
இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த போது, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியை வழி நடத்திய முதல் இந்திய ஆட்சியாளர்களின் ஒருவராக கிட்டூர் ராணி சென்னம்மா கொண்டாடப்படுகிறார். கர்நாடகாவின் முக்கிய நாட்டுப்புற கதாநாயகியாகவும் இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய அடையாளமாகவும் சென்னம்மா தொடர்ந்து நினைவு கூறப்படுகிறார். ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்க்கு முன்பே ராணி சென்னம்மா ஆங்கிலேயர்களை துணிச்சலுடன் எதிர்த்து போராடினார். இந்திய சுதந்திரத்தின் அடையாளமாகவே மாறினார்.
கிட்டூரின் ராணி:
கிட்டூர் சென்னம்மா - இந்தியாவின் தற்போதைய கர்நாடகாவில் உள்ள ஒரு முன்னாள் சுதேச மாநிலமான கிட்டூரின் ராணி ஆவார். பிரிட்டிஷ் கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டம் ககாதி கிராமத்தில் பிறந்த சென்னம்மா சிறு வயதில் இருந்தே குதிரைச்சவாரி, வாள் சண்டை மற்றும் வில்வத்தை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். 15 வயதில் தேசாய் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா மல்ல சர்ஜாவை மணந்தார்.
சென்னம்மாவின் கணவர் புனேவில் பேஷ்வாக்களால் சிறையில் அடைக்கப்பட்டு இறந்தார். அவரது மூத்த மகன் சிவலிங்க சர்ஜா மாநிலத்தை ஆட்சி செய்தார். சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் தத்தெடுத்தார். 1824 ஆம் ஆண்டில் சிவலிங்க சர்ஜா நோய்வாய்ப்பட்டு இறந்தார். மாநிலத்தின் ஆட்சி ராணி சென்னம்மாவின் கைகளில் விழுந்தது. ராணி சென்னம்மா தனது தத்துமகன் சிவலிங்கப்பாவை அரியணையில் அமர்த்தினார்.
அதிகாரப்பூர்வமற்ற அநியாய சட்டம்:
1820 களில் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவ தொடங்கியது. படிப்படியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றிக் கட்டுப்படுத்தியது. அதன் அதிகாரப்பூர்வமற்ற ஒரு விதி என்னவென்றால் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சுதேச அரசுக்கு ஆண் வாரிசுகள் இல்லை என்றால் அந்தப் பகுதி தானாகவே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்படும். கிட்டூர் கலெக்டர் ஜான் தாக்கரேவும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனமும் லிங்கப்பாவின் தத்தெடுப்பை அங்கீகரிக்க மறுத்து, தத்தெடுக்கப்பட்ட வாரிசுகளுக்கு ஆட்சியில் எந்த உரிமையும் இல்லை என்று அறிவித்தனர். அவர்கள் சிவலிங்கப்பாவை கிட்டூரிலிருந்து வெளியேற உத்தரவிட்டனர். ஆனால் ராணி சென்னம்மா அவர்களுக்கு அடிபணியவில்லை.
ராணி சென்னம்மாவின் வீரம்:
சென்னம்மா தனது படைகளை பலப்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிரான போருக்கு தயாரானார். 20 ஆயிரத்து 797 வீரர்கள் 437 துப்பாக்கிகள் மற்றும் குதிரைப்படை மற்றும் பீரங்குகளைக் கொண்ட பிரிட்டிஷ் படைகள் கிட்டூரைத் தாக்கின. ஆனாலும் ராணி சென்னம்மா அவர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார். அக்டோபர் 22 1824 ஆம் ஆண்டு நடந்த முதல் போரில் ஜான் தாக்கரே கொல்லப்பட்டார். இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் பிடிபட்டனர்.
ஆங்கிலேயர்கள் கூடுதல் படைகளை அனுப்பினர். ஆனாலும் மனம் தளராத ராணி சென்னம்மா, சங்கொலி ராய் அண்ணா மற்றும் குரு சித்தப்பா போன்ற தனது வீரர்களுடன் சேர்ந்து போர்க்களத்தில் ஆங்கிலேயர்களுடன் கடுமையாக போரிட்டார். இந்தப் போரில் சோலாப்பூர் துணை ஆட்சியராக இருந்த தாமஸ் மன்றோ கொல்லப்பட்டார். பிரிட்டிஷ் ராணுவம், துரோகிகளின் உதவியுடன் ஒரு ரகசிய பாதை வழியாக ஊடுருவியது. கடுமையான போருக்குப் பிறகு சென்னம்மா பிடிபட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 6 ஆண்டுகள் சிறையில் வாடிய ராணி சென்னம்மா இறந்தார்.
ராணி சென்னம்மாவின் நினைவுச் சின்னங்கள்:
கிட்டூர் ராணி சென்னம்மாவின் பல நினைவுச் சின்னங்களும் சிலைகளும் கர்நாடகா முழுவதும் உள்ளன. 2007 ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் ராணி சென்னம்மாவின் சிலை திறக்கப்பட்டது. பெல்காமில் உள்ள பல்கலைக்கழகம் அவரது பெயரால் ராணி சென்னம்மா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது. அவரது வாழ்க்கையைப் பற்றி கிட்டுர் செல்லம்மா என்ற வரலாற்று நாடகத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. பெங்களூர் மற்றும் கோலாப்பூரை இணைக்கும் ஒரு ரயிலின் பெயர் ராணி சென்னம்மா எக்ஸ்பிரஸ். கர்நாடகாவில் கிராமத்துத் தேவதையாக இன்றும் பூஜிக்கப்படுகிறார் ராணி சென்னம்மா.