மடிக்கொடியும் பத்துப்பசையும்!

Madikodiyum Pathupasaiyum
Madikodiyum Pathupasaiyumhttps://www.tamilxp.com

லைப்பே சற்று யோசிக்க வைக்கிறதா? இன்றைய தலைமுறையினருக்கு புரியாத புதிர் இவை. புரிந்த, வளர்ந்த தலைமுறையினருக்கும் மறந்துபோன விஷயங்கள். கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்ளலாமே!

மடிக்கொடி (ஆசாரமானது): கிராம வாழ்க்கையில், எங்கள் பாட்டி, அம்மா ஆகியோர்கள் குளித்த பிறகு, தங்களது ஈரத்துணிகளைப் பிழிந்து, மடியாக அதாவது மற்றவர்களின் துணிகளுடன் கலக்காமல் அதற்கென மேலே கட்டியிருக்கும் கம்பு அல்லது கயிற்றுக்கொடியில் பெரிய மூங்கில் குச்சியின் உதவிகொண்டு உலரப் போடுவது வழக்கம்.

மறுநாள், கொடியில் உலர்ந்திருக்கும் துணிகளை ஒவ்வொன்றாக மெதுவாக எடுத்து ஒரு பெரிய கூடை, வாளி போன்றவற்றில் போட்டு எடுத்துக்கொண்டு குளிக்கச் செல்வார்கள். கொடியிலிருந்து எடுக்கையில், தப்பித் தவறி அவர்கள் மேலே விழுந்துவிட்டால் போச்சு. மீண்டும் அதை நனைத்து உலரப் போட வேண்டும்.

வீட்டிலுள்ள மூத்த பெண்மணிகள் மடியாக ஆடை அணிந்து, பூஜை செய்து, சமையலை முடிக்கும் வரை, அவர்கள் மீது மற்றவர்கள் பட்டுவிடக் கூடாது. பட்டால் ஒரே அர்ச்சனைதான். ‘கிருஷ்ணா! ராமா! கோவிந்தா!’ எனக் கூறியவாறே தலையில் நீர் தெளித்துக்கொள்வார்கள்.

மடிக்கொடியில், நீளமான கம்பை வைத்து பாவாடை, சட்டை போன்றவற்றை உலரப்போடுவது சுலபம். ஆனால், புடவை அதிலும் ஒன்பது - பத்து கெஜம் புடவையை பிரித்து கொடியில் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். கீழே விழுந்துவிட்டால் போச்சு. மீண்டும் நனைத்துப் பிழிந்து கொடியில் போட வேண்டும். கைகள் பெரிதாக வலிக்கும்.

எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு சகோதரிகள். இரு பெரிய அக்காமார்களும் இதைப் பழகிக்கொண்டு அம்மா, பாட்டிக்கு உதவுவார்கள். ஆனால், அவர்களும் மடியாக உலர்த்தியதை எடுத்து அணிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், தங்களது ஆடைகள் மீது பட்டுக்கொள்ளாமல் உலரப் போட வேண்டும். இது ஒரு பெரிய டாஸ்க் (Task) எனலாம்.

பத்துப்பசை: கிராமங்களில் பத்துப்பசை பார்ப்பவர்கள் அநேகம். சாப்பிடுகையில் பெரியவர்கள் மற்றவர்களுக்குப் பரிமாறிய பிறகுதான் சாப்பிடுவார்கள். சாப்பிடுகையில் இடக்கை உதவிகொண்டு பரிமாறிக்கொள்வது கூடாது என பெரிய கட்டளையே உண்டு. ஒரு சமயம், அப்படி விட்டுக்கொள்ள நேர்ந்தால், பக்கத்தில் வைத்திருக்கும் தண்ணீர் தம்ளரை லேசாக இடக்கையால் சரித்து நனைத்துக்கொள்வது மிகவும் அவசியம். (எங்கள் வீட்டில் இன்றும் தொடரும் விஷயம்.)

ரசஞ்சாதத்தை சத்தமாக உறிஞ்சி சாப்பிட்டால் தலையில் ஒரு குட்டு விழும். சத்தமில்லாமல் சாப்பிடுவதோடு, பேசவும் கூடாது. காரணம் பேசுகையில் வாயில் போட்டிருந்த பருக்கைகள் வெளியே தெறித்துவிட்டால் அது எச்சிலாகும். பக்கத்தில் இருப்பவர்கள் அல்லது சாம்பார், கறி மீது விழுந்துவிட்டால் திட்டோ திட்டுதான்.

எச்சில் இடுதல்: கீழே அமர்ந்து சாப்பிட்டு எழுந்த பின்பு சிறிது சாணம் - தண்ணீர் கலந்து அந்த இடத்தை மெழுகி, பின் துணியால் துடைக்க வேண்டும். விஞ்ஞான ரீதியாக காரணங்கள் இதற்கெல்லாம்  இருக்குமென்றாலும், அவர்களுக்கு சரியாக விளக்கத் தெரியாது என்பது ஒருபுறமிருந்தாலும், மற்ற வேலைப்பளு காரணம், விபரமாக கூறுவதை தவிர்த்து விடுவார்கள்.

காலம் மாறிப்போக, ஸ்ராத்தம், குறிப்பிட்ட பூஜை போன்ற நிகழ்வுகளில் மட்டுமே இந்த மடி, ஆசாரம் பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டுமே.

இதன் பின்னணி: பல வீடுகளில் மடியாக உலர்த்த கொடி கிடையாது. பத்துப்பசை பார்க்க இயலாத சூழ்நிலை. நகர வாழ்வில் மிகவும் சங்கடம்.

* சாப்பாட்டுத் தட்டை, தங்களது மடிமீது வைத்துக்கொண்டு, சோபா அல்லது நாற்காலியில் அமர்ந்து டீ.வி பார்த்தவண்ணம் எத்தனையோ பேர்கள் (சிறிசு முதல் பெரிசு வரை) சாப்பிடுகின்றனர். டைனிங் டேபிள் இருப்பவர்கள் வீட்டிலும் இதே மாதிரிதான் நடக்கிறது. டீவி இல்லாவிட்டால் மொபைல்.

* டீவியில் வரும் காமெடியைப் பார்த்து இவர்கள் சிரிக்க, வாயிலிருக்கும் உணவு ஆடைகள் மீது சிந்தும். அதைப் பொறுக்கியெடுத்து மீண்டும் வாயினுள் போட வேண்டியதுதான். ஆடையை பிறகு தண்ணீரால் துடைத்துக்கொள்ளக்கூட சோம்பல்.

* உணவுத் தட்டை கீழே வைத்துச் சாப்பிடாத பட்சத்தில் எச்சில் இட வாய்ப்பே கிடையாது. ஒருவேளை கீழே அமர்ந்து சாப்பிட்டால்கூட, அந்த இடத்தை தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தப்படுவதில்லை. காரணம் கேட்டால், ‘கீழே ஒன்றும் சிந்தாமல்தானே இருக்கிறது. எதற்காக எச்சில் இட வேண்டும்?’ என்கிற பதில் வருகிறது.

இதையும் படியுங்கள்:
அன்றாட மருத்துவத்தில் பனங்கற்கண்டின் பயன்கள்!
Madikodiyum Pathupasaiyum

* எப்போதாவது, கிராமத்துப் பக்கம் செல்கையில், யார் வீட்டிலாவது இவற்றை கடைப்பிடிப்பதைக் கண்டால், இளைய சமுதாயம் ‘வாவ்’ எனக் கூறி, மொபைலில் போட்டோ எடுப்பார்கள். பின்னர், ‘வேலை கெட்ட வேலை’ என கமெண்டும் அடிப்பார்கள்.

* காரண, காரியமின்றி நமது முன்னோர்கள் எதையும் சொல்லவில்லை. இத்தகைய பழக்க வழக்கங்களை இன்றும் சிலர் கடைப்பிடித்து வருகின்றனர் என்பது நிதர்சனம். இது மட்டுமல்ல, எத்தனையோ பல நல்ல செயல்களைப் பிறர் மேற்கொள்கையில், அது குறித்து சரியாக புரிந்துகொள்ளாமல் கமெண்ட் அடிப்பது தவறு. தேவையற்றது. நம்மால் இயலாவிட்டாலும், செய்கிறவர்களைத் தடுக்க வேண்டாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com