குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மைகளில் மிகவும் முக்கியமானது டெடி பியர். இந்தியாவில் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல, அமெரிக்காவில் இந்த நாளை தேசிய டெடி பியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். டெடி பொம்மைகள் உருவான சுவையான வரலாறு பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜனாதிபதியும், கரடியும்: டெடி பியர் பொம்மைகள் உருவானதன் பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு மிருகங்களை வேட்டையாடுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. 1902ம் ஆண்டு தியோடர் டெடி ரூஸ்வெல்ட், மிசிசிபியில் கரடி வேட்டையில் ஈடுபட்டிருந்தார். நீண்ட நேரம் முயற்சித்தும் அவரால் ஒரு கரடியைக் கூட வேட்டையாட முடியவில்லை. அவரை உற்சாகப்படுத்த நினைத்த அவரது உதவியாளர்கள், ஒரு கரடியை தேடிப் பிடித்து அதை மரத்தில் கட்டி வைத்தனர். பிறகு ஜனாதிபதியை அந்தக் கட்டி வைக்கப்பட்ட கரடியை சுடச் சொல்லி வேண்டினர். ஆனால், பரிதாபமான அந்தக் கரடியின் தோற்றம் ரூஸ்வெல்ட்டின் மனதை ஏதோ செய்தது. மேலும், பிடிபட்ட கரடியை சுடுவது நியாயமற்ற செயல். இதில் விளையாட்டுத்தனம் கூடாது என்று கூறி அந்தக் கரடியை அவர் தப்பிப்போகச் செய்தார்.
கருணையை விளக்கிய கார்ட்டூன்கள்: இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பிரபலக் கார்ட்டூனிஸ்ட் கிளிஃபோர்டு பெர்ரிமேன், ஜனாதிபதி கரடியிடம் காட்டிய கருணையை விவரிக்கும் வண்ணம் ஒரு அரசியல் கார்ட்டூனை உருவாக்கினார். மேலும், பல அரசியல் கார்ட்டூன்களும் இந்தப் பின்னணியில் உருவாகின. தியோடர் ரூஸ்வெல்டின் புனைப்பெயரான டெடி கரடிகளுடன் இணைக்கப்பட்டது.
முதல் டெடி பியர்: ஜனாதிபதியின் புகழ் பெற்ற கரடி வேட்டை பயணத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்காவில் குடியேறிய ரஷ்யரான மோரிஸ் மிக்டோம் என்பவர் முதலில் ஒரு கரடி பொம்மையை உருவாக்கினார். தனது மனைவி ரோஸுடன் இணைந்து மென்மையான ரோமங்கள் மற்றும் அசையும் கால்கள் கொண்ட ஒரு பட்டுக் கரடியை வடிவமைத்தார். ஆரம்பத்தில் அதற்கு டெடி'ஸ் பியர் என்று ஜனாதிபதியின் பெயரை வைத்தனர். ப்ரூக்ளினில் உள்ள தனது கடையின் ஜன்னலில் அந்தக் கரடி பொம்மையை காட்சிப்படுத்தினார் மிக்டோம். அது பல குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரின் கவனத்தை ஈர்த்தது. மிகச் சில நாட்களிலேயே டெடி பியர் பொம்மை பிரபலமடைந்தது.
சர்வதேச ஈர்ப்பு: அமெரிக்காவிற்கு வெளியிலும் டெடி பியர் பொம்மையின் சிறப்புகள் பரவத் தொடங்கின. ஜெர்மனியைச் சேர்ந்த ரிச்சர்ட் ஸ்டீஃப் என்கிற பொம்மை தயாரிப்பாளரும் இதேபோன்ற பட்டு கரடியை உருவாக்கினார். இதனால் டெடி பியர் சர்வதேச ஈர்ப்பு மற்றும் பிரபலத்திற்கு வழிவகுத்தது. டெடி பியர் பொம்மை உருவாக்கம் பொம்மை தொழிலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அத்துடன் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டுத் தோழனாகவும் உருவாகியது. டெடி பியர் கலாசாரம் பிரபலம் அடைந்தது.
டெடி பியர் பொம்மையின் சிறப்புகள்: டெடி பியர் பொம்மை பார்ப்பதற்கு அப்பாவித்தனமான தோற்றமும் அழகும் இணைந்த ஒரு கவர்ச்சியான பொம்மையாகும். குழந்தைகள் வளர்ந்த பின்பும் டெடி பியரை விரும்புவதற்கு இதுதான் காரணம். சில பெரியவர்கள் கூட டெடி பியரை அருகில் வைத்துத்தான் தூங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கலாசார ரீதியாக டெடி பியர்கள் அமெரிக்க சமூகத்தில் குறிப்பிடத்தக்க அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பொம்மைகள் பெரும்பாலும் ஒரு குழந்தையின் முதல் நண்பராகவும், மனம் சோர்ந்திருக்கும் காலங்களில் ஆறுதலளிக்கும் ஆதரவாளராகவும் விளங்குகிறது. கரடியின் மென்மையும், கட்டிப்பிடிக்கக்கூடிய வடிவமும் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமானதாக இருக்கின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவை பரிசாகவும் வழங்கப்படுகின்றன. நிறைய புத்தகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் மிகப் பிரபலமான பொருளாக டெடி பியர் பொம்மைகள் மாறின. இன்று உலகெங்கிலும் டெடி பியரை விரும்பாத குழந்தைகளே இல்லை என்ற அளவுக்கு மிகப் பிரபலமாகி விட்டது.