- மணிமேகலை
இசை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. பொதுவாக ஒரு வேலை செய்யும்போது அதில் ஆர்வத்தை உண்டு பண்ணக்கூடிய சக்தி இசைக்கு உள்ளது. தனியே பயணம் செய்யும்போது சிலருக்கு வழித்துணையாய் வருவதும் இசையே. இதெல்லாம் தெரிந்ததுதானே. என்று நினைப்பது உசிதம்தான். இசையை அதன் ராகத்தை, தினமும் துதிபாடும் கிராமம் பற்றித் தெரியுமா..?
இந்தியாவின் மேகாலயாவில் உள்ள கோங்தாங் கிராமம்தான் அது. இந்தக் கிராமத்தில் மொத்தம் 600 நபர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். அங்கு பெயர்கள் சொல்லி யாரும் யாரையும் அழைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயருக்குப் பதில் ட்யூன் இருக்கும் அதைச் சொல்லியே அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது அங்கு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அவர்களின் பாரம்பரியமாக கருதப்படுகிறது.
இந்தக் கிராமத்தில் குழந்தை பிறந்ததும் முதலில் அந்தக் குழந்தையின் தாயேதான் விருப்பட்ட ட்யூன் மூலம் அழைக்கவேண்டும். அதுவே அந்தக் குழந்தையின் பெயராகிறது. இங்கு உள்ள அனைவருக்குமே தனித்துவமான ட்யூன்களே பெயர்களாக உள்ளன. ஒருமுறை வைக்கப்பட்ட ட்யூன் அங்குள்ள யாருக்கும் திரும்ப பெயராக வைக்கப்படாது. மேலும், அனைவராலும் எளிதாக அழைக்கக் கூடிய ட்யூனே பெயராக வைக்கப்படுகிறது. இது, அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதற்கு உதவுகிறது. காட்டில் தூரத்தில் உள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறது. இந்தக் கிராமத்தை விசில் கிராமம் அல்லது சிங்கிங் (Singing) கிராமம் என்றும் அழைக்கிறார்கள்.
இங்கு வசித்து வரும் மக்களுக்கு இரண்டு விதமான பெயர்கள் (ட்யூன்கள்) உண்டு. நீளமான மற்றும் சிறிய பெயர்கள். பிறக்கும்போது நீளமான பெயர் வைக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்தப் பெயரை வீட்டில் கூப்பிடும்போது அழைப்பார்கள். இந்த பாரம்பரிய முறைக்கு ஜிங்ர்வாய் (Jingrwai labei ) லாபேய் இவ்பேயின் அதாவது குலத்தின் முதல் பெண்களின் பாடல்(Song of the clan's first women) என்று பெயர்.
மேலும், இந்த கோங்தாங் கிராமம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மற்றும் இனிமையான பறவைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் ஒலிகள், இவர்களின் பெயர்கள் போல மனதை இனிறமைப் படுத்த வல்லது.