பால்பாயிண்ட் பேனாவின் கதை!
இன்று பால்பாயிண்ட் பேனா ஒரு ரூபாய்க்குக் கூட சர்வசாதாரணமாய் கிடைக்கிறது. வீட்டிலிருந்து பேனா எடுத்துச் செல்ல மறந்து விட்டாலும் பேனாக்களை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம். ஒரு முறை உபயோகித்து விட்டு தூக்கி எறியக் கூடிய பால்பாயிண்ட் பேனாக்களை பெரும்பாலோர் விரும்பி உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்று நாம் சர்வசாதாரணமாய் உபயோகிக்கக் கூடிய பால்பாயிண்ட் பேனாக்களை உருவாக்க பலர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்த வரலாற்றை இப்பதிவில் சற்று சுருக்கமாக பார்ப்போம்.
1888 ஆம் ஆண்டு ஜான் லவ்ட் எனும் அமெரிக்கர் உருளும் சின்னஞ்சிறிய பந்துடன் கூடிய ஒரு பேனாவை உருவாக்கினார். இப்பேனாவில் மையை நிரப்பும் ஒரு அமைப்பும் இருந்தது. இந்த கண்டுபிடிப்பை இவர் பதிவு செய்து உரிமை பெற்றார். இதன் பின்னர் இதே போன்ற அமைப்புடன் சுமார் 350 பேர்கள் இது போன்ற பேனாக்களை உருவாக்கினார்கள்.
ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட பால்பாயிண்ட் பேனாக்களில் ஒரு சிக்கல் என்னவென்றால் அதனுள் நிரப்பப்பட்ட மை. இந்த மை நீர்த்துப்போன தன்மை உடையதாக இருந்தால் முனையிலிருந்து ஒழுகத்தொடங்கியது. மை சற்று கடினமாக இருந்தால் பேனாவின் முனையிலுள்ள உருளும் பந்தை அடைத்துக் கொண்டு எழுத இயலாமல் போனது.
1935 ஆம் ஆண்டில் ஹங்கேரியைச் சேர்ந்த பைரோ மற்றும் அவரது சகோதரர் ஜார்ஜ் இருவரும் ஒரு நல்ல பால்பாயிண்ட் பேனாவை உருவாக்க திட்டமிட்டார்கள். பைரோ ஒரு நியுஸ் பேப்பருக்கு எடிட்டராக இருந்தார். இதற்காக வேலை செய்யும் போது அவர் உபயோகித்த பேனாவில் அடிக்கடி மையை நிரப்ப வேண்டியிருந்தது. இதனால் நேரம் வீணானது. மேலும் அந்த பேனாவின் கூரான முனை பேப்பரை அடிக்கடி கிழித்தது. இந்த பிரச்சினையை சமாளிக்க ஒரு நல்ல பால்பாயிண்ட் பேனாவை உருவாக்க திட்டமிட்டார்.
இருவரும் ஒரு பால்பாயிண்ட் பேனாவை வடிவமைத்தார்கள். அந்த வடிவமைப்பை அர்ஜென்டைனாவின் குடியரசு தலைவர் அகஸ்டின் ஜஸ்டோவிடம் காண்பித்தார்கள். இந்த கண்டுபிடிப்பைக் கண்டு மகிழ்ந்த அகஸ்டின் ஜஸ்டோ உடனே ஒரு தொழிற்சாலையை நிறுவ உத்தரவிட்டார். இந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் வந்ததால் இந்த திட்டம் தடைபட்டது.
இதன் பின்னர் இருவரும் தங்கள் கண்டுபிடிப்பை செயல்படுத்தினார்கள். மையின் ஓட்டம் சரியாக இல்லாததால் இந்த கண்டுபிடிப்பும் தோல்வியைத் தழுவியது. இதன்பின்னர் இவர்கள் இருவரும் ஒரு வருடம் உழைத்து தங்கள் வடிவமைப்பை மாற்றி அமைத்து குறைகளை சரிசெய்தார்கள். அமெரிக்காவின் எபெர்ஹார்ட் பேபர் கம்பெனி பைரோ சகோதரர்களுக்கு 500000 டாலர்களைத் தந்து அவர்கள் வடிவமைத்த பால்பாயிண்ட் பேனாக்களின் தயாரிக்கும் உரிமையை வாங்கியது.
பால்பாயிண்ட் பேனாக்கள் 1945 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் ஒரு கடையில் தினசரிகளில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதுவரை இங்க் பேனாக்களில் எழுதிக் கொண்டிருந்தவர்களை இந்த விளம்பரம் மிகவும் கவர்ந்தது. ஒரு முறை வாங்கும் பால்பாயிண்ட் பேனாக்களை இங்க் ஏதும் ஊற்றாமல் சுமார் இரண்டு வருடங்கள் வரை உபயோகிக்கலாம் என்ற விளம்பரம் மக்களை பெரிதும் கவர்ந்தது. அன்று சுமார் 5000 மக்கள் அந்த கடையின் முன் பால்பாயிண்ட் பேனாக்களை வாங்க கூடிவிட்டனர். அன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 10000 பேனாக்கள் விற்றுத் தீர்ந்தன. அப்போதைய ஒரு பால்பாயிண்ட் பேனாவின் விலை 12 டாலர்கள். ஆனால் விளம்பரம் செய்தது போல அந்த பேனாக்கள் சரியாக எழுதவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பால்பாயிண்ட் பேனாக்களே வெற்றிகரமான பேனாக்களாக விளங்கத் தொடங்கின. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மார்செல் பிச் (Marcel Bich) என்பவர் பைரோ சகோதரர்களை சந்தித்து தான் சிறந்த பால்பாயிண்ட் பேனாக்களை குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் தயாரிக்க விரும்புவதாகச் சொல்லி அவர்களிடம் ஒப்புதல் பெற்றார். இதன் பின்னர் மார்செல் பிச் மைக்ரோஸ்கோப்புகளை வைத்துக் கொண்டு கடைகளில் விற்கப்பட்டு வந்த பலவிதமாக பால்பாயிண்ட் பேனாக்களை வாங்கி இரண்டு வருடங்கள் கடுமையாக ஆராய்ச்சி செய்தார்.
1952 ஆம் ஆண்டு பிச் தனது கடுமையான உழைப்பின் பலனாக குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் ஒழுகாத எப்படி வேண்டுமாலும் பிடித்து எழுதத்தக்க பால்பாயிண்ட் போனாக்களை வடிவமைத்தார். மக்கள் இந்த பேனாக்களை மிகவும் விரும்பி வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.