தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, ஆர்.சூடாமணி, சுஜாதா, கோமல் சுவாமிநாதன் என்னும் ஐந்து எழுத்து ஜாம்பவான்களின் ஐந்து சிறுகதைகளைத் தேர்வு செய்து, அவை ஒவ்வொன்றையும் தனித்தனி நாடகங்களாக, இரண்டரை மணி நேரத்தில் ரசிகர்களின் கண்ணுக்கும், அறிவுக்கும் விருந்தாக தாரிணி கோமல் இயக்கியிருக்கும் மேடைப் பஞ்சாமிர்தம்தான் ‘படைப்பாளிகளைக் கொண்டாடுவோம்.’
ஒவ்வொரு நாடக ஆரம்பத்தின்போதும் அந்தந்த எழுத்தாளரைப் பற்றிய செய்திகளையும் சாதனைகளையும் டிஜிடல் திரையில் பின்னணிக் குரலுடன் வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு.
தி.ஜானகிராமனின் ‘அக்பர் சாஸ்திரி’ ஒரு ரயில் பயணத்தில் தொடங்குகிறது. பயணம் செய்யும் அக்பர் சாஸ்திரி என்ற அபூர்வ மனிதரின் இயற்கை மருத்துவக் குறிப்புகள், கூட பயணிக்கும் ஒருவருக்கு வியப்பைத் தர, சோர்வாக தூங்கிக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு மருந்து கேட்டு எழுதிக்கொள்கிறார். அவரது மகன் சிறுவனுக்கும் உடல் தேற வழிகள் சொல்கிறார் சாஸ்திரி. அவருக்கு ஏன் அந்தப் பெயர்? இறுதியில் அவருக்கு என்ன நேர்கிறது?
சாஸ்திரியாக நடிக்கும் சாந்தாராம் மிக இயல்பான நடிப்பு, கலகல பேச்சு.
மற்ற பயணிகளாக வரும் ஜெயசூர்யா, தமிழ்ச் செல்வன், (தூங்கும் மனைவியாக) அனுராதா அனைவருமே சிறப்பு.
ஆர். சூடாமணியின் ‘பிம்பம்’ என்ற கதையின் நாடகமாக்கம், பெண்களின் நுட்பமான மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. தன்னை ஜான்ஸி ராணி, ஜோன் ஆஃப் ஆர்க், சித்தூர் ராணி பத்மினி போன்ற வீரப்பெண்களாக கற்பனை செய்துகொண்டு சாதிக்கத் துடிக்கும் இளம் பெண் மீனாட்சியின் தாய், கணவனின் அதட்டல் அதிகாரத்துக்கு அடங்கிப் போகும் இல்லத்தரசி. மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கிறார் அப்பா. நல்ல வரன். மனம் மயங்க, மகிழ்ச்சி அடைகிறாள் மீனாட்சி.
மாப்பிள்ளை வீட்டில் வங்கி வேலையைவிடச் சொல்கிறார்கள். பின்னர் மூக்குக் குத்திக்கொள்ளச் சொல்கிறார்கள். இரண்டுக்குமே சம்மதிக்கிறது மீனாட்சியின் மனது.
மூக்குத்தி போட்டால் எப்படி இருக்கும் என்று ஆசையோடு கண்ணாடியைப் பார்த்தால் அங்கே தெரியும் பிம்பம் எது?
மீனாட்சியாக கிருத்திகா சுர்ஜித், அப்பாவுக்கு அடங்கும் மனைவியாக அனுராதா, அதிகாரக் கணவராக சசிகுமார் மூவரும் பல குடும்பங்களில் நடப்பதை கண்முன் கொண்டு வருகிறார்கள்.
சுஜாதாவின் ‘காலை எழுந்தவுடன் ஒரு கொலை’ நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கலந்த சுஜாதாவின் பாணியிலிருந்து சற்றும் விலகாமல் கதாபாத்திரங் களுக்கு உயிர் கொடுக்கிறார்கள் அனைவரும்.
காலையில் வாக்கிங் செல்லும்போது, பார்க்கில் ஒரு பிணத்தைப் பார்க்கிறான் அவன்.
பயந்து போனவன், பின்னர் மனைவி சொன்னபடி, ஒரு நேர்மையான குடிமகனாக, காவல் நிலையத்திற்குச் சென்று உடல் கிடப்பதைத் தெரிவிக்கிறான்.
வேறு காவல் நிலையம் செல்லும்படி சொல்கிறார் அந்த இன்ஸ்பெக்டர். இதற்குள் அவன் வீடு தேடி போலீஸ் இன்ஸ்பெக்டர், அவனது வக்கீல் அனுப்பியதாக வருகிறார். பிறகு என்ன ஆகிறது?
சகஸ்ரநாமம், கிருத்திகா, ஆனந்த்ராம், ஜெயசூர்யா, கண்ணன்ருத்ரபதி, தமிழ்செல்வன், தங்கபாண்டியன் ஆகியோர் நடிப்பில் தொய்வில்லாத நாடகம்.
கோமல் சுவாமிநாதன் எழுதிய ‘மனித உறவுகள்’. தனியாக பெரிய வீட்டில் வசிக்கும் தம்பதி. கிராமத்தில் இருக்கும் தன் பெற்றோரைப் பார்க்க மாதத்தில் நான்கு நாள் மட்டும் லீவு தேவை என்னும் நிபந்தனையோடு வீட்டு வேலைக்கென வந்திருப்பவன் முருகன்,
அமெரிக்காவுக்கு படிக்கப்போன மகன், அங்கேயே ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளும் பிறந்த பின்னர் ஏழு வருடங்களுக்குப் பிறகு பெற்றோரைப் பார்க்க வரப்போவதாக போன் செய்கிறான்.
உற்சாகத்தில் அம்மாவும் அப்பாவும் வீட்டையே நவீனமாக்கி, நிறைய இனிப்பு வகைகளுடன், மகன், மருமகள், பேரப் பிள்ளைகளை வரவேற்கத் தயாராகிறார்கள்.
நடந்தது என்ன?
பாசத்துடன் பிள்ளையை வரவேற்கும் உற்சாக அம்மாவாகவும், பின்னர் ஏமாற்றம் தாளாமல் வெடிக்கும் அம்மாவாகவும் பிரமாதமாக நடிக்கிறார் தாரிணி கோமல்.
ஈடு கொடுத்து சிறப்பாக நடிக்கிறார்கள் சசிகுமார், ஆனந்த் ராம், கண்ணன் ருத்ரபதி மூவரும்.
இந்திரா பார்த்தசாரதியின் ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ ஒரு கிராமத்தில் நடக்க விருக்கும் மரணம், இப்பவோ அப்பவோ என்றிருக்கும் பெரியவர். அவரது இறுதி மூச்சுக்காக வந்திருக்கும் உறவினர்களின் அழுகை, சோகம்.
நம் நாட்டின் ஈமச்சடங்குகளைப் படம் பிடித்து அமெரிக்க சேனலில் ஒளிபரப்ப வரும் நம்ம ஊர் டைரக்டர், கேமரா மேன், மூன்று மாப்பிள்ளைகள், ஊர் முக்கியஸ்தர் என்று எல்லோருக்கும் நிறையப் பணம் கொடுத்து படமாக்க சம்மதம் பெறுகிறான்.
சாகக் கிடக்கும் அண்ணனைப் பார்க்க வரும் தங்கை (அத்தை) பெரியவரது மகள் இருவரின் பிலாக்கணம், ஒப்பாரி, இவற்றை பல கோணங்களில் படமெடுக்கிறான் டைரக்டர்.
அப்புறம் மற்றவற்றைப் படமெடுக்க முடிந்ததா?
ஐந்து நாடகங்களையும் சிறிதும் தொய்வில்லாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் தாரிணி கோமல்.
வாழ்த்துகள் தாரிணி...