தமிழர்களின் பழங்கால கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் காதோலை கருகமணி, பல நூற்றாண்டுகளாக பெண்களின் அழகையும், அடையாளத்தையும் வெளிப்படுத்திய பொருட்களாகும். பனை ஓலையால் சுருள் வடிவத்தில் செய்யப்பட்ட இந்த அணிகலன், தன் எளிமையான அமைப்பில் ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. கூடலூர் பகுதியில் வாழும் பனியர், கரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய கைவினைத் திறனைப் பயன்படுத்தி இக்காதோலையை உருவாக்கி வருகின்றனர்.
காதோலை கருகமணியின் தோற்றம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் பனை மரங்கள் அதிக அளவில் இருந்ததால், பனை ஓலையைப் பயன்படுத்தி அணிகலன்களைத் தயாரிக்கும் கலை பண்டைய காலங்களில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பனை ஓலையைக் கொண்டு எழுதுதல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து பனை ஓலையின் பயன்பாடு மிகவும் பழமையானது என்பதை நாம் அறிய முடிகிறது.
காலப்போக்கில் பனை ஓலையைப் பயன்படுத்தி பல்வேறு வகையான அணிகலன்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் காதோலை மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கியது. காதோலையின் வடிவமைப்பு மற்றும் அலங்காரம் காலத்திற்கு ஏற்றவாறு மாறி வந்தாலும், அதன் அடிப்படை அமைப்பு மாறாமல் இருந்துள்ளது.
காதோலை என்பது வெறும் அணிகலன் மட்டுமல்ல இது ஒரு சமூக, கலாச்சார அடையாளமாகும். குறிப்பாக, தமிழகத்தின் கிராமப்புற பெண்கள் காதோலையை பெருமையுடன் காதில் அணிந்து வந்துள்ளனர். காதோலையை அணிவது ஒருவரின் சமூக நிலை, திருமண நிலை போன்றவற்றைக் குறிக்கும் அடையாளமாக இருந்துள்ளது. மேலும, கருகமணி, கொசுதேனடை, போன்ற பொருட்களைப் பயன்படுத்தி காதோலையை அலங்கரித்தது பெண்களின் அழகை மேலும் அதிகரித்து காட்டியது.
காதோலையை தயாரிக்கும் முறை மிகவும் சிக்கலானது. முதலில் பனை ஓலையை சேகரித்து, அதை நீரில் வேகவைத்து சுத்தம் செய்வர். பின்னர், ஓலையை விரித்து உலர்த்தி அதை வேண்டிய அளவுக்கு சுருட்டி அதில் பாசிமனைகளை ஒட்டியோ அல்லது மர விதைகளை ஓட்டியோ அலங்கரிப்பர்.
கருகமணி என்பது ஒரு வகை கருப்பு நிற மணியாகும். இம்மணிகளை காதோலையில் பொதிந்து அதன் அழகை மேலும் அதிகரிப்பர். கொசுதேனடைய எனப்படும் ஒரு வகை கடல்வாழ் உயிரினத்தின் ஓட்டையும் காதோலையில் பொதிந்து அலங்காரம் செய்வார்கள். காதோலை கருகமணியை அந்த காலத்தில் பெண்கள் தாலியாக பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
காலப்போக்கில் இந்த அணிகலான்களின் பயன்பாடு இல்லாமல் போய்விட்டதால், அதை மறக்கக்கூடாது என்பதற்காகவே அந்த காலம் முதலிலே ஆடி மாத அம்மன் வழிபாடுகளுக்கு வீட்டில் வைத்து வழிபடப்படுகிறது. ஆடி மாதத்தில் காதோலை கருகமணி பயன்படுத்தி வழிபடுவது நம் முன்னோர்கள் காலம் தொட்டு பின்பற்றி வரும் ஒரு பாரம்பரியமான நம்பிக்கை. இது தீய சக்திகளை விரட்டி, தோஷங்களை நீக்கி, ஆரோக்கியத்தை தரும் என நம்பப்படுகிறது.
இனி உங்கள் வீட்டில் அம்மனை வழிபடும்போது காதோலை கருகமணி பயன்படுத்தினால், அதன் வரலாறு என்ன என்பதை பிறருக்கு கூறுங்கள். அந்த காலத்தில் தங்கத்திற்கு நிகராக தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட இந்த அற்புத ஆபரணத்தைப் பற்றி, நவீன கால தமிழர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.