ஜப்பானிலிருந்து தவழ்ந்து வரும் வீணை இசை

ஜப்பானிலிருந்து தவழ்ந்து வரும் வீணை இசை

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.


1949ஆம் வருடம் ஜப்பான் நாட்டில் பிறந்த Matoba Yuko, டோக்கியோ பல்கலைகழகத்தில் இசையியல் பட்டபடிப்பை முடித்து, பேராசிரியர் Fumio Koizumi அவர்களிடம் இசை நுணுக்கங்களையும் கற்றார். இவர் டோக்கியோவில் உள்ள மகளிர் கல்லூரியில் உடற்கல்விப் பிரிவில் கெளரவ விரிவுரையாளராகப் பணிபுரிந்திருக்கிறார்.
அங்கு மேற்கத்திய பாரம்பரிய சங்கீதத்தையும் கற்பித்தார்.

1972இல் சென்னையில் இருக்கும் அரசினர் இசைக் கல்லூரியில் வீணை இசையைக் கற்ற இவர், இசை சார்ந்த சில புத்தகங்களை ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியிருக்கிறார்.


1.Musical Aspects of Baul music (Musical Voices of Asia 1980 by Japan Foundation)
2.Present Day use of Ragas in South Indian Classical Music (The Sounds of Nations 1986 Ongakunotomo publishers)
3.Indian Classical Music (Japanese Music - Asian Music 1989)
4.Rhythmic pattern arrangement in South Indian Classical Music improvisation (The Annual Report of Physical Education 2001)
5.Flexibility in Karnatic Music-A comparative analysis of Maha Ganapathim (Music and Society in South Asia-Perspective from Japan, National Museum of Ethnology 2008)

இசையைப் பற்றிய கோட்பாடுகளையும் ஆராய்ச்சி செய்திருக்கும் இவர், பாரம்பரியமிக்க நம் இசையை ஜப்பான் நாட்டில் பரப்பி வருகிறார் என்பது மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.

தம் இசைப் பயணத்தைப் பற்றி அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட செய்தி இதோ...

"பேராசிரியர் Fumio Koizumi அவர்கள் 1954இல் அடையார் அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்து கர்நாடக இசை பயின்று, பல்கலைக்கழகம் மூலமாக ஜப்பானில் இந்த மகத்தான இசை வடிவத்தை மக்களிடையே எடுத்துச் சென்றவர். முதன் முதலாக கர்நாடக இசை பற்றி அவர் மூலமாகத் தான் நான் தெரிந்து கொண்டேன். எனது 21ஆவது வயதில் Yoko Uehara அவர்களிடம் ஒரு வருடம் வீணை இசை பயின்றேன். அவர்  அடையார் இசைக் கல்லூரியில், வித்வான் திரு. கல்யாணகிருஷ்ண பாகவதரிடம் கற்றவர். அதன் பிறகு 1972 இல்  பேராசிரியர் Koizumi அவர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று அடையார் இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு விதூஷி கல்பகம் ஸ்வாமிநாதன் மற்றும் ராஜலக்ஷ்மி நாராயணன் ஆகியோரிடம் பயின்றேன். பிரத்யேகமாக வித்வான் திரு மொக்கபட்டி நாகேஸ்வர ராவ், அவருடைய புதல்வி விதூஷி மொக்கபட்டி சாரதா ஆகிய இருவரிடமிருந்து  வீணைப் பாடங்களைக் கற்றேன்.

வித்வான்கள் கோவிந்தராஜன்,  ஹரிஹர சர்மா மற்றும்  விக்கு விநாயகராம் ஆகியோரிடமிருந்து மிருதங்கம் வாசிக்கவும் பயிற்சி பெற்றேன். முறையாக  வாய்ப்பாட்டில் பயிற்சி மேற்கொள்ளாவிட்டாலும், பாடல்களின் அர்த்தத்தைக் கேட்டு அறிந்தேன்.

எனது 5ஆவது வயதில் பியானோ கருவியை இயக்குவதற்கு பயின்றது, பிற்காலத்தில் மகளிர் கல்லூரியில் மேற்கத்திய இசையை கற்றுக் தருவதற்குப்  பேருதவியாக இருந்தது.

40ஆவது வயதில் என்னுடைய முதல் வீணைக் கச்சேரி டோக்கியோ நகரத்தில் ஒரு புத்தர் கோவிலில் நடந்தது. அதைத் தொடர்ந்து ஜப்பான், கனடா, இந்தியாவில், சென்னை, மைசூர், கண்ணூர், உடுப்பி, பெங்களூர் போன்ற பெரிய நகரங்களிலும் கச்சேரி செய்துள்ளேன்.


ஜப்பானிய இசையைக் கர்நாடக இசையோடு ஒப்பீடு செய்தால், ஜப்பானிய இசை 5 ஸ்வரங்களில் அமைந்துள்ளது.

S R1 M P D1 S - மலஹரி ராகம் போன்றது. ஆனால் அவரோஹணத்தில் G இல்லை.
S R2 M P D2 S - சுத்த தந்யாசி ராகம் போன்றது.
S G1 M P N1 S
S G2 M P N2 S கம்பீர நாட்டை ராகம் போன்றது.
S R2 G2 P D2 S மோஹனம் ராகம் போன்றது.

ஜப்பானில் இந்தியப் பாரம்பரிய இசையை ரசிப்பவர்கள் உள்ளனர். சிதார், சரோட், தபலா, மிருதங்கம்,கடம், மோர்சிங் போன்ற வாத்தியக் கலைஞர்களும் உள்ளனர். ஹிந்துஸ்தானி இசை கர்நாடக இசையை விடப் பிரபலமாக உள்ளது.

கர்நாடக இசையைக் கேட்கும் ஜப்பானியர்கள், இந்த இசை மனதுக்கு அமைதியைத் தருவதாக உள்ளது என்றும், மீண்டும் கேட்க ஆவலாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஜப்பானில் நான் கச்சேரி தவிர விளக்கவுரை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறேன். இங்கு ஜப்பானியர்கள் பரத நாட்டியம், மோகினியாட்டம், குறியாட்டம், ஒடிஸி போன்ற நாட்டிய முறைகளைப் பயின்று, பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்திய தூதரகம் மற்றும் இந்தியப் பிரஜைகள் கலை நிகழ்ச்சிகள் நடப்பதற்கு உதவி செய்கிறார்கள்.

நான் இங்கு வீணை இசையைக் கற்றுத் தருகிறேன். எனது இரண்டு மகள்களும் வீணை,மிருதங்கப் பயிற்சி பெற்றுள்ளார்கள். எனது குடும்பத்தினருக்கும்  இசை வெகுவாகப் பிடித்துள்ளது.

இந்தியாவிற்கு வருடா வருடம் மார்கழி இசை விழாவை முன்னிட்டு  விஜயம் செய்கிறேன். சென்னையில் கச்சேரி செய்வதற்காக ஒரு வீணையை நிரந்தரமாக வைத்துள்ளேன். ஜப்பானில் வீணையைப் பழுது பாய்ப்பதற்கு வசதி கிடையாது. அதனால் வீணையைச் சரிசெய்வதற்கும்  கற்றுக் கொண்டேன். கர்நாடக இசையைப் புரிந்து கொள்ள எனக்குப் பல வருடங்கள் ஆகியது. விடா முயற்சியுடன் அதைக் கற்றுக் கொண்டது, இப்பொழுது அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.

தமக்குப் பிடித்த விஷயங்களைப் பட்டியலிடுகிறார் மடோபா யூகோ….

எனக்குப் பிடித்த ராகங்கள் வராளி, சுபபந்துவராளி, ரஞ்சனி,லலிதா. சென்னையில் கோவில்களுக்குச் செல்வது மிகவும் பிடிக்கும். கபாலீஸ்வரர், பத்மநாபர், அஷ்ட லக்ஷ்மி, ஹனுமான் போன்ற பல கோவில்களுக்குச் செல்வேன். புடவைக் கடை, நகைக் கடைகளுக்குச் செல்வதும் பிடித்தமான விஷயம்தான். பிடித்த உணவு அவியல், ரசம், மசாலா தோசை, ரசமலாய், குல்ஃபி ஐஸக்ரீம்", என்று   இனிப்பாக முடித்துக் கொண்டார் இந்த விதூஷி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com