
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானது இளவட்டக்கல். அதிக எடையுடன் உருண்டையாக இருக்கும் இளவட்டக்கலைத் தூக்குவது பெரும் சாதனையாக கருதப்படும். பல இடங்களில் இளவட்டக்கலைத் தூக்கினால் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று கூட சொல்வார்கள். காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இளவட்டக்கல், மறைந்து வரும் விளையாட்டுகளில் ஒன்றாகி விட்டது. ஆண்களில் பலசாலி யார் என்பதற்காக தொடங்கப்பட்ட இளவட்டக்கல் விளையாட்டின் வரலாற்றை இப்போது திரும்பி பார்ப்போமா!
மதுரை, தேனி, திருநெல்வேலி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இளவட்டக்கல் என்ற வீர விளையாட்டு மிகவும் பிரபலம். சுமார் 100 கிலோ எடை கொண்ட இந்தக் கல்லைத் தூக்குபவர் தான், அந்த ஊரில் ஹீரோ என்று கூட சொல்லலாம். வெற்றி பெறும் வீரர்களை பாராட்டுகளும், பரிசுகளும் அலங்கரிக்கும். எடை தூக்கும் இந்த விளையாட்டு, பொங்கல் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் இன்றும் சில ஊர்களில் நடைபெறுகிறது.
வட்ட வடிவத்தில் வழுவழுப்பாக பிடித்துக் கொள்வதற்கு எந்தப் பிடிப்பும் இல்லாமல் இளவட்டக்கல் அதிக எடையுடன் இருக்கும். இதற்கு ‘திருமணக் கல்’ என்றும் மற்றொரு பெயர் உண்டு. இளவட்டக்கல்லைத் தூக்குவதில் பல்வேறு நிலைகள் உண்டு. அதிக எடையுடன் இருப்பதால், எடுத்த எடுப்பிலேயே தூக்கி விட முடியாது.
முதலில் குத்த வைத்து அமர்ந்த நிலையில் கல்லை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, பொறுமையாக மேலே தூக்க வேண்டும். முழங்கால் வரைக்கும் கல்லை நகர்த்தி உடலோடு அணைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக மார்பகத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும். பின்பு தோள் பட்டை மீது வைத்து பின்புறமாக கல்லை கீழே போட வேண்டும். இதோடு நிறுத்தி விடாமல் இன்னமும் சாதனைச் செய்ய நினைக்கும் ஒருசில வீரர்கள், இளவட்டக்கலைத் தூக்கிய பிறகு கோயிலையோ அல்லது குளத்தையோ சுற்றி வருவார்கள்.
19 ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான வீர விளையாட்டுகளில் இளவட்டக்கல்லும் ஒன்று. மறவர் குலத்தில் இளவட்டக்கலைத் தூக்கும் ஆணுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் ஒரு வழக்கம் கூட இருந்ததாம். காலப்போக்கில் இந்த வீர விளையாட்டு மறைந்திருந்தாலும், ஆங்காங்கே ஒருசில சிற்றூர்களில் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. பண்டையத் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்த இளவட்டக்கல், காலத்தால் என்றும் அழியாது. இன்றைய இளம் தலைமுறையினர் இதுபோன்ற வீர விளையாட்டுகளை குறைந்தபட்சம் தெரிந்து வைத்திருந்தாலே போதும்.
திருமணம் ஆன புதுமாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் பணியாரம் செய்து கொடுத்து, இளவட்டக்கலைத் தூக்கச் சொல்லும் பழக்கமும் முந்தைய காலத்தில் வழக்கத்தில் இருந்ததாம். தமிழர்களின் வீரத்தையும், உடல் பலத்தையும் பறைசாற்றும் இளவட்டக்கல், இன்று தன்னை யாரேனும் தூக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் மண்ணில் பாதியளவு புதையுண்டு கிடக்கிறது. ஒருசில இடங்களில் பெண்களுக்கும் இளவட்டக்கலைத் தூக்கும் விளையாட்டுகள் நடந்தேறியுள்ளன.
‘முதல் மரியாதை’ படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் இளவட்டக்கலைத் தூக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்தப் படத்தில் பலமுறை முயற்சி செய்த பின்னர், கடைசியாக இந்தக் கல்லைத் தூக்கியிருப்பார். பிரசாந்த் நடித்த ‘விரும்பினேன்’ என்ற திரைப்படத்தில் மண்ணில் புதையுண்ட இளவட்டக்கலை ஊர்மக்கள் தோண்டி எடுப்பார்கள். இதனைத் தூக்கினால், பரிசுகள் தருகிறோம், பெண்ணை மணமுடித்துத் தருகிறோம் என்று சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.