
உலகம் முழுவதும் உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உச்ச தலைவராக போப் உள்ளார். கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப்பை, பிரதமர், அதிபர், அரசர் ஆகிய பதவிகளை வகிப்பவர்களை விட கிறிஸ்தவ மக்கள் அதிகம் மதிக்கின்றனர். அது போல கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் நாட்டுத் தலைவர்களும் தங்களை விட போப்பை உயர்ந்தவராக கருதுகிறார்கள். போப் என்றால் பரிசுத்த தந்தை என்று இத்தாலிய மொழியில் பொருளாம். ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள உலகின் மிகச்சிறிய நாடான வாட்டிக்கனின் நிர்வாகி போப் ஆவார்.
இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த நாடு, வெறும் 44 ஹெக்டேர் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. போப்பின் அதிகாரப் பூர்வமான குடியிருப்பு இந்தப் பகுதியில் தான் அமைந்துள்ளது. லத்தீன் அதன் அதிகாரப்பூர்வ மொழியாகும். பெண்களே இல்லாத இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 800 என்று கூறப்படுகிறது.
போப் இரண்டாம் ஜான் பால் 1996 ஆம் ஆண்டில், புதிய போப் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை நெறிமுறைப் படுத்தினார்.
பின்னர் பெனடிக்ட் XVI எந்த மாற்றங்களும் இல்லாமல் அந்த செயல்முறையை கடைப்பிடித்தார். இதன் படி..
80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்ந்தெடுக்க வாக்களிக்க முடியும். கார்டினல்களின் மொத்த எண்ணிக்கை 115.
வாடிகன் நகரில் உள்ள சிஸ்டைன் சேம்பர்லின் தேவாலயத்தின் போப்பின் தேர்தல் நடைபெறுகிறது.
ஒரு கார்டினல் போப் ஆக வேண்டுமானால், உலகெங்கிலும் உள்ள மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 77 கார்டினல்களின் வாக்குகள் வாங்கியவர் தான் போப் பதவிக்கு வர முடியும்.
காகிதத்தில் வாக்குச் சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஓட்டளிக்க பயன்படுத்தப் படுகிறது. இந்த வாக்கெடுப்பு ரகசியமாக நடைபெறும்.
தேர்தல் முடிந்த பின்னர் மூன்று கார்டினல்களைக் கொண்ட மூன்று குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. முதல் குழு ஆய்வாளர்கள் வாக்குகளை எண்ணுவார்கள். பின்னர் இரண்டாவது குழு திருத்துபவர் வாக்குகளை மீண்டும் எண்ணுகிறார். மூன்றாவது குழு சேவை என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் மற்ற கார்டினல்களிடமிருந்து வாக்குச் சீட்டுகளை சேகரிக்கின்றனர்.
போப் தேர்தலில் ஒவ்வொரு கார்டினலும் ஒரு நாளைக்கு நான்கு வாக்குகளைப் பதிவு செய்வார்கள். ஆய்வு செய்பவர் கார்டினல் வாக்குகளை எண்ணி மற்றொரு தட்டில் வைப்பார்.
ஒவ்வொரு சுற்று வாக்குப்பதிவிற்குப் பிறகும், வாக்குச் சீட்டுகளில் ஒரு சிறப்பு ரசாயனம் பூசப்பட்டு, அவை எரியும் ஒரு உலையில் போடப்படுகின்றன.
முதலில் கரும்புகையை வெளியேற்றும் இரசாயனத்தை தான் பூசுவார்கள். உலையின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேறினால் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
இறுதியில் வெண்புகை ரசாயனம் தடவிய வாக்குச்சீட்டுகளை உலையில் போட்டு எரிப்பார்கள். அப்போது வெள்ளைப் புகை வெளியேறும், அது போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப் தனது புதிய பெயரைத் தேர்ந்தெடுக்கிறார்.
போப் பதவிக்கு உண்டான ஆடைகளை அணிந்து கொண்டு பசிலிக்காவின் பால்கனிக்கு சென்று வெளியில் காத்திருக்கும் மக்களுக்கு ஆசி வழங்குவார்.
கத்தோலிக்க சபையின் சட்டங்களை போப் அமல்படுத்துவார். அவருக்கு கீழே தான் கார்டினல்கள், பிஷப்புகள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னிகாஸ்திரிகள் ஆகியோர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மீது புகார் இருந்தால், போப் இறுதி முடிவு எடுப்பார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாடிகன் வரும் மக்களுக்கு போப் ஆசி வழங்கி உரையாற்றுவார்.
போப் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகலாம். அதிகாரமும் மரியாதையும் மிக்க பதவி என்பதால், பதவி விலகுபவர்கள் குறைவு.
போப் செலஸ்டின் V மற்றும் போப் பெனடிக்ட் ஆகியோர் தானாக முன்வந்து போப்பதவியை விட்டு வெளியேறினர்.