
இன்று இந்தியா உலகின் தலைசிறந்த வங்கிகளை கொண்டுள்ளது. உலகிலேயே அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகள் எல்லாமே இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற நாட்டின் மொத்த வாடிக்கையாளர்களை சேர்த்தால் கூட அதை விட பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் மிக அதிகம் . இந்தியாவில் மட்டும் தான் தெருவிற்கு தெரு வங்கிகளையும், காணும் இடம் எங்கும் நிரம்பி வழியும் பணப் பரிவர்த்தனை எந்திரங்களையும் பார்க்க முடியும்.
நாட்டின் கடைக் கோடி கிராமங்களில் கூட ஏதேனும் ஒரு வங்கி தன் கிளையை திறந்து வைத்திருக்கும். இந்தியாவின் இன்றைய வங்கி பரிவர்த்தனைகள், வங்கிகளில் உள்ள வைப்பு நிதிகள் எல்லாம் பல நாடுகளின் மொத்த பொருளாதாரத்தை தாண்டி நிற்கும். மிக முக்கியமாக மக்களின் நம்பிக்கையை பெறுவதில் இந்திய வங்கிகள் சிறந்து விளங்குகின்றன.
நொடியில் பணம் அனுப்பும் வசதி கொண்ட யு.பி.ஐ ஆப்கள் எல்லாமே இந்தியாவில் தான் சாத்தியம். இன்னும் பல நாடுகளில் இணைய வழி வங்கி சேவைகளை சரியாக பெற முடியாத அளவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய வங்கி வலையமைப்பை கொண்ட இந்தியாவில் இந்தியர்கள் ஒரு காலத்தில் வங்கியால் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். அதுவும் இந்தியாவின் முதல் வங்கியில் இந்தியர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை என்பது வரலாற்று சோகமாகும். அந்த வங்கி முழுக்கவும் பிரிட்டிஷ் காரர்களுக்கு மட்டுமே சேவை செய்ய தொடங்கப்பட்டது.
வங்கி சேவைகள் :
வங்கி சேவையின் ஆரம்ப கட்ட முறைகள் கிமு 2000 ஆண்டில் தொடங்கப்பட்டதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அது இன்றைய வங்கி முறை போல எல்லாம் இல்லை. வங்கி என்பது அன்று தனிநபர் சார்ந்ததாக இருந்தது. முதலில் வங்கிகள் கடன் கொடுக்கும் ஒரு தனியார் நிறுவனமாக மட்டும் இருந்தன. ஏதேனும் ஒரு பொருட்களை விற்றோ, அடமானமாகவோ வைக்கும் இடங்களை வங்கி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற முறை இந்தியாவிலும் உண்டு. இங்கு கடன் கொடுக்கவும், பண்டமாற்று முறையில் தங்கம் அல்லது நாணயத்தினை வழங்க குறிப்பிடத்தக்க வியாபாரிகள் இருந்தனர்.
இந்தியாவின் முதல் வங்கி:
இந்தியாவின் முதல் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 250 வருடங்கள் ஆகின்றன. அதிகாரப் பூர்வமான முதல் வங்கி இந்தியாவில் 1770-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதற்கு முன் இருந்த வங்கி போன்ற சேவைகளுக்கு பெயர் கிடையாது. இந்தியாவில் முதல் வங்கிக்கு இந்துஸ்தான் வங்கி (bank of Hindostan) என்று பெயர் சூட்டப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த அலெக்சாண்டர் & கோ நிறுவனம் இந்த வங்கியை கொல்கத்தாவில் தொடங்கியது. இந்துஸ்தான் வங்கி இந்தியாவில் உள்ள இங்கிலாந்து நிறுவனங்களுக்கு மட்டுமே நிதியுதவி செய்ய உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பிரிட்டிஷ் நாட்டினர் மட்டுமே பணிபுரிந்தனர்.
அந்த காலக் காட்டத்தில் நாட்டின் பெரும்பகுதி கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நேரங்களில் வங்கியில் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்தியர்களுக்கு இந்த வங்கியால் எந்த ஒரு பலனும் இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் நாட்டின் பெரும் செல்வங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காரர்களால் உறிஞ்சப்பட்டதால், மக்களிடம் போதுமான செல்வமும் இல்லை. இருக்கும் சொற்ப பணமும் கடுமையான வரிகளால் பிடுங்கப்பட்டது. அதனால் இந்தியர்களுக்கு வங்கி தேவைப்படவில்லை.
ஹிந்துஸ்தான் வங்கி 50 ஆண்டுகள் இயங்கி வந்தது. பின்னர் அலெக்சாண்டர் & கோ நிறுவனம் 1832-ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதனால் அவர்கள் ஹிந்துஸ்தான் வங்கியை இழுத்து மூடி விட்டனர்.
அடுத்த ஒரு நூற்றாண்டு காலத்தில் பல இந்திய செல்வந்தர்கள் ஹிந்துஸ்தான் வங்கியை விட பல பெரிய வங்கிகளை இந்தியர்களுக்கு சேவை வழங்க திறந்தனர்.