அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி நாதஸ்வர இசைக்கு மயங்காத நபர்களே கிடையாது. திருவிழா, திருமணநாள், சடங்கு விஷேடம், கோவில் கொடை போன்ற அனைத்துக்கும் அக்காலத்தில் நாதஸ்வரம் பிரபலமாக விளங்கியது. அதில் குறிப்பிடத்தக்கவர் காருக்குறிச்சி அருணாசலம் பிள்ளை. திருநெல்வேலி அம்பாசமுத்திரம் இடையே சேர்மாதேவிக்கு அருகில் காருக்குறிச்சி என்ற ஊர் உள்ளது. அக்காலத்தில் காருக்குறிச்சி கிராமத்தில் பண்ணை நடேச பிள்ளை என்பவர் நாதஸ்வர வித்வானாக இருந்தார். அவரைக் கண்டால் ஊரே எழுந்து நின்று மரியாதை கொடுக்கும்.
அதே ஊரில் பலவேசம் பிள்ளை செல்லம்மாள் தம்பதியருக்கு 1921 ஆம் ஆண்டு அருணாசலம் பிள்ளை மகனாக பிறந்தார். பலவேசம் பிள்ளையும், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை - நீடாமங்கலம் சண்முக வடிவேல் இவர்களிடம் நாதஸ்வரம் இசை பயின்று திரைப்படங்களிலும் அக்காலத்தில் வாசித்துள்ளார்.
அதேபோன்று தன் மகனும் நாதஸ்வரத்தில் புகழ் பெற வேண்டும் என எண்ணி தன் மகன் அருணாசலத்திற்கு பயிற்சி அளித்தார். அக்காலத்தில் சினிமா திரை அரங்குகளில் படம் போடுவதற்கு முன்பு நாதஸ்வர இசை ஒலிக்கும். தவில் வித்வான்கள் திருமுல்லைவாயில் முத்து வீரப்ப பிள்ளை, சண்முகசுந்தரம் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகம் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் .
அந்தக் காலத்தில் அருணாசலம் பிள்ளை தன் முயற்சியால் கிராமபோன் இசைதட்டு வெளியிட்டார். அது மிகவும் பிரபலமானது. கோவில் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் இவரைத்தான் கச்சேரிக்கு அழைப்பார்கள். அதுபோன்று பிரபலமானவர்களும் இவரை தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு நாதஸ்வரம் வாசிக்கச் சொல்வார்கள். கொஞ்சும் சலங்கை படத்தில் எஸ் ஜானகி பாட சிங்காரவேலனே தேவா என்ற பாடலுக்கு இவர் தான் நாதஸ்வரம் வாசித்தார். அக்காலத்தில் அந்தப் பாடலுக்கு மயங்காதவர்கள் கிடையாது.
அன்றும் சரி இன்றும் சரி இந்தப் பாடல் பல மேடைகளில் பாடப்பட்டு வருகிறது. இவர் குறிப்பாக காட்டு மல்லி சுப்பையா, விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோரிடம் முறையாக நாதஸ்வரம் பயின்றார். அக்காலத்தில் இ பி சரோஜா டி ஆர் ராமண்ணா, எம் கே ராதா குசலகுமாரி ஆகியோர் இவருக்கு நெருங்கிய நண்பர்கள், இதன் மூலம் சினிமாவில் பிரபலமானார்.
காருக்குறிச்சியில் இவர் தன் வீட்டிற்கு ராஜ ரத்தின விலாஸ் என பெயர் சூட்டி உள்ளார். எழுத்தாளர் கி ராஜநாராயணன் இவருக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.
தென் மாவட்டங்களில் கோவில் விழாக்கள், திரை அரங்குகளில், அக்காலத்து டூரிங் தியேட்டர் இவற்றில் இவரின் நாதஸ்வர இசையை கேட்கலாம். கோவில்பட்டியில் ஒரு புது வீடு கட்டினார். அதன் திறப்பு விழாவிற்கு திரை உலகமே திரண்டு வந்தது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்றோர் இவருக்கு நெருங்கிய நண்பர்கள்.
இவர் கடைசியாக திருக்குறுங்குடி பெருமாள் கோவிலில் திருவிழாவின் போது நாதஸ்வர இசை கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 1964 ஏப்ரல் எட்டாம் தேதி தனது 43 வது வயதில் இயற்கை எய்தினார்.
திருக்குறுங்குடி பெருமாள் தன் வசம் அழைத்துக் கொண்டார். இன்றும் இவரது இசை பட்டி தொட்டி எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்னிசை கச்சேரி பாடல் பாடுபவர்கள் சிங்காரவேலனே தேவா என்ற பாடலை நாதஸ்வரத்துடன் பாடுவது இன்றும் காணலாம்.
காருக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் இவரின் நினைவாக இவருக்கு ஒரு திருஉருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. காருக்குறிச்சி என்றாலே அருணாசலம் பிள்ளை என்பவர்தான் நினைவுக்கு வருவார். இவருக்கு பிறகு எத்தனையோ நாதஸ்வர வித்வான்கள் வந்தாலும் இவருக்கு இணை ஆகாது.