இந்தியாவில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில், பழமையும் பெருமையும் மிக்கது ஒடிசாவின் கோனார்க் சூரிய கோவிலாகும். ஒடிசாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோவில், பாரம்பரியமும், கலையும், ஆன்மிகமும் நிறைந்த ஓர் அதிசயத் தளமாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்புகள் மற்றும் அழகிய வடிவமைப்புகள் பற்றி மேலும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.
சூரியனை வணங்கும் சிறப்பு தலமாக இக்கோவில் புனிதம் பெற்றுள்ளது.'கோனா' என்றால் முனை. 'ஆர்க்' என்றால் சூரியன். இந்த பெயரே இந்த கோவிலின் சிறப்பையும், பெருமையையும் விளக்குகிறது.
தேரின் வடிவில் கட்டப்பட்ட கோவில்
கோனார்க் கோவில் ஒரு பிரம்மாண்டமான தேரை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட இதன் முக்கிய பகுதி மற்றும் கருங்கற்களால் சிற்பங்களுடன் அமைக்கப்பட்ட தேர் வடிவ அமைப்பு, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இந்த தேரில் 12 பெரிய சக்கரங்களும் 7 குதிரைகளும் காணப்படுகின்றன. இவை மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிநேரங்கள் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் காட்சியளிக்கின்றன. மனித வாழ்க்கையின் ஓட்டத்தை மிக அழகாக சிற்பமாக்கியுள்ள சிறப்பம்சங்கள் இதில் காணக்கூடியவை.
வரலாறும் பக்தியும் கலந்து விளங்கும் கோவில்
இந்த கோவில் 13-ம் நூற்றாண்டில் நரசிம்ம தேவ மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடற்கரை அருகே அமைந்திருப்பதால், கடல் சீற்றத்தை தடுக்கும் வகையில் சவுக்கு மற்றும் பாக்கு மரங்கள் கோவிலின் சுற்றுவட்டாரத்தில் நட்டுள்ளார்கள். இந்த மரங்கள், கடல் பயணிகளுக்கு மாற்று கலங்கரை விளக்காக செயல்பட்டன.
இங்கு இன்றும் காலை சூரியன் உதிக்கும் போது, சூரிய ஒளி முதலில் கோவிலின் முதன்மை சக்கரத்தில் பிரதிபலித்த பிறகே நுழைவாயிலில் தாக்குகிறது. இது கோவிலின் கட்டிடக் கலை நுண்ணறிவுக்கு ஓர் அரிய சாட்சியாக திகழ்கிறது.
புராணக் கதைகளில், இங்கே ஒரு அசுரனை அக்னி தேவன் வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது. அந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையிலும் இந்த கோவில் சிறப்புற அமைந்துள்ளது.
இங்கு வழிபடப்படும் இறைவனுக்கு பானு எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. பானு என்றால் சூரியன். சூரியன் இல்லாமல் உலகம் இயங்காது எனும் விஞ்ஞானக் கருத்தையும், சூரிய பக்தியின் ஆன்மிக உணர்வையும் இங்கே காணலாம்.
மேலும், தஞ்சை பெரிய கோவில் போலவே முழுக்கற்களால் தேர் வடிவில் கட்டப்பட்டுள்ள கோனார்க் கோவில், இன்றைய கட்டடக் கலைஞர்களையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பொக்கிஷமான இடம் ஆகும்.
இப்படி, கடற்கரையின் காட்சி, கலையின் நயம், ஆன்மிகத்தின் ஆழம் ஆகிய அனைத்தும் இணைந்த இந்த கோவிலை நாமும் வாழ்க்கையில் ஒருமுறை சென்று தவறாமல் காண வேண்டும்.