
அடிமைத் தளையை
அகற்றியே நமது
நாட்டின் சுதந்திரம்
உறுதி செய்யப்பட…
உழைத்தோர் கதையை
விரிக்கின் இங்கு
விரிந்து நீண்டு…
வியப்பில் ஆழ்த்தும்!
எத்தனை எத்தனை
இன்னல்கள் தினமும்!
அத்தனை அத்தனை
அடக்குமுறை அனைத்தையும்
சுதந்திரம் ஒன்றே
பிறப்புரிமை என்றெண்ணி
அகத்தில் உறுதியுடனே
ஆனந்தமாய் ஏற்றனர்!
சிறையில் கிடந்தாலும்
சிந்தைகளில் சுதந்திரத்தை
வற்றா நதியாய்
வளமாக்கி வைத்தார்கள்!
பணத்தை நிலத்தை
பரிணமித்த நல்வாழ்வை…
குடும்பத்தை குழந்தைகளை
கொடுத்தேனும் சுதந்திரத்தைப்
பெற்றிடவே அவர்களும்
பெருமுயற்சி செய்தார்கள்!
அறுந்த தாலிகளும்…
முறிந்த லத்திகளும்…
ஒடிந்த எலும்புகளும்…
உயரத்தில் தொங்குகின்ற
தூக்குக் கயிறுகளும்…
பிரிட்டிஷ் போலீசாரின்
பலவித பூட்ஸ்களும்…
நமது பெரியோரின்
நலமான தியாகத்தை
உலகுக்குப் பறைசாற்றும்
உயர்வான நல்சாட்சிகள்!
நாமெல்லாம் இன்று
நல்வாழ்வு வாழ்ந்திடவும்…
சுதந்திரக் காற்றினையே
சுகத்துடனே நுகர்ந்திடவும்…
பாதை அமைத்திட்ட
பாக்கியசாலிகள் அவர்கள்!
எழுபத்தெட்டு ஆண்டுகளை
இனிதாய்க் கடந்திட்டோம்!
உலகப் பொருளாதாரத்தில்
உயர்வான இடத்தினையும்…
மக்கட் தொகையளவில்
மகத்தான முதலிடத்தினையும்
பெற்றே நாமும்
பெருமையுடன் இலங்குகின்றோம்!
இந்த இனியநாளில்
இந்தியன் என்ற பெருமையுடன்
சுதந்திரத்தைக் கொண்டாடி
சுகமாய் வாழ்ந்திடுவோம்!
பெற்ற சுதந்திரத்தைப்
பேணியே காத்திடுவோம்!
நம்பர் ஒன் நாடாக
நம்நாடு உயர்ந்திடவே
உறுதிமொழி ஏற்போம்!
உதிரத்தை வியர்வையாக்கி…
உழைப்பை மூலதனமாக்கி…
உலகம் வியந்திடவே
உயரத்தைத் தொட்டிடுவோம்!
இமயத்தைப் போலவே
இந்தியாவை உயர்த்திடவே
உள்ளத்தில் உறுதியேற்போம்!
ஒருநாளும் அதைமறவோம்!