மீன்பிடித் திருவிழாவின் முக்கியத்துவம்: ஆண்டுதோறும் பாதுகாக்கப்படும் பாரம்பரியம்!

Fishing Festival
Fishing Festival

விவசாயத்தோடு தொடர்பு கொண்ட பல உப தொழில்களில் ஒன்று தான் மீன் பிடித்தல்.‌ விவசாயத்திற்கு உறுதுணையாக நிற்கும் நீர்ப்பாசன ஆதாரங்களாக இருக்கும் குளம், குட்டை மற்றும் கண்மாய்களை தொடர்ந்து பாதுகாக்கவும், அவற்றின் அருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், கிராம மக்கள் ஒன்றாய் இணைந்திருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும் மீன்பிடித் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

விவசாயம் மிகச் சிறப்பாக நடைபெற வேண்டுமென ஆண்டுதோறும் அறுவடைப் பணிகள் முடிந்த பிறகு, கண்மாயில் நீர் வற்றும் சமயத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மீன்பிடிப்பார்கள். மீன்பிடித் திருவிழா நடத்தப்படாவிட்டால் விவசாயம் பாதிக்கும் என்றும் விவசாயிகள் நம்புகின்றனர்.

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. மீன்பிடித் திருவிழாவினை கொண்டாடுவது இயற்கைச் சூழலுக்கும் வலு சேர்க்கும். ஆண்டுதோறும் கோடை காலத்தில் குட்டை, குளம் மற்றும் கண்மாயினை தூர்வாரி, வண்டல் மண்ணை தங்களுடைய நிலத்தில் விவசாயிகள் நிரப்புவார்கள்.

கண்மாயில் நீர் வந்தவுடன் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாத்து மீன்களை விடுவார்கள். மிகக் குறைந்த காலத்தில் வேகமாக வளரும் கெண்டை, கட்லா, கெளுத்தி, ஆயிரை, விரால் மற்றும் ஜிலேபி கெண்டை போன்ற மீன் குஞ்சுகளை கண்மாயில் விடுவார்கள். விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் போக, கண்மாயில் தண்ணீர் வற்றி இருக்கும் நேரத்தில் கிராமத்தினர் மீன்பிடித் திருவிழாவை அறிவிப்பார்கள்.

மீன்பிடித் திருவிழா நடைபெறும் நாளன்று, காலை 6 மணியளவில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடுவர். மீன்பிடிக்கப் பயன்படும் கருவிகளான அச்சா, ஊத்தா மற்றும் வலை தூரி ஆகியவற்றை கையில் எடுத்துக் கொண்டு அனைவரும் வரிசையாக அணிவகுத்து நிற்பார்கள். கிராம கமிட்டியார் அனைவரும் கிராமத் தெய்வங்களை வணங்கி, வெள்ளைக் கொடியை அசைத்து மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைப்பார்கள்.

கொடி அசைந்தவுடன், உடனே கிராம மக்கள் அனைவரும் குளத்தில் இறங்கி மீன்களைப் பிடிக்கத் தொடங்கி விடுவார்கள். தங்கள் கைகளுக்கு அகப்பட்ட மீன்களை சமைத்து குடும்பத்திற்கும், அக்கம் பக்கம் உள்ள உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள். மீன்பிடித் திருவிழா நடக்கும் அன்றைய தினம் முழுக்க கிராமத்தில் மீன்வாசனை வீசுவதோடு, மகிழ்ச்சியும் பொங்கும். அடுத்த வருடம் எப்போது மீண்டும் மீன்பிடித் திருவிழா வரப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்போடு இத்திருவிழா முடிவடையும்.

இதையும் படியுங்கள்:
எந்த வகை மீன் வளர்ப்பு மூலம் விவசாயிகள் சம்பாதிக்க முடியும்!
Fishing Festival

மீன்பிடித் திருவிழா வருடந்தோறும் நடைபெறுவதால், இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்படும். மேலும் குளங்கள் மற்றும் கண்மாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை அனைவருக்கும் உண்டாகும். விவசாயத்திற்கு உதவும் நீர் ஆதாரங்களை தொடர்ந்து முறையாகப் பராமரிக்க முடியும். தமிழர்களின் வாழ்வில் மீன்பிடித் திருவிழா போன்ற பல விழாக்கள் மன மகிழ்ச்சியை அளிப்பதுடன், அனைவரையும் ஒன்றிணைக்கும் ஓர் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com