நம் வாழ்வில் ஏற்படக்கூடிய தோல்விகளை எப்படிக் கையாள்வது என்பதன் பின்னணியில் உள்ள தத்துவம்தான் Kintsugi கலை.
பொதுவாக நாம் ஒரு தோல்வியைக் கண்டுவிட்டாலேபோதும் துவண்டு விடுவோம். அந்தத் தோல்வியை எப்படி சிறப்பான வெற்றிக்கு அடித்தளம் ஆக்குவது என்பதைப் பற்றி அந்த நிலையில் நாம் யோசிக்கவே மாட்டோம்.
ஒரு பொருள் உடைந்தால் நாம் என்ன செய்வோம்? அதனைத் தூக்கிப் போட்டு விடுவோம் அல்லது கம் வைத்து ஒட்டப் பார்ப்போம். ஆனால், அதுவும் சில நாட்களிலே உறுதித்தன்மை இல்லாமல் மீண்டும் உடைந்துவிடும். உடைந்த பொருளானாலும் சரி, வாழ்வில் தோல்வியானாலும் சரி மீண்டும் உடையாத அளவு அடுத்த முயற்சி இருக்க வேண்டும்.
ஜப்பானில் கிட்டத்தட்ட 1336 - 1576 ஆண்டுகளில் முரோமாச்சி என்ற ஒரு சகாப்தத்தின் மூன்றாவது தலைவர், ஆஷிகாகா யோஷிமிட்சு (1358-1408). இவர், தனக்குப் பிடித்த ஒரு தேநீர் கிண்ணத்தை உடைத்துவிட்டார். அதனை அவ்வளவு எளிதில் தூக்கிப்போட முடியாத அளவு அவருக்கு பிடித்தமான கிண்ணம் அது. ஆகையால், அந்தக் கிண்ணத்தை எப்படியாவது சரி செய்தே ஆக வேண்டும் என்று நாலாப்புறமும் யோசித்த அவர், இறுதியில் அதை சீனாவுக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் உலோக ஸ்டேபிள்ஸ் மூலம் உடைந்த கிண்ணத்தை ஓட்ட வைத்தனர். இந்த ஸ்டேபிள்ஸ் கொண்டு, மதிப்புமிக்க பொருட்களைப் பழுதுப்பார்க்கும் முறை, சீனாவிலும் ஐரோப்பாவிலும் பின்பற்றப்பட்ட பிரபலமான நுட்பக் கலையாகும்.
ஆனால், அதுவும் யோஷிமிட்சுக்கு திருப்தி வாய்ந்ததாக இல்லை. அதனால் தனது அரண்மனையில் இருந்த கைவினைக் கலைஞர்கள் மூலமாகவே உடைந்த பொருட்களைத் தனித்துவமான அழகான பொருட்களாக மாற்றும் ஒரு முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தார். அதன் மூலம்தான் உடைந்த கிண்ணங்களை ஒட்டவைக்க தங்கம் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தார். இந்த தங்கம் பூசிய கிண்ணம் உடைந்ததே தெரியாமல் ஒரு புது வடிவமைப்பைக் கொடுத்தது. பார்க்கவே கண்ணைப் பறிக்கும் அளவிற்கு அவ்வளவு அழகாக இருந்தது. உடைந்த பொருளை இதற்கு முன் இருந்ததைவிட மிக அழகாக மாற்றிய இந்தக் கலையின் பெயர்தான் Kintsugi.
உடைந்த துண்டுகளைத் தங்கம் மூலம் ஒட்ட வைத்து மீண்டும் அழகான பொருட்களாக மாற்றும் கலை Kintsugi. ஒருவேளை துண்டுகளில் ஏதோ ஒன்று காணவில்லை என்றால் அதற்கு பதிலாக தங்கம் மற்றும் அரக்கு பயன்படுத்துகிறார்கள்.
Kintsugi பற்றிய முக்கியத் தகவல்கள்:
1. மரம், கண்ணாடி, கல், கான்கிரீட் ஆகியவையால் செய்யப்பட்ட பொருட்கள் உடைந்தால் இக்கலையைப் பயன்படுத்தலாம்.
2. Kintsugiயால் செய்த பொருட்களை Dishwasherல் வைத்தால் உடையாது. ஆனால், தங்கம் சில நாட்களில் கருமைப் படிந்துவிடும்.
3. 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்தில் உள்ள உணவுகளைப் பயன்படுத்தலாம்.
4. அதனைக் கழுவி 2 மணி நேரம் கழித்த பின்னர்தான் அடுத்து பயன்படுத்த வேண்டும்.
5. இந்தக் கிண்ணங்களை ஓவனில் பயன்படுத்தக் கூடாது.
Kintsugi கலை மிகப் பழைமையான கலை. இப்போது எண்ணற்ற பொருட்கள் பல வடிவத்தில் வந்துவிட்டன. ஒருமுறை பயன்படுத்திவிட்டு போடும் டிஸ்போஸிபிள் பொருட்களும் வந்துவிட்டன. அதனால் Kintsugi கலையின் அவசியமும் குறைந்துக்கொண்டே வருகிறது. ஆனால், அதன் மதிப்பு மட்டும் இன்னும் குறையவேயில்லை. ஏனெனில், நமக்குப் பிடித்தப்பொருட்கள் அல்லது நமக்கு பிடித்தமான ஒருவர் கொடுத்த பொருள் உடைந்துவிட்டால் அதை இன்னும் அழகானதாக வைத்துக்கொள்ள Kintsugi கலை தேவைப்படுகிறது. அதனால் அதன் அவசியம் குறைந்தாலும் பாரம்பரியமிக்க அதனுடைய தத்துவமும் மரியாதையும் குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.