காலங்களைக் கடந்து நிற்கும் கற்றளி கோயில்கள்!

ellora kailasanathar temple
ellora kailasanathar templehttps://www.placestovisitmaharashtra.com
Published on

பொதுவாக, கோயில்கள் கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. மண் தளி, மரத்தளி, கற்றளி, குடைவரை கோயில்கள் என்று வகைப்படுத்தப்பட்டன.

மண் தளி: சுடு மண்ணால் அமைக்கப்பட்ட கோயில்கள் ‘மண் தளிகள்’ என அழைக்கப்பட்டன.

மரத்தளி: மரத்தினால் செதுக்கி அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இயற்கை சீற்றங்களால் விரைவில் பழுதடைந்தன.

செங்கல் கட்டடங்கள்: செங்கல் கட்டடங்களுக்கு மேல் சுண்ணாம்பினை பூசி அமைக்கப்பட்ட கோயில்கள்.

குடைவரை கோயில்கள்: செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவை இல்லாமல் அமைக்கப்பட்டவை.

கற்றளி: கற்றளி என்பது கற்களைக் கொண்டு ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அமைக்கப்பட்ட கோயில்கள். இம்முறையில் சுண்ணாம்புக் கலவை கூட பயன்படுத்தப்படுவதில்லை. இந்தக் கற்றளிகள் அமைப்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தொடங்கப்பட்டது. இதில் ஒற்றை கற்றளி என்பது நிலத்தில் இருக்கும் பெரிய பாறைகள் அல்லது குன்று ஒன்றை வெளிப்புறமாக மேலிருந்து கீழாக குடைந்து அமைக்கப்படும் கோயிலாகும்.

கற்றளி (கல்+தளி). தளி என்றால் கோயில். கற்றளி என்றால் கற்கோயில் எனப் பொருள். ஆரம்ப காலத்தில் பாறைகளை குகை போல் குடைந்து செய்யப்பட்ட குடைவரைக் கோயில்களே இருந்தன. பிறகுதான் ஒற்றைக் கற்றளி தொழில் நுட்பம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டில் ஒற்றைக் கற்றளிகளை முதலில் அமைத்தவர்கள் பல்லவர்கள்தான். மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ரத கோயில்கள் ஒற்றை கற்றளிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இதேபோல், ஒற்றைக் கற்றளி அமைப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குடைவரைக் கோவில் சிறப்புடையதாகும். ஒற்றை கற்றளிகள் செதுக்குவதற்கு சிரமமானவை. இதனால் ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னர், கட்டுமானக் கோயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஒற்றை கற்றளி கோயில்கள் எதுவும் கட்டப்படவில்லை. கற்றளி அமைப்பது பல்லவர்களின் கொடை. ஆனால், அதை விரிவாக செய்தவர்கள் பிற்கால சோழர்கள்தான்.

இதையும் படியுங்கள்:
உடலில் ஏற்படும் வீக்கங்களை முழுமையாகக் குறைக்க உதவும் 5 உணவுகள்!
ellora kailasanathar temple

பல்லவர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக பல புராதன சின்னங்களைக் கூறலாம். செஞ்சியை அடுத்த பனைமலையில் அமைந்துள்ள தாளகிரீஸ்வரர் திருக்கோயில் ஒரு புராதன கலை பொக்கிஷமாகும். பெரும்பாலும் குடைவரைக் கோயில்கள் மீதே கவனம் செலுத்தி வந்த பல்லவர்கள் மலை மீது கட்டிய முதல் கற்றளிக் கோயில் இது.

பனைமலைநாதர் எனப்படும் தாளகிரீஸ்வரர் கோயில் கற்களைக் கொண்டு எழுப்பிய கோயிலாகும். செஞ்சிக்கு சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கோயில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. பல்லவர்களின் பெருமை பேசும் கல்வெட்டுகள் இக்கோயிலை சுற்றிலும் காணப்படுகின்றன. இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கோயிலின் உட்புற சுவற்றில் மூலிகை வர்ணங்களால் வரையப்பட்ட அழகான ஓவியங்களின் மிச்சம் இன்னும் அழியாமல் இருக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் வெறும் உளிகளை வைத்துக் கொண்டே மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட இக்கோயில்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com