
சென்ற தலைமுறையினரின் ஃபேவரிட் விஷயங்களில் கடிதம் எழுதுவது, வாழ்த்து அட்டை அனுப்புவது என பெரிய கலாச்சாரமாகவே இருந்தது தற்போது அது குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். செல்போன், இணையம் என விஞ்ஞான வளர்ச்சியில் தபால் எழுதும் பழக்கம் வெகுவாக மாறி விட்டது. இன்றைய தலைமுறையினரிடம் தபால் எழுதுவது எப்படி என கேட்டால் தெரியாது என்பது தான் பதிலாக இருக்கும்.
அனைத்து நாடுகளிலும் தபால்துறை சிறப்பாக இயங்குகிறது. சிவப்பு நிற அஞ்சல் பெட்டியை தேடி தபாலை சேர்ப்போர் இன்றும் இருக்கிறார்கள். பலவித தபால் நிலையங்களை பற்றி கேள்வி பட்டிருப்போம்.
அளவில் பெரிய தபால் நிலையம், சிறிய தபால் நிலையம், பெண்கள் மட்டுமே பணிபுரியும் தபால் நிலையம் என பல கேள்வி பட்டிருப்போம். கடல் மட்டத்திலிருந்து 4,400மீ உயரத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள சிக்கிம் தபால் நிலையம் உலகின் மிக உயரமான தபால் நிலையமாக விளங்குகிறது.
அந்த வகையில் கடலுக்கு அடியில் நிறுவப்பட்டிருக்கும் அஞ்சல் பெட்டி ஒன்று வியப்பை தருவதாக உள்ளது. தபாலைப் போட, பெட்டியில் போடப்பட்ட தபாலை எடுக்க கடலுக்குள் நீந்தி தான் செல்ல வேண்டும். ஜப்பான் நாட்டில் கசாமி பே எனும் இடத்தில் இந்த அஞ்சல் பெட்டி கடலுக்கு அடியில் நிறுவப்பட்டிருக்கிறது.
கடலுக்கு அடியில் சுமார் 10மீ ஆழத்தில் அமைந்துள்ளது. இதற்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த தபால் அட்டையில், ஆயில் பெயிண்ட் மூலம் நாம் எழுத விரும்புவதை எழுதி போட வேண்டும். இதற்காக பணிபுரிபவர்கள் அதனை எடுத்து நாம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பர்.
நீர் புகாத பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட மற்றும் சிறப்பு முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள் ஒவ்வொரு நாளும் பயணிகளால் இந்த அஞ்சல் பெட்டியில் போடப்படுகிறது. இந்த தனித்துவ அட்டைகள் கடற்கரைக்கு அருகிலேயே விற்கப்படுகிறது. இந்த பெட்டியில் தினமும் 1500 தபால் அட்டைகள் வரை போடப் படுகிறது. இதை ஸ்நோர்க்லிங் மூலம் நீருள் மூழ்கி பயணிகள் தபால் பெட்டியில் போடுகின்றனர்.
இதற்காக அஞ்சலகம் ஒரு சிறப்பு உலோகத்தை உருவாக்கியது. இது ஒவ்வொரு அஞ்சலட்டையிலும் மை பயன்படுத்தாமல் குறியீடு போடும். அதை எடுத்து உலகின் மற்ற இடங்களுக்கு அனுப்புகின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு சாகச பயணமாக இந்த தபால் பெட்டி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தபால் பெட்டியை சார்ந்து தபால் அட்டை உருவாக்குவது, இதற்கான ஆயில் பெயிண்ட் விற்பனை என வணிக ரீதியாக சிறந்து விளங்குகிறது. நீருக்கு அடியில் இருந்து வரும் தபால் என்பதால் இதற்கான வரவேற்பு அதிகளவில் உள்ளது. கடல் மேற்பரப்பில் கொடி பறக்கும் போது தபால் அலுவலகம் வணிகத்திற்கான திறந்திருக்கும் என அறியலாம்.
உலகின் தனித்துவமான இந்தக் கடல் அஞ்சல் பெட்டி 2002 ல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜப்பான் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கடல் அஞ்சல் பெட்டியை பார்க்கவும், அதில் தபால் அட்டைகளை போடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.