Feb 14 Valentines day
Feb 14 Valentines day cdn.zeebiz.com

காதலர் தினத்துக்கு சொந்தகாரரான வாலண்டைன்! யார் இவர்?

லகெங்கும் பிப்ரவரி 14, வாலண்டைன் தினம் அல்லது காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14 வரை வாலண்டைன் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. வாலண்டைன் தினம் காதலை மட்டுமல்லாது, நட்பு, பாசம் ஆகியவற்றை நினைவு கூறும் தினம் என்றும் சொல்லாம். இந்த நாளில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொள்ளுதல், மலர் செண்டு அளித்தல், காதல் பரிசு அளித்தல் என்று பல வகையாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

வாலண்டைன் என்பவர் யார்?

மூன்றாவது நூற்றாண்டில், செயின்ட் வாலண்டைன், ரோம் நகரில் வசித்த கத்தோலிக்கப் பாதிரியார். ரோம் நாட்டின் அரசர், க்ளாடியஸ், பேகன் மதத்தைச் சேர்ந்தவர். அப்போது, ரோம் நாட்டுக் குடிமக்கள் பலர் கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தனர். இதனைத் தடுப்பதற்கு, அரசர் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தார். ரோமானியப் படை வீரர்கள், தங்களுடைய வாழ்க்கையை நாட்டிற்கு முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டுமென்றும், படை வீரர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் சட்டமியற்றினார்.

Feb 14 Valentines day
Feb 14 Valentines day

செயின்ட் வாலண்டைன், படைவீரர்களுக்கு ரகசியமாக, கிறித்துவ முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இதனால், அன்பை கொண்டாடும் பாதிரியார், என்று மக்களிடையே அறியப்பட்டார். ஆட்சிக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாக வாலண்டைன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த போது, மற்றக் கைதிகளின் நன் மதிப்பைப் பெற்றார் வாலண்டைன். கண் பார்வை இழந்த, சிறை அதிகாரியின் மகள் கண் நோயினை செயின்ட் வாலண்டைன் குணப்படுத்தினார். அரசரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, வாலண்டைன் கொல்லப்பட்ட தினம் 14, பிப்ரவரி இறப்பதற்கு முன்னால், சிறை அதிகாரியின் மகளுக்கு காதல் கடிதம் அனுப்பி, அதில் ‘உன்னுடைய வாலண்டைன்’ என்று கையொப்பம் இட்டிருந்தார்.

இது நடந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 14ஆம் தேதி செயின்ட் வாலண்டைன் தினம் என்று அறிவிக்கப்பட்டது. ரோமாபுரியில், கிறித்துவ மதம் பரவி, பேகன் மதம் முற்றிலும் அழிக்கப்பட்டது. பிப்ரவரி 14ஆம் தேதி, பேகன் மதத்தைப் பின்பற்றுவோர், “கருவுறுதல் சடங்கு” நடத்துவார்கள். இந்தப் பண்டிகையை முற்றிலுமாக ஒழித்த போப், பிப்ரவரி 14, வாலண்டைன் தினம் என்று கத்தோலிக்க நாட்காட்டியில் பதிவு செய்தார்.

செயின்ட் வாலண்டைன் தினத்திற்கும், காதலுக்கும் இணைப்பை உருவாக்கியவர், பதிநான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த, “ஆங்கிலக் கவிதையின் தந்தை” என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி சாசர். இந்த நாள், தன்னுடைய மனதிற்குப் பிடித்த நபரிடம் காதலை ரகசியமாக வெளிப்படுத்தும் நாளாக உருமாறியது. இந்த வழக்கம் ஐரோப்பா முழுவதும் பரவியது. சில நாடுகளில், இந்த நாளில், காதல் சம்பந்தமான பிரச்சனைகளில், பெண் நீதிபதிகள் விசாரித்து தீர்ப்புகள் வழங்குவர்.

சில கலாச்சாரங்களில், இந்த நாள் காதலர் தினமாக அல்லாமல், குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் அன்பை வெளிப்படுத்தும் நாளாக அறியப்படுகிறது. குழந்தைகளுக்கு, சாக்லெட் மற்றும் பரிசளித்து அன்பை வெளிப்படுத்துவார்கள். காதலன், காதலியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்பதற்கு சிறந்த நாளாக, காதலர் தினம் கருதப்படுகிறது.

வாலண்டைன் வாரம்

பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வாலண்டைன் வாரமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் தனிப் பெயர் இருக்கிறது.

பிப்ரவரி 7 : காதலர் வாரத்தின் முதல் நாளிற்கு ‘ரோஸ் டே” (ரோஜா தினம்) என்று பெயர். இந்த நாளில் அன்புக்குரியவர்களுக்கு பூக்கள் மற்றும் பூங்கொத்து அனுப்புவார்கள். சிவப்பு நிறப் பூக்கள், காதலின் ஆழத்தைக் குறிப்பதாகக் கூறுவார்கள்.

பிப்ரவரி 8 : முன்மொழியும் நாள். காதலன் தன்னுடைய காதலியிடம், அல்லது காதலி, காதலுடன் தன்னுடைய அன்பை வெளிப்படையாக எடுத்துரைத்து, காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்பை நேரிடையாகவோ, கடிதம் மூலமாகவோ வெளியிடலாம்.

பிப்ரவரி 9: சாக்லெட் தினம். காதலர் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பது சாக்லெட், ஏனென்றால் அவை அன்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. அவன் அல்லது அவளுக்குப் பிடித்த சாக்லெட் பெட்டிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு, அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

பிப்ரவரி 10: “டெட்டி டே” – பொம்மைக் கரடி தினம். பெண்களுக்கு மிகவும் பிடித்த பொம்மை, பல வண்ணங்களில் கிடைக்கும் பொம்மைக் கரடி. வாழ்நாள் முழுவதும் பெண்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பரிசு இந்த வகையான பொம்மைகள். காதலிக்குப் பிடித்த நிறத்தில், இந்த நாளில் பரிசளிப்பார்கள்.

பிப்ரவரி 11 : “ப்ராமிஸ் டே” – வாக்குறுதி நாள். எந்த நிலையிலும் உன்னை நான் பிரிய மாட்டேன் என்று காதலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாள்.

பிப்ரவரி 12 : “ஹக் டே” அரவணைப்பு நாள். தம்பதிகள் இடையேயான அன்பான அரவணைப்பு, ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வார்த்தைகளினால், வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகள் அரவணைப்பில் வெளிப்படுகின்றன.

பிப்ரவரி 13: “கிஸ் டே” “முத்த தினம்” காதலர்கள் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த முத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் நாள்.

பிப்ரவரி 14: காதலர் தினம். தம்பதிகளின் நெருக்கத்தை மதிக்கும் நாள். தரமான நேரத்தை ஒன்றாக அனுபவிப்பதின் மூலம், தம்பதிகள் மற்றும் காதலர்கள் இடையே பிணைப்பு வலுவடைகிறது.

logo
Kalki Online
kalkionline.com