தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாட்டம் என்றால், மராட்டிய மக்களுக்கு சங்கராந்தி பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாட்டமாகும். சங்கராந்தி பண்டிகையை மராட்டிய மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
மராட்டியர்கள் கொண்டாடும் விதம்: முதல் நாள் போகி பண்டிகையன்று கம்பு, சோள மாவு கலந்த ‘பாக்ரி’ ரொட்டி தயார் செய்து அதன் மீது வறுத்த வெள்ளை எள்ளை லேசாக தூவுவார்கள். இத்துடன் சேர்த்து சாப்பிட மிக்ஸ்ட் காய்கறிகளின் கூட்டு தயார் செய்து இரண்டையும் கடவுளுக்கு நிவேதனமாகப் படைத்து பின்னர் சாப்பிடுவார்கள்.
இரண்டாம் நாள் சங்கராந்தி பண்டிகை தினத்தன்று மைதா மாவினால் செய்த வெல்லப்போளி, தீல் கூட் லட்டு (எள்ளுருண்டை) ஆகியவற்றை தயாரித்து இறைவனுக்குப் படைத்து வணங்குகிறார்கள். மேலும் சிறு சிறு மண் பானைகளுக்குள் நிலக்கடலை, நறுக்கிய கரும்பு மற்றும் கேரட் துண்டுகள் போட்டு பூஜையில் வைத்து மறுநாள் அவற்றை உபயோகிக்கின்றனர்.
மூன்றாம் நாள் கிங்கரன் பண்டிகை. அசுப தினமாக இது கருதப்படுவதால், இன்று எந்தவிதமான நல்ல காரியங்கள் ஆரம்பிப்பதும் தவிர்க்கப்படுகிறது.
ஹல்தி குங்குமமும், தீல் கூட் லட்டுவும்: அநேக பெண்மணிகளை வீட்டிற்கு அன்புடன் அழைத்து, அவர்களை உபசரித்து, பரிசுகள் மற்றும் தீல் கூட் லட்டு கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள். தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இன்று வந்து செல்வார்கள்.
சங்கராந்திக்கு முக்கியமான தீல்கூட் லட்டுவை ஒருவர் மற்றொருவருக்கு கொடுக்கையில், ‘தீல் கூட் க்யா! கோட் - கோட் போலாஞ (என்னிடமிருந்து எள் லட்டுவை எடுத்து சாப்பிட்டு, எங்களிடம் இனிமையாகப் பேசு) என்று கூறுவது தவறாமல் நடக்கும். இந்நிகழ்வு ரதசப்தமி வரை தொடரும்.
முதல் (தலை) சங்கராந்தி: புதிதாக மணமுடித்து வீட்டிற்கு வந்திருக்கும் புது மருமகளுக்கு, முதலாவதாக வரும் சங்கராந்தி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. வெள்ளை எள்ளுடன் சீனிப்பாகு கலந்து செய்து கடைகளில் விற்கப்படும். ‘ஹல்வா’ எனப்படும் மாலையை புது மருமகளுக்கு அணிவிப்பார்கள்.
கருப்பு நிறப்புடைவை அல்லது கருப்பு நிற வேறு டிரெஸ்ஸை மருமகள் அணிவது கட்டாயம். அக்கம் பக்கத்திலிருக்கும் சுமங்கலிப் பெண்கள் பலர் வந்து புதுப்பெண்ணை வாழ்த்தி ஹல்தி - குங்குமத்தை அந்தப் பெண்ணின் நெற்றி மற்றும் முன்வகிட்டில் வைத்து தாங்களும் இட்டுக்கொண்டு, தீல் கூட் பெற்றுச் செல்வார்கள்.
அநேக வீடுகளில், இப்படி தங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு விருந்தே வழங்குவதும் உண்டு.