
‘மம ஸீக ஸெளபாக்ய புத்ர பெளத்ராதி ஸீஸ்தர
ஸ்ரீ ப்ராப்தே கரக் சதுர்த்தி வ்ரத மக: கரிஷ்மே!’
இதன் பொருள்: ‘எனது கணவர், குழந்தைகள், பேரக் குழந்தைகள் அனைவரும் நலமாக இருக்க இந்த கரக் சதுர்த்தி (கர்வா செளத்) உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கிறேன்’ என்பதாகும்.
இந்த விரதத்தை யார்? எப்போது கடைப்பிடிக்க வேண்டும்?: கிருஷ்ணபட்ச சதுர்த்தியும், சங்கடஹர சதுர்த்தியும் இணையும் நாளான. ‘கர்வா செளத்’ அன்று திருமணமான பெண்கள் பார்வதி தேவி (செளத்மாதா), சிவபெருமான், விநாயகர் ஆகியோரை வணங்கி வழிபட வேண்டும்.
வட இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைப்பிடிக்கும் ஒரு வருடாந்திர பண்டிகை இது. கர்வா செளத் தினம் அன்று, காலை சூரிய உதயம் முதல் மாலை நிலவு உதயம் ஆகும் வரை பெண்கள் உண்ணா நோன்பிருந்து கணவர் மற்றும் குடும்பத்தினருக்காக பார்வதி தேவியை வணங்கி மேற்கொள்ளும் வழிபாடு இது. ஐப்பசி மாத முழு நிலவு கழிந்த நான்காம் நாள் மேற்கொள்ளப்படும் வழிபாடு இதுவாகும். மாமியார் மருமகளுக்கும், பின்னர் மருமகள் மாமியாருக்கும் தாம்பூலத்துடன் பரிசுகளை அளிக்க, இப்பண்டிகை களைகட்ட ஆரம்பித்துவிடும்.
ஸார்கி (மாமியார் டூ மருமகள்): கரக் சதுர்த்திக்கு முதல் நாள் பெண்கள் தங்கள் கைகளுக்கு ‘மெஹந்தி’ போட்டுக்கொள்வார்கள். அதன் பிறகு ஒரு தட்டில் இனிப்பு வகைகள், குங்குமம், தேங்காய், மருதாணிப் பவுடர், புத்தாடை, பணம் அல்லது தங்கக்காசு வைத்து, அன்போடு மாமியார் மருமகளுக்கு அளிக்க, மருமகள் மாமியாரை வணங்கி, அத்தட்டினை வாங்கிக்கொள்ளும் நிகழ்வு, ‘ஸார்கி’ எனக் கூறப்படுகிறது.
கரக் சதுர்த்தி (காலை): சூரிய உதயத்திற்கு முன்பாக பெண்கள் எழுந்து ஸ்நானம் செய்து பார்வதி தேவி மற்றும் விநாயகரை வணங்கிய பின், தனித்தனியாக இரு தட்டுகளில் குங்குமம், மெஹந்தி பவுடர், தேங்காய் பத்தை, இனிப்பு, பழம், பணம் ஆகியவற்றை வைத்து இரு கடவுள்களுக்கும் நிவேதனமாக வைத்து வணங்குவார்கள். பின்னர் காலை உணவை சிறிது சாப்பிட்டு டீ அல்லது தண்ணீரை அருந்துவார்கள். காலை உணவில் சேமியா, ஃபெனியா போன்றவை சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. அன்று முழுவதும் நோன்பு இருந்து பகவானின் நாமாவளி பாடுவார்கள்.
கரக் சதுர்த்தி தினம் மாலை (மருமகள் டூ மாமியார்): சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு, தேவியை வணங்கி பூஜை செய்து, பின்னர் தட்டில் பழம், இனிப்பு, மெஹந்தி பவுடர், பணம் போன்றவற்றை வைத்து மருமகள் மாமியார் கைகளில் கொடுப்பார். திருமணமாகி முதல் வருடம் வரும் கரக் சதுர்த்திக்கு புடைவை அல்லது டிரெஸ் எடுத்து மருமகள் மாமியாருக்கு அளிக்க வேண்டும். இத்தகைய சடங்குகளுக்குப் பின்புதான் மாமியார் மருமகளை டீ அல்லது தண்ணீர் அருந்த அனுமதிக்கிறார்கள்!
கரக் சதுர்த்தி இரவு (கணவன் - மனைவி): இரவு வானில் சந்திரன் உதயமானதும், பெண்கள் சிறு மண் கலயத்தில் நீர் எடுத்து நிலவிற்கு அர்ப்பணித்த பிறகு, சல்லடை அல்லது மெல்லிய துணிகளின் வழியே நிலவைப் பார்த்துவிட்டுத்தான் கணவரைப் பார்க்க வேண்டும். கணவரின் கரங்களால் நீரை வாங்கிப் பருகி விரதம் முடித்து, இரவு உணவினை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். நிலவு வானில் உதயமாகி அதைக் காணும் வரை பெண்கள் பொறுமையாகக் காத்திருப்பார்கள். இந்த விசேஷம் நாளை (1.11.2023) அன்று கடைபிடிக்கப்படுகிறது.
திரைப்படங்களில் கர்வா செளத்!
தில்வாலே துனியா லே ஜாயேங்கே: கர்வா செளத் பண்டிகையே, அண்மைக் காலங்களில் வந்த இந்தித் திரைப்படங்களின் தாக்கத்தினால் திருமணமாகாத பெண்களும் தங்கள் காதலர்கள், கணவராக வரப் போகிறவர்கள் நலனுக்காக கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு உதாரணம்தான், ‘தில்வாலே துனியா லே ஜாயேங்கே’ இந்தப் படத்தின் கதாநாயகன் ஷாருக்கான், கதாநாயகி காஜோல். காதலனுக்காக கர்வா செளத் விரதம் கடைப்பிடிப்பாள் காதலி. மிகவும் பிரபலமான இந்தி திரைப்படம் இது.
கபி குஷி கபி கம்: கர்வா செளத், டான்ஸ் பார்ட்டி மூலமாகக் கொண்டாடப்படும். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஜெயபாதுரி, ஷாருக்கான், காஜோல் என பெரிய நடிகர், நடிகையர்கள் பட்டாளமே உண்டு.
இஷ்க விஷ்க்: ஷாகித் கபூரும் அமிர்தா சிங்கும் நடித்த இப்படத்தில் கர்வா செளத் பண்டிகை மூலம் காதல் வெளிப்படுத்தப்படுகிறது.
பாக்பான்: இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஹேமமாலினி தம்பதியினர் பிரிந்து வாழ நேரிடுகையில், கர்வா செளத் பண்டிகை வர, போனில் இவர்கள் பேசிக்கொள்ளும் காட்சி மிகவும் உருக்கமாக இருக்கும்.