பெரம்பூர் ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையானது இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட முதலாவது தொழிற்சாலை என்ற பெருமையினை உடையது. இந்த தொழிற்சாலையில் இந்திய ரயில்வே நிறுவனத்திற்குத் தேவையான பலவகையான பயணிகள் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய பெருமைமிக்க ஐ.சி.எஃப். என சுருக்கமாக அழைக்கப்படும் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையைப் பற்றி இந்த பதிவில் நாம் சற்று தெரிந்து கொள்ளலாம்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கார் அண்டு எலிவேட்டர் மேனுபாக்சரிங் கார்ப்பரேஷனுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே இந்தியாவில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் மே 28, 1949 அன்று கையெழுத்தானது. இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையானது சென்னையில் பெரம்பூரில் அமைக்கப்பட வேண்டும் என இந்திய ரயில்வே அமைச்சகம் 1951 ஆம் ஆண்டில் முடிவு செய்தது. அப்போது ரயில்வே அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் ரயில்வே இணை அமைச்சராக ஓ.வி.அளகேசன் அவர்களும் இருந்தார்கள்.
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையானது எட்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து அறுநூறு சதுரஅடியில் அமைக்கப்பட்டது. 02 அக்டோபர் 1955 அன்று அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் உற்பத்தியைத் தொடங்கி வைத்தார். இந்த தொழிற்சாலையே ஐ.சி.எஃப். எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இண்டகரல் கோச் பேக்டரி அதாவது இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையாகும்.
இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை என்றாலும் கூட 1967-68 லேயே ஏற்றுமதியைத் தொடங்கி விட்டது. ஐ.சி.எஃப். முதன்முதலில் தாய்லாந்துக்கு இரண்டு பெட்டிகளை ஏற்றுமதியைச் செய்தது. இன்று பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரயில் பெட்டிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேயால் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தாய்லாந்து, தைவான், பர்மா, ஜாம்பியா, பிலிப்பைன்ஸ், உகாண்டா, தான்சானியா, வியட்நாம், மொசாம்பிக், நைஜீரியா மற்றும் பங்களாதேஷ் முதலான வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தொடக்கத்தில் இத்தொழிற்சாலையில் மூன்றாவது வகுப்புப் பெட்டிகளின் வெளிப்புறக் கூடுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. பெட்டிகளின் உட்புற வசதிகள் ரயில்வே தொழிற்பேட்டையில் தயாரிக்கப்பட்டன. 02 அக்டோபர் 1962 அன்று முதல் உட்புற கலன் வடிவமைக்கும் பட்டறை நிர்மாணிக்கப்பட்டது.
இன்று 170 வகையான ரயில் பெட்டிகளைத் தயாரித்து வருகிறது. பதிமூன்றாயிரம் ஊழியர்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனை வசதிகள் என ஐ.சி.எஃப். இன்று ஆல் போல தழைத்து சிறந்து விளங்குகிறது. சென்னையின் பெரும் தொழில் அடையாளங்களில் ஒன்றாகவும் ஐ.சி.எஃப். திகழ்கிறது.
ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை கூடுகள் பிரிவு மற்றும் உட்புறக் கலன் பிரிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ரயில்பெட்டிகளின் வெளிப்புற அமைப்பு கூடுகள் பிரிவில் செய்யப்படுகின்றன. உட்புறக் கலன் பிரிவில் ரயில்பெட்டிகளின் உட்புற வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு பொருத்தப்படுகின்றன.
ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் ரயில்பெட்டிகளைத் தவிர ரயில்வே நிறுவனத்திற்குத் தேவையான டீசல் பவர் கார்கள், கோபுரக் கார்கள், குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள், விபத்து நிவாரண மருத்துவ ஊர்திகள் முதலானவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சென்னையின் மாபெரும் தொழில் அடையாளமாகத் திகழ்ந்து பல சாதனைகளைச் செய்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது ஐ.சி.எஃப்.