‘ஜெய் ஹிந்த்’ என்பது ஏதோ இரண்டு வார்த்தைகள் அல்ல. அது எழுச்சி கோஷம். இந்தியாவின் சுதந்திரத்தோடு பின்னிப்பிணைந்த கோஷம். இந்தியனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் நெருக்கமாக இருக்கும் - நெருக்கமாக இருக்க வேண்டிய - கோஷம். இதனால்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் மேல் வலது மூலையில், ‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தைகள் இடம் பெற்றன.
கைராட்டையின் மீது காந்திஜிக்கு இருந்த ஈடுபாடு நாடறிந்த ஒன்று. 1947ல் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கும் இளவரசர் பிலிப்புக்கும் திருமணம் நடந்தபோது அதற்கு பரிசாக காந்திஜி கொடுத்தது தனது கையால் நெய்த ஒரு நூலாடை (lace). அதன் நடுவில் நெய்யப்பட்டிருந்த வார்த்தைகள் ஜெய் ஹிந்த்! தங்களுக்குக் கிடைத்த வெகுமதியில் எதற்காக ஜெய் ஹிந்த் என்ற வார்த்தைகள் இடம் பெற்றன என்பதற்கான பொருளை அந்த பிரிட்டிஷ் அரச தம்பதியர் புரிந்துகொண்டிருப்பார்கள்.
இந்தியா வாழ்க என்பதையும் இந்தியா வெல்க என்பதையும் ஒருசேர உணர்த்துகிறது ஜெய் ஹிந்த். சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த பிரபல உரை கூட இறுதியில் ஜெய் ஹிந்த் என்றுதான் முடிந்தது. இந்தக் கோஷத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கினார் என்பது பொதுவான பிம்பம். ஆனால், உண்மை வேறு. ஜெய் ஹிந்த் என்பதை முதலில் உருவாக்கியவர் செண்பகராமன் பிள்ளை.
யார் இந்த செண்பகராமன் பிள்ளை?
இவர் விக்கிடி என்ற பெயரில் அதிகம் அறியப்பட்டவர். பிறந்தது திருவனந்தபுரத்தில் என்றாலும், அவரது பெற்றோர் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே ஐரோப்பாவுக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.
சுபாஷ் சந்திரபோஸ் இந்த கோஷத்தைப் பின்னர் பரவலாக்கியது உண்மை. இந்த கோஷத்தை அவருக்கு நினைவுபடுத்தியவர் ஜெய்னுல் ஆபிதீன் என்பவர். அப்போது ஹைதராபாத் கலெக்டராக இருந்தவர். பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் மேஜராக விளங்கியவர்.
அக்காலத்தில், இந்தியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஜெய் மா துர்கா, சலாம் அலைக்கும், ஸத் ஸ்ரீ அகல் என்பது போல அவரவர் மதத்தை நினைவு படுத்தும்படி முகமன் கூறிக்கொண்டிருந்தனர்.
தனது ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது இந்தியாவின் பெருமையைப் பரப்பும்படியான வார்த்தைகளைக் கூற வேண்டும் என்று விரும்பினார் சுபாஷ் சந்திரபோஸ். ஒன்றிணைந்த பாரதப் பிரதிநிதிகளாக அனைவருக்கும் ஒரே மாதிரியான கோஷத்தைத் தேர்வு செய்ய விரும்பினார். பலரும் பலவித யோசனைகளை முன்வைத்தனர். ஆனால், ஜெய்னுல் ஆபிதீன் கூறிய ஆலோசனையான ‘ஜெய் ஹிந்த்’ என்பது சுபாஷ் சந்திரபோஸுக்கு மிகவும் பிடித்துப்போனது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜெய் ஹிந்த் என்பது சுதந்திர நாட்டின் விடுதலைச் சின்னமாகவே ஆனது. இந்தியாவை ஆட்சி செய்த அத்தனை பிரதமர்களும் தங்கள் உரையில் ஜெய் ஹிந்த் என்று கூறுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இந்திரா காந்தி தனது அரசியல் உரைகளின் இறுதியில் மூன்று முறை அடுத்தடுத்து ஜெய் ஹிந்த் என்று கூறி, அந்த கோஷத்தை மக்களையும் எதிரொலிக்கச் செய்வார். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேதமின்றி பணிபுரியும் இந்திய ராணுவத்தில், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதெல்லாம் ஜெய் ஹிந்த் என்று கூறுவதை இப்போதும் கேட்கலாம்.
குஜராத் அரசும் மத்தியப் பிரதேச அரசும் சில வருடங்களுக்கு முன்பு பள்ளிச் சிறுவர்கள் வருகைப் பதிவேட்டின்போது, ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற வேண்டும் என்பதை கட்டாயமாக்கின. இளம் வயதிலேயே தேசப்பற்றை விதைக்க இது உதவும் என்பது உண்மைதானே?