இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோயில்களின் சிற்பக்கலை அழகு நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கலாம். அந்த வகையில், ‘இதுபோன்ற ஒரு சிற்பக் கலை அழகை இதுவரை பார்த்ததில்லையே’ என மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு திருத்தலம்தான் கர்நாடக மாநிலம், ஹலபேடு என்னும் ஊரிலே அமைந்திருக்கும் ஹொய்ஸ்சலேஸ்வரர் கோயில் ஆகும். இது 12ம் நூற்றாண்டில் ஹொய்ஸ்சல அரசனான விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்ட சிவன் கோயிலாகும். ஹொய்ஸ்சலேஸ்வரர் கோயிலை அந்த ஊரின் பெயரைக் கொண்டு ஹலபேடு கோயில் என்றும் அழைப்பார்கள்.
இக்கோயில் 14ம் நூற்றாண்டில் அலாவுதின் கில்ஜியால் சேதப்படுத்தப்பட்டது. தற்போது இக்கோயில் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. ஹொய்ஸ்சால வம்சத்தால் கட்டப்பட்ட பெரிய சிவன் கோயில் இதுவேயாகும். இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தைப் பற்றிய கதைகளைக் கொண்டதாக உள்ளது.
ஹொய்ஸ்சலேஸ்வரர் கோயில் இரட்டை கோயில்களைக் கொண்டது. ஹொய்ஸ்சலேஸ்வரா மற்றும் சந்தலேஸ்வரா கோயில்களாகும். இக்கோயிலில் சூரியக் கடவுளுக்கும் ஒரு சிறிய கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இனி, இக்கோயிலின் சிற்பத்தில் காணப்படும் அதிசயத்தைப் பற்றி பார்க்கலாம். உங்களிடம் முதன் முதலில் தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? கலிலியோ என்ற பதில் வருமல்லவா? ஆனால், இக்கோயிலில் எதிரிகளின் வருகையை தெரிந்துகொள்ள தொலைநோக்கி போன்று ஒரு கருவியை பயன்படுத்துவது போல சிற்பம் அமைந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், போரின்போது ஏவுகணை போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவது போன்ற சிற்பமும் இங்கிருப்பதை நன்றாக கவனித்தால் தெரியும். நம்முடைய முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கு கோயில்களில் வடிவமைத்திருக்கும் சிற்பங்களே ஆதாரமாகும். இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் இன்னும் பல விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
மகாபாரதப் போரின்போது அபிமன்யூ சக்கர வியூகத்தை உடைப்பதற்கு முயற்சித்து அதனுள் மாட்டிக்கொள்ளும் கதை நாம் அனைவரும் அறிந்ததே! அதை சிற்பத்தில் அழகாக செதுக்கியிருப்பதை இக்கோயிலில் காணலாம். சக்கர வியூகம் எப்படியிருக்கும் என்பதை இந்த சிற்பம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றையும் நாள் முழுவதும் கண்டு ரசித்து கொண்டேயிருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு நம்மை மெய்மறக்க வைக்கும் அழகைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இக்கோயிலுக்கு புனித யாத்திரையாக வருவதை விட, இக்கோயிலின் கலைநயத்தை ரசிப்பதற்கே அதிக சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இக்கோயிலை வாழ்வில் ஒருமுறையாவது கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய பட்டியலில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.