நாளை நடைபெறும் மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருகல்யாண வைபவச் சிறப்பு!

Madurai Meenakshi - Sundareswarar Thirukalyana Vaibhava Sirappu
Madurai Meenakshi - Sundareswarar Thirukalyana Vaibhava Sirappuhttps://gajagari.blogspot.com

லகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை 21ம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து திங்கட்கிழமை திருத்தேர் உத்ஸவமும், செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகை எழுந்தருளலும் நடைபெற உள்ளன.

மதுரைக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மீனாட்சி அரசாளும் ஊர் என்பதால் அதன் பெருமையை உலகமே அறியும். பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரம் மதுரை. இங்கே தினம் தினம் திருவிழாதான் என்றாலும், சித்திரை முதல் பங்குனி வரைக்கும் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் நகர்வலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆவணி மூல திருவிழாவின்போது மதுரையின் அரசாட்சி சிவபெருமானிடம் ஒப்படைக்கப்படும். ஆவணி முதல் சித்திரை வரை மதுரையை அரசாள்வார் சிவன். சித்திரையில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அது முதல் மதுரையில் மீனாட்சியின் அரசாட்சிதான்.

சித்திரை திருவிழா கொடியேறிய நாளிலிருந்து தினம் தினம் மதுரை வீதிகளில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அம்மையப்பனுக்கு திருக்கல்யாணம் என்றால் சும்மாவா? ஊரே விழாக்கோலம்தான். முப்பத்து முக்கோடி தேவர்களும் பூத கணங்களும் மதுரைக்கு புறப்பட்டு வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்பார்கள். பார்வதி தேவி, மீனாட்சியாக அவதரித்தது, சிவபெருமான் மீனாட்சியை சந்தித்தது, இவர்களின் திருக்கல்யாணம் நடைபெற்றது என எல்லாமே சுவாரஸ்யம்தான்.

மன்னன் மலையத்துவச பாண்டியன் மற்றும் அவன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் பிள்ளை பேறு வேண்டி யாகம் செய்தனர். மூன்று தனங்களை உடைய ஒரு பெண் குழந்தையாக தீயில் இருந்து தோன்றினாள். அக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று இறைவன் அருள்வாக்கு கேட்டது. குழந்தைக்கு தடாதகை என பெயரிட்டு வளர்த்தார்கள். மலையத்துவச பாண்டியன் மறைவுக்குப் பின் தடாதகை ஆட்சி பொறுப்பேற்று நான்கு திசைகளிலும் திக் விஜயம் செய்து வந்தாள். திருக்கயிலாயத்தை அடைந்து சிவ கணங்களுடன் போரிட்டாள். பின் சிவபெருமானை கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. சிவபெருமானே தனது கணவன் என்பதை அறிந்து நாணம் கொண்டாள் தடாதகை. மதுரைக்கு வந்த சிவபெருமான் சுந்தரேஸ்வரராக மாறி மீனாட்சியை திருமணம் புரிந்தார். இந்தப் புராண நிகழ்வுகள் அனைத்தும் திருவிளையாடல் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி கல்யாணம் நாளை ஏப்ரல் 21 காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. திருமண நாள் அன்று அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும்  வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இருவரும் திருக்கோயிலின் மண்டபத்தில் எழுந்தருளி கன்னி ஊஞ்சலாடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அங்கேதான் தேவாதி தேவர்கள் ஒன்று கூடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தை பேசி முடிப்பதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
உலகக் கலாசாரத்தின் நினைவுச்சின்னமாய் விளங்கும் தஞ்சை சரசுவதி மகால் நூலகம்!
Madurai Meenakshi - Sundareswarar Thirukalyana Vaibhava Sirappu

திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் புதுப்பட்டு உடுத்தி அழகிய ஆபரணங்கள் பூண்டு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்துக்கு எழுந்தருளுவார்கள். அங்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கும் திருமண விழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக்காட்டிய பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள்  இசைக்க மீனாட்சி அம்மன் திருக்கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்க மீனாட்சி திருக்கல்யாணம் நிறைவு பெறும்.

இந்த மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மற்றும் மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மதுரை எழுந்தருளுவர். மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெறும் வேளையில் பெண்கள் தங்களது தாலிச்சரடு மாற்றிக்கொண்டு வேண்டிக் கொள்வார்கள். இந்த நாளில் புது தாலிக்கயிறு மாற்றிக்கொண்டால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை. சுமங்கலி பெண்களுக்கு புது தாலிக் கயிறுகளை கோயில் நிர்வாகமே வழங்குகிறது.

திருக்கல்யாணம் முடிந்த பின் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். இந்தத் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்களுக்கு நிறைவான வாழ்க்கையும், திருமணம் தடைபடுபவர்களுக்கு நல்ல வரனும் அமையும் என்பது ஐதீகம்.

திருமணம் நடைபெற்று முடிந்ததும் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்படும். மதுரை மாநகரமே கோலாகலமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் தங்களது வீட்டுப் பெண் மீனாட்சிக்கு திருமண நடந்ததாக  சந்தோஷமாக வலம் வருவார்கள். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நாமும் தரிசித்து நல்வாழ்வு பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com