ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் ஆட்டம் இது!

ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் ஆட்டம் இது!

யில் என்பதற்கு அலங்காரம், ஒய்யாரம், அழகு, சாயல் என்னும் பொருள்களுண்டு. இதனால் ஒயிலாட்டம் என்றால் அழகுள்ள ஆட்டம் எனப் பொருள் கொள்ளலாம். இது ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படுவது. இந்த ஆட்டத்தில் ஆண்மைத் தன்மை அதிகம் வெளிப்படுத்தப்படும். ஆனால், இன்று பெண்களும் இக்கலையைக் கற்றுக்கொண்டு ஆடுகின்றனர்.

இந்தக் கலை தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உடையார்பட்டி, ஆலங்குளம் வட்டம், மதுரைக்கு வடகிழக்குப் பகுதிகளிலும் குறிப்பாய் வலையப்பட்டி கிராமத்திலும் பிரபலம். இப்போது திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களிலும் நடைபெறுகிறது.

இக்கலை குறிப்பிட்ட சில சாதியினருக்கு மட்டும் உரியதல்ல. எனினும், மலைவேடரிடம் இந்த ஆட்டம் தொன்மமாக உள்ளது. ‘வேட்டை தடை செய்யப்படுவதற்கு முன்பு வேட்டைக்கு முன்னும் பின்னும் இந்த ஆட்டத்தை இச்சாதியினர் ஆடினர். இப்போது விவசாயம் சார்ந்த ஆட்டமாக இது நடைபெறுகிறது.

இந்தக் கலை இன்றைய நிலையில் கோயில் திருவிழாக்களின்போதும், பொது நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது. ஊர் தெய்வங்களுக்குக் கொண்டாடப்படும் ‘மாசிக்களரி’ விழாவிலும், ‘அம்மன் எடுப்பு’ விழாக்களிலும் கத்தோலிக்கக் கோயில் விழாக்களிலும் இந்தக் கலை நிகழ்த்தப்படுகிறது. பொது விழாக்களில் இந்தக் கலைக்கு மதிப்பிருப்பதால், இன்று தமிழ்நாடு முழுக்க இது அறியப்படும் ஒரு கலையாகி விட்டது.

ஒருவகையில் இது சடங்கு சார்ந்த கலை. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் பெண் தெய்வ வழிபாட்டில் நடைபெறும், ‘முளைப்பாரி சடங்கு’ போன்றே ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும் நடைபெறும். மலைவேடர் இனத்தினர் இந்த ஆட்டத்தை சடங்குக் கூறுகளாகக் கருதுகின்றனர். முளைப்பாரி விதை போடும்போது தினமும் 8 முதல் 11 மணி வரையும், முளைப்பாரி ஊர்வலத்திலும் ஒயிலாட்டம் நடைபெறும். முளைப்பாரியை கரைத்து முடிந்த பின் ஒயிலாட்டம் ஆடுவது நின்றுவிடும்.

இந்தக் கலைக்குரிய இசைக்கருவிகள் பானை தாளம் (வாய்ப்பகுதி தோலால் மூடப்பட்ட குடம்), தவில், சிங்கி, டோலக் ஆகியன. கலைஞர்களின் கால்களில் கட்டிய சலங்கையும் இசைக் கருவிகளுடன் ஒலிக்கும். ஆட்ட நிகழ்வில் இசைக்கருவிகள் அடங்கியே ஒலிக்கும்.

ஒயிலாட்டத்தின் பாடுபொருள் பெரும்பாலும் இராமாயணம்தான். மேலும், பாரதம் தொடர்பான கதைகளும், காத்தவராயன் கதை, கோவலன் கதை, சிறுத்தொண்டர் கதை, மதுரை வீரன் கதை, வள்ளி திருமணக் கதை ஆகியவையும் இக்கலை நிகழ்வுக்குரியவை. கத்தோலிக்க கிறித்துவ விழாக்களில் பைபிள் கதைகளையும் பாடுகின்றனர்.

இந்த ஆட்டத்தில் பத்து முதல் இருபது பேர்கள் வரை பங்குகொள்கின்றனர். பாடப்படும் பாட்டின் இசைக்கேற்ப அடவுகள் வைத்தே ஆடப்படுவது இந்தக் கலை. ஆட்டக்காரர்கள் சலங்கை கட்டியிருப்பர். இது, ‘கச்சம்’ எனப்படும். நிறைய கச்சம் கட்டி ஆடுபவர் சிறப்பானவராகக் கருதப்படுவர்.

தற்போது ஒயிலாட்டக்காரர்கள் சீருடை அணிகின்றனர். முன்பு வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு ஆடினர். ஆடுபவர்களின் கையில் பல வண்ண கைக்குட்டைகள் இருக்கும். முதலில் கடவுள் வணக்கமாக கைகூப்பி நின்று ஒரு காலை மட்டும் தட்டித் தாளத்துக்கேற்ப ஆடத் தொடங்குவர். அடுத்து உரை வணக்கம் பாடி ஆடும்போது தரையைத் தொட்டு வணக்கம் செலுத்துவர். அதன் பின் ஆட்டம் தொடங்கும். பின் உச்ச நிலை அடையும். இடையில் களைப்பு ஏற்படும்போது பாட்டுப் பாடும் அண்ணாவி விசிலடித்து ஆட்டத்தை நிறுத்துவார். இவ்வாறு ஆட்டத்தில் பல இடைவெளிகள் அமையும். ஆட்டத்தின் கடைசிப் பாடலுக்கு முன்னர் உள்ள இடைவெளியில் அண்ணாவி நன்றி கூறுவார். இறுதிப் பாடலில் தரையைத் தொட்டுக் கும்பிட்டு ஆட்டத்தை நிறைவு செய்வர்.

வழிபாட்டுச் சடங்கில் ஆடும் கலைஞர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. கலைஞருக்கு வயது வரம்பும் கிடையாது. அண்ணாவி அல்லது முன்பாட்டாளர் முதல் சந்தத்தைப் பாட, குழுவினர் அதைத் திருப்பிப் பாடி நேர்கோட்டில் ஆடுதல் இந்த ஆட்டத்தின் அமைப்பு.

ஒயிலாட்டத்தில் கழுத்துக்குக் கீழும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதி வளைவதில்லை. இது ஆட்டத்துக்குரிய கம்பீரத்தைத் தருகிறது. கலைஞர்கள் ஒப்பனை எனத் தனியாக எதையும் செய்வதில்லை. எல்லோரும் சிவப்பு அல்லது ஒரு வண்ணத்தில் கைக்குட்டை வைத்திருப்பர். தலைவர் பச்சை நிறத்துண்டு வைத்திருப்பார். பளிச்சென்ற வண்ணத்தில் சட்டை, வண்ணக் கால் சட்டை, கழுத்துப்பட்டை, ஆபரணங்கள் அணிவது இன்று சாதாரணம்.

ஒயிலாட்டம் பற்றிய பழைமையான பாடல் ஒன்று:

‘ஆளோடு ஆளு உரசாமல் உங்கள்

ஆனிலே ஒரு முழம் தள்ளி நின்று

காலோடு காலு உரசாமல் - உங்கள்

கைப்பிடித் துணி தவறாமல்

மேலோடு மேலு உரசாமல் - உங்கள்

வேர்வை தண்ணி சிதறாமல்

ஆடவேண்டும்’

- முனைவர் அ.கா.பெருமாள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com