காண்போரை வியக்க வைக்கும் கலம்காரி ஓவியங்கள்!

kalamkari painting
kalamkari painting
Published on

லம்காரி ஓவியங்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பழைமையான ஒரு ஓவிய மரபாகும். இக்கலையானது கிருஷ்ணா மாவட்டத்தில் மசூலிப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ள பேடானா எனுமிடத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் பல பகுதிகளிலும் இன்றும் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன.

‘கலம்’ என்ற பாரசீக வார்த்தைக்கு எழுதுகோல் என்று பொருள். ‘காரி’ என்ற உருது வார்த்தைக்கு கலைவடிவம் என்று பொருள். எழுதுகோலைப் பயன்படுத்தி வரையப்படும் இந்த ஓவியக்கலையானது இதனாலேயே ‘கலம்காரி’ என்று அழைக்கப்படுகிறது. பருத்தியாலான காடா துணியின் மீது கைகளால் வரையப்பட்டோ அல்லது அச்சினால் பதிக்கப்பட்டோ இந்த ஓவியங்கள் உருவாக்கப்படுகின்றன. துணியாலான இந்த ஓவியங்கள் திரைச்சீலைகளாகவும், வீடுகளில் சுவரில் மாட்ட அழகுக்காகவும், தேர்களில் கலைநயத்துக்காகக் கட்டப்படும் வண்ண வண்ண திரைச்சீலைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இக்கலை முகலாய மன்னர்கள், ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் ஆதரவு பெற்ற ஒரு கலை வடிவமாகும்.

கலம்காரி ஓவியக் கலையில் காளஹஸ்தி பாணி மற்றும் மசூலிப்பட்டனம் பாணி என இரண்டு வகைகள் உள்ளன. இதில் காளஹஸ்தி பாணியில் முழுக்க முழுக்க எழுதுகோல்களைப் பயன்படுத்தி கைகளாலேயே வரையப்படும் ஒரு பாணியாகும். இப்பாணியில் தேர்களில் கட்டப்படும் வண்ணத் திரைச்சீலைகள், வீடுகளை அழகுபடுத்த சுவரில் தொங்கும் ஓவியங்கள் முதலான ஓவியங்கள் வரையப்படுகின்றன. மசூலிப்பட்டனம் பாணியில் அச்சுகளைப் பயன்படுத்தி துணியின் மீது பதித்து இந்த ஓவியங்கள் உருவாக்கப்படுகின்றன.

தடிமனான பருத்தியினால் ஆன காடா வகைத் துணியானது ஒருவகை பிசின் மற்றும் பாலில் ஒரு மணி நேரம் ஊற வைக்கப்படுகிறது. இதன் காரணமாக கரடு முரடான காடா துணியானது வழவழப்புத் தன்மையும் பளபளப்புத் தன்மையும் கொண்டாதாக மாறுகிறது. பின்னர் இதன் மீது தாவர சாய வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரையப்படுகிறது. ஒவ்வொரு வண்ணமாக தனித்தனியே வரையப்பட்டு கண்கவர் பல வண்ண ஓவியமாக முழுமை அடைகிறது. இதன் பின்னர் இந்த வண்ண ஓவியத் துணியானது பலமுறை நீரில் அலசி எடுக்கப்படுகிறது. விதைகள், செடிகள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் வண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இயற்கை வண்ணங்கள் மட்டுமே இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓவியக்கலையில் ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க மொத்தம் இருபத்தி மூன்று படி நிலைகள் உள்ளன.

kalamkari painting
kalamkari painting

கலம்காரி ஓவியங்களில் பெரும்பாலும் இராமாயணம் மற்றும் மகாபாரதக் காட்சிகள் வரையப்படுகின்றன. மேலும் இசைக்கருவிகள், விலங்குகள், பூக்கள் முதலான காட்சிகளும் வித்தியாசமான முறையில் வரையப்படுகின்றன. மசூலிப்பட்டினம் கலம்காரி ஓவியங்களுக்கு 2008 - 2009ம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தினமும் குல்கந்து சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
kalamkari painting

தற்காலத்தில் கலம்காரி ஓவியங்களைக் கொண்டு உடைகளும் உருவாக்கப்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளிலும் கலம்காரி ஓவியங்கள் இடம்பெறுகின்றன. கலம்காரி ஓவியங்கள் காண்போரை கவர்ந்து இழுத்து பிரமிக்க வைக்கும், வியக்க வைக்கும் ஆற்றல் உடையன என்பதற்கு இத்தனை ஆண்டு காலமாக மக்கள் இவற்றை விரும்பி வாங்கி பயன்படுத்துவதே சான்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com