடைய ரகுவம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் வாட்நகர் என்றப் பகுதியில் 3,500 வருடங்களாக ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்து வந்த ஒரு பகுதி கண்டறியப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள முடிச்சு தலப்பள்ளியின் புறநகரில், 3,000 ஆண்டுகள் (Old Iron Age Period) பழமையானதாகக் கூறப்படும் வட்ட வடிவில் உள்ள புவியியல் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பந்தவார்க் பகுதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருந்தவை கண்டறியப்பட்டன. ஆனால், அந்தக் காலக்கட்டத்தின் நாகரிகத்தை பற்றிய கண்டுபிடிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டின் 8 இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் கீழடியில் படிகக் கல்லும் கண்டறியப்பட்டது குறிப்பிட வேண்டிய ஒன்று.
மகாராஷ்திராவில் உள்ள ராய்கட் கோட்டையில் நன்றாக வடிவமைக்கப்பட்ட வடிகல் அமைப்பு இருந்ததையும், போர்க்காலங்களில் தப்பிச் செல்வதற்காக ஒரு ரகசிய வழி இருந்ததையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.