

உலகம் முழுவதும் ஆடப்படும் விளையாட்டுகளில் சீட்டாட்டமும் ஒன்று. நிறைய இடங்களில் காசு வைத்து சூதாட்டமாக சீட்டாட்டம் (The card game) நடக்கிறது. இந்த சீட்டாட்டத்தின் வரலாறு பழமையானது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சீட்டாட்டம் நடந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஜோசியம் சொல்வதுபோல, எதிர்காலம் கணிப்பதற்காகவே சீட்டுக்கட்டுகள் உருவாக்கப்பட்டன. குறிசொல்பவர்கள் தான் இதை கையில் வைத்துக் கொண்டு அதிர்ஷ்டம், இன்ப-துன்பங்களை சொல்லி வந்தனர்.
கிபி 1300 களில் எகிப்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவை தான் தற்போதைய சீட்டுக்கட்டுகள். இந்தியாவின் வடபகுதியிலும், சீன தேசத்திலும் இந்த சீட்டக்கட்டு ஆட்டம் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகம் சுற்றிய பயணியான மார்கோபோலோ, சீனாவில் இருந்து இந்த சீட்டாட்டத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆரம்பத்தில் ஓவியம் வரைந்த சீட்டுகளே பயன்பாட்டில் இருந்தது. ஸ்பெயினில் 40 அட்டைகளும், ஜெர்மானியர்கள் 36 அட்டைகளைக் கொண்டும் ஆடியிருக்கிறார்கள்.
பிரெஞ்சுக்காரர்கள் தான், 52 சீட்டுகளைக் கொண்டு ஆடும் வழக்கத்தை உருவாக்கினர். இவர்களே டைமண்ட், கிளாவர், ஆட்டின், ஸ்பேடு என 4 வகையான சீட்டுகளை கலந்து ஆடும் வழக்கத்தை பின்பற்றினர். சீட்டுக்கட்டில் உள்ள கருப்பு மற்றும் சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிக்கும்.
சீட்டுக்கட்டில் நான்கு ராஜாக்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் 'ஸ்பேட் ராஜா' என்பது டேவிட்டை குறிக்கும். 'ஹார்ட் ராஜா' சார்லஸ்யை குறிக்கும். 'டயமண்ட் ராஜா', ஜூலியஸ் சீசரை குறிக்கும். 'கிளவர் ராஜா', அலெக்சாண்டரை குறிக்கும். 18ம் நூற்றாண்டு வரை சீட்டு விளையாட்டில் ராஜாவுக்கே அதிக மதிப்பு இருந்தது. பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு ராஜாவை விட அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அதன் விளைவாக ராஜாவை விட 'ஏஸ் ' என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டது.
1832-ல் எந்திரத்தில் அச்சிட்ட சீட்டுக்கட்டுகள் வரத் தொடங்கின. நாளடைவில் எப்படி திருப்பினாலும் ஒரே மாதிரி தோன்றும் இரட்டைத் தலை சீட்டுகள் தோன்றின. அப்படியே விதவிதமான தோற்றங்களில் சீட்டுக்கட்டுகள் விற்பனைக்கு வந்தன. சீட்டாட்டத்தில் "ஜோக்கர்"யை கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள். 1870 -ல் சீட்டுக்கட்டில் ஜோக்கரை நுழைத்தார்கள்.
சீட்டாட்டத்தில் ரம்மி, ஜோக்கர் என ஒரு சில ஆட்டங்களையே நாம் அறிந்திருப்போம். ஆனால், நூற்றுக்கணக்கான சீட்டாட்ட முறைகள் உலகம் முழுவதும் உள்ளன. இருந்தாலும் அவற்றை, ராங்க் கேம்ஸ், காம்பினேஷன் கேம்ஸ் என்று இருவகையாக பிரித்து விடுகிறார்கள்.
தனிநபர் விளையாடும் சீட்டாட்டமும் உண்டு. இது 'சாலிடைர்' எனப்படுகிறது. சீட்டுக்கட்டுகளைக் கொண்டு கட்டிடம் உருவாக்குதல், வடிவங்களை வார்த்தல் என பொழுதுபோக்குவர்களும் உண்டு. இப்படி வித்தியாசமான கட்டிடங்கள், உருவங்கள் உருவாக்கி சாதனை செய்தவர்களும் இருக்கிறார்கள்!
19 ம் நூற்றாண்டில் சீட்டுக்கட்டுகளின் பின்புறம் விளம்பரங்கள் செய்வது பெரிய வியாபாரத் தந்திரமாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த கேரி பேக்கர் என்பவர் தனது சொத்து முழுவதையும் சீட்டாட்டம் மூலமாக சம்பாதித்தார் என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மை.
1990 ஆம் ஆண்டு லண்டனில் இருக்கும் மிகப்பெரிய சூதாட்ட விடுதி ஒன்றில் நுழைந்தார் கேரி பேக்கர். தன்னிடம் இருந்த 15 மில்லியன் பவுண்டுகளை பந்தயம் கட்டி ஒரே நேரத்தில் 4 மேஜைகளில் ஒற்றை ஆளாக விளையாடி அனைத்தையும் இழந்தார். ஆனால், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே வெளியே வந்தார். அன்று அவர் இழந்தது இந்திய மதிப்பில் 105 கோடிகள். இதேபோல் ஒருமுறை லாஸ்வேகாசில் உள்ள எம்.ஜி.எம் என்ற கேசினோவுக்கு கேரி பேக்கர் போயிருந்தார். விளைடாடத் தொடங்கினார்.
வெற்றி மீது வெற்றி வந்து சேர தனக்கு மது ஊற்றிக் கொடுத்த ஒரு பெண்ணிற்கு ஒரு மாளிகை வீட்டையே பரிசளித்தார். தனது கார் கதவை திறந்து விட்டவருக்கு அவர் கொடுத்த டிப்ஸ் எவ்வளவு தெரியுமா? 5 கோடி ரூபாய்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு லண்டனில் ஒருமுறை மூன்று வாரங்கள் சூதாடினார். இந்த முறை அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுக்கவில்லை. தோல்வி மேல் தோல்வி அடைந்தார். அதில் 28 மில்லியன் டாலர்கள் இழந்தார்.
உலகில் தனி ஒருவராக அதிகம் இழந்தது அதுவே முதல் முறை. அவர் 2004 ஆம் ஆண்டு இறந்த போது அவரது சொத்து மதிப்பு 5.4 மில்லியன் டாலர். தோற்றாலும், ஜெயித்தாலும் நிலைதடுமாறாத கேரி பேக்கர். சூதாட்ட உலகில் ஒரு மன்னராகவே வலம் வந்தார்.