
தினசரி நாம் உடுத்தும் உடைகள் முதல் அணியும் நகைகள், வசிக்கும் வீடுகள், அலுவலகங்கள், பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணுவியல் தயாரிப்புகள் போன்றவற்றை உருவாக்கும் வடிவமைப்பாளர்கள் நம் அன்றாட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் ஆக்குகிறார்கள். அவர்களது முக்கியத்துவத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கலாச்சாரமும், அழகியலும்:
டிசைனிங் எனப்படும் வடிவமைப்பு நமது அன்றாட வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டது. நாம் உடுத்தும் உடைகள் என்பது வெறும் ஆடைகள் மட்டுமல்ல, அவை கலாச்சாரம், அடையாளம் மற்றும் ஒருவரின் தனிப்பட்ட ரசனையை, நேர்த்தியை வெளிப்படுத்துகின்றன. மக்களின் வயதுக்கேற்ப, அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப எவ்வாறு உடை அணிகிறார்கள் என்பதை சிறப்பாகக் கணித்து அதற்கேற்றாற் போல உடைகளை வடிவமைக்கிறார்கள். பெண்கள் அணியும் நகைகள், நுண்ணிய வேலைப்பாடுகளை மட்டும் மனதில் வைத்து செய்யப்படுவதில்லை. மாறாக கலாச்சார, உணர்வுபூர்வமான சில சமயங்களில் ஆன்மீக ரீதியான மதிப்பைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. நகை வடிவமைப்பாளர்கள் பாரம்பரியத்தை நவீன அழகியலுடன் கலந்து ஆபரணங்களை உருவாகும்போது அவை தனிக்கவனம் பெறுகின்றன.
வாழ்க்கைத் தரத்தை மேம்பாடு:
வடிவமைப்பு என்பது வெறுமனே கண்களுக்கு அழகாக காட்சியளிப்பது மட்டுமல்லாமல் அது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது. உதாரணமாக கட்டிடக்கலை என்பது கட்டிடங்களை வெறுமனே உருவாக்குவது என்றில்லாமல் மக்கள் வாழும் மற்றும் வேலை செய்யும் இடத்தை மேம்படுத்தும் விதமாக அமைக்கப்படுகிறது. மக்களின் பாதுகாப்பு, காலநிலை, வாழ்க்கை முறை போன்றவற்றை மனதில் கொண்டு தான் வடிவமைப்பாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை அழகாக வடிவமைக்கிறார்கள்.
கவனமும் நேர்த்தியும்:
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சமையல் கருவிகள் இவை அனைத்துமே பயன்படுத்தும் மக்களுக்கு ஏற்றவாறு மிக கவனமாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்படுகின்றன. அமரும் நாற்காலிகள் முதல், உணவு உண்ணும் தட்டு, கத்தி ஃபோர்க், ஸ்பூன் போன்றவை அனைத்துமே வடிவமைப்பாளர்களின் தனிப்பட்ட கவனத்திலும் செய்நேர்த்தியிலுமே உருவாகின்றன. காய்கறிகளின் தோலை மிக எளிதில் அகற்ற உதவும் பீலர்கள், காய்கறிகள் நறுக்க உதவும் கட்டர்கள், மிக விரைவாக மசாலாப்பொருட்களை அரைக்க உதவும் மிக்ஸர், கிரைண்டர்கள் போன்றவை பெண்களுக்கு வேலை செய்யும் நேரத்தைக் குறைத்து, வேலையை எளிதாக்கவும் செய்கின்றன.
மனநிலை மேம்பாடு:
நம் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தி, இவை யாவும் நமது கவனத்தைக் கவர்வதோடு மனதுக்கு மகிழ்ச்சியையும் தருகின்றன. காபி அருந்தும் பீங்கான் கோப்பைகள் அழகாக இருந்தால், ரசனையுடன் பானத்தைப் பருகலாம்.
சிந்தனை மிக்க வடிவமைப்புகள்:
நமது அன்றாட பிரச்னைகளை தீர்ப்பதிலும் வடிவமைப்பாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள். உதாரணமாக மழைக்காலத்தில் வெளியே செல்லும்போது அணிந்து கொள்ள வசதியான மழைக்கோட்டுகள் நமது பயணத்தை தடை செய்யாமல் இருப்பதுடன் நிம்மதியாக பயணம் செய்யவும் உதவுகின்றன. நாம் உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள் கூட நமது கைப்பையில் வைக்கும் வகையில் அழகாக சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹெல்மெட்டுகள், சீட் பெல்ட்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை புத்திசாலித்தனமாக சிந்தனை மிக்க வடிவமைப்பை பயன்படுத்தி செய்யப்படுகின்றன.
டிஜிட்டல் பயன்பாடுகள்:
மக்களின் வாழ்க்கையில் இணைபிரியாத ஒன்றாகிவிட்ட மொபைல் போன்கள் மற்றும் வலைதளங்கள் போன்ற டிஜிட்டல் பயன்பாடுகள் கூட வடிவமைப்பைச் சார்ந்து அமைந்திருக்கின்றன. பல்வேறு டிசைன்களையும், வசதிகளையும் கொண்ட மொபைல் போன்கள், கணினிகள், அணுகவும் பயன்படுத்தவும் எளிதான வலைதளங்கள் என பல்வேறு விதமான டிஜிட்டல் சார்ந்த பயன்பாடுகளையும் வடிவமைப்பாளர்கள் சிறந்த முறையில் கையாளுகிறார்கள்.
அழகு + வசதி;
நல்ல வடிவமைப்பு என்பது அழகை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொருட்களை பயன்படுத்துவதை எளிதாக்கவும் செய்கிறது. உதாரணமாக அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலிகள் பார்க்க ஸ்டைலாக இருப்பதுடன், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் விதத்தில் வசதியாகவும் வடிவமைக்கப்படுகின்றன.